காதல் ஹார்மோன் குழுவாக பாடுவதால் சுரக்கிறதா?

புதன், 10 ஜூலை 2019 (21:34 IST)
பாடுவது நமது உற்சாகத்தை அதிகரிக்கிறது. ஆனால் நமது உடல் ஆரோக்கியத்திலும் அது பயன் தருகிறது என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. நுரையீரல் கோளாறு உள்ளவர்களுக்கு சுவாசத்தை மேம்படுத்தவும், நினைவுத்திறன் குறைபாடு உள்ளவர்கள் அதைக் கையாளவும் இது உதவுகிறது.
கடந்த இரு தசாப்தங்களாக உளவியல், உயிரியல் மற்றும் நடத்தை செயல்பாடுகளுக்கும் பாடும் பழக்கத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் உள்ள தொடர்பு குறித்து அறிவதற்கு பல ஆராய்ச்சியாளர்கள் முயற்சிகள் செய்து வருகின்றனர்.
 
பாடும் போது உடலில் பல மாற்றங்கள் நடக்கின்றன என்று லண்டன் பல்கலைக்கழக கல்லூரி பேராசிரியர் டெய்சி பான்கோர்ட் கூறியுள்ளார் : ``கார்ட்டிசோல் போன்ற மன அழுத்தம் தொடர்பான சுரப்பிகள் சுரப்பதைக் குறைப்பது உள்ளிட்ட பணிகள் இதன் மூலம் நடக்கின்றன. மன நிலையுடன் தொடர்புடைய என்டார்பின் அளவுகளிலும் வித்தியாசத்தை எங்களால் காண முடிகிறது'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
பன்முக தாக்கங்கள்
பாட்டுப் பாடுவதால் கிடைக்கும் பயன்கள் குறித்து பேராசிரியர் பான்கோர்ட் விரிவான ஆய்வுகள் நடத்தியுள்ளார். இதனால் பன்முகத் தாக்கங்கள் இருப்பதாக அவர் கூறுகிறார்.
 
நரம்பியல் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு, பாட்டுப் பாடுவதும் ஒரு சிகிச்சை முறையாகக் கையாளப்படுகிறது.
``பாட்டுப் பாடுவது ஆரோக்கியத்துக்கான பன்முக பயன்பாடு கொண்ட ஒரு செயல்பாடாக உள்ளது. அதில் நிறைய அம்சங்கள் நிறைந்திருக்கின்றன. பாட்டுப் பாடுவது என்பது உணர்வுகளை வெளிப்படுத்தும் அம்சமாக இருக்கிறது. அது மன ஆரோக்கியத்துக்கு நல்லது என்று நாம் அறிந்திருக்கிறோம். சமூக ஈடுபாட்டை அதிகரிப்பதால், தனிமையாக இருக்கும் எண்ணம் குறைகிறது.''
 
இசையைக் கேட்பதும்கூட கணிசமான அளவுக்கு ஆரோக்கியத்துக்கு பயன் தருவதாக இருக்கிறது என்று அந்தப் பெண் பேராசிரியர் கூறுகிறார்.
 
``இசைக் கச்சேரிகளுக்கு - சாஸ்திரிய சங்கீதமாக இருந்தாலும், ராக் இசையாக இருந்தாலும் - செல்பவர்களுக்கு, மன அழுத்தம் குறைந்திருப்பது கண்டறியப் பட்டுள்ளது. இது சூழ்நிலை சார்ந்த அம்சமாக இருக்கிறது'' என்று அவர் தெரிவிக்கிறார்.
 
``மன மற்றும் உடல் ஆரோக்கிய குறைபாடு உள்ளவர்களுக்கு, பாட்டுப் பாடுவது என்பது சிகிச்சையில் உதவிகரமாக இருக்கிறது'' என்று பிரிட்டனில் உள்ள கேன்டர்பரி கிரைஸ்ட் சர்ச் பல்கலைக்கழகம் 2011 ஆம் ஆண்டு வெளியிட்ட ஓர் ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளது.
 
``குழுவாகப் பாடுவது என்பது, தீவிரமான மற்றும் அதிக காலமாக உள்ள மன ஆரோக்கியப் பிரச்சினைகளை சரி செய்வதில் உதவிகரமாக இருக்கிறது'' என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
 
தியானம்
குழுவில் இணைந்து பாடுவது தனக்கு மனதளவிலும், உடல் அளவிலும் உடனடி பயன்களைத் தருகிறது என்று கூறுவதில் குழு பாடகர் அன்னாபெல் மகிழ்ச்சி அடைகிறார். இவர் ஜெர்மனியில் வசிக்கிறார்.
 
குழுவோடு இணைந்து பாடுவது சமய மரபில் முக்கியமான பங்கு வகிக்கிறது.
``நான் பாடும்போது, அது ஒரு வகையான தியானமாக இருக்கிறது. இசையில் நான் மூழ்கிப் போகிறேன். உண்மையிலேயே அது நல்ல உணர்வைத் தருகிறது.''
 
ஒவ்வொரு வியாழக்கிழமையும் அவர் மூன்று மணி நேரம் பயிற்சி செய்கிறார்.
 
``பாட்டுப் பாடுவதற்கு முழு உடலின் ஒத்துழைப்பும் வேண்டும். உடற்பயிற்சிக் கூடத்துக்குச் செல்லாமல் தவிர்க்க இந்தக் காரணத்தை நான் கூறிக் கொள்வேன்'' என்கிறார் அவர்.
 
நினைவாற்றல் குறைபாடு
இசை, குறிப்பாக பாடுவது, என்பது நினைவாற்றல் குறைபாட்டைக் கையாள்வதற்கான சிகிச்சை முறையாகப் பயன்படுத்தப் படுகிறது
 
பாட்டுப் பாடுவதால் சுரக்கப்படும் சில சுரப்பிகள் ஆரோக்கியத்துக்குப் பயனுள்ளவையாக உள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
``நாம் பாட்டுப் பாடும்போது, நமது மூளையில் குறிப்பிட்ட ஒரு பகுதிக்கு ரத்தம் பாய்கிறது. நினைவாற்றல் குறையும் போது இந்தப் பகுதி மட்டும் தான் பாதுகாக்கப்படும். இந்தப் பகுதிகள் தான் உணர்ச்சிகள் சம்பந்தப்பட்டவை'' என்று டாக்டர் சைமன் ஓபெர் கூறுகிறார்.
 
பாடல்கள் கேட்பது, ``உண்மையில் நினைவாற்றல் குறைந்த நோயாளிகளை விழிப்படையச் செய்து, அவர்களை அதிக ஈடுபாடு கொள்ளச் செய்கிறது'' என்று இங்கிலாந்தைச் சேர்ந்த குடும்ப மருத்துவர் செல்ட்டென்ஹாம் கூறுகிறார்.
 
நன்மைகள்
 
பிரிட்டனை சேர்ந்த மைண்ட் சாங் என்ற அறக்கட்டளை, முதியோர் இல்லங்களுக்கு தங்களுடைய பாடகர்களை அனுப்பி வருகிறது. அங்கிருப்பவர்கள் பாடுவதற்கு ஊக்கம் தருவதற்காக பாடகர்களை அனுப்புகிறது.
 
பாட்டுப் பாடுவது சுவாசப் பிரச்சினை உள்ளவர்களுக்கு பயன் தருவதாக இருக்கிறது.
``நீங்கள் குழுவுடன் சேர்ந்து பாடுவதில் சில நல்ல விஷயங்கள் உள்ளன. வயதானவர்கள் மறுநாள் வரை நல்ல மனநிலையில் இருக்கின்றனர் என்று அவர்களைப் பராமரிப்பவர்கள் எங்களிடம் தெரிவிக்கின்றனர்'' என்று அந்த அமைப்பின் இசை சிகிச்சை முறைப் பிரிவு இயக்குநர் மேக்கி கிராடி தெரிவிக்கிறார்.
 
ஆஸ்துமா, நுரையீரல் புற்றுநோய் போன்ற நுரையீரல் தொடர்பான பிரச்சினைகள் உள்ள நோயாளிகளுக்கு, பாடுவதற்கான பயிற்சியையும் மைண்ட் சாங் அமைப்பு அளிக்கிறது.
 
``ஐந்து அல்லது ஆறு வகுப்புகளில் கலந்து கொண்ட பிறகு, குறிப்பிடத்தக்க அளவுக்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, அதிக உச்சத்தில் பாடுகிறார்கள்'' என்று பயிற்சியாளர்கள் கூறுகின்றனர்.
 
சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்களைப் பொருத்தவரை, எவ்வளவு சீக்கிரமாக நுரையீரலில் இருந்து காற்றை வெளியே தள்ளுகிறார்கள் என்பது தான் அதிகபட்ச உச்சத்துக்கான அளவீடாகக் கருதப்படுகிறது.
 
நுரையீரல் சக்தி
அப்படியானால், நுரையீரல் நோய் உள்ளவர்கள் பாட்டுப் பாட முயற்சி செய்து, தங்களுடைய ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள முயற்சிப்பதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.
 
வறட்டு இருமல் மற்றும் இடியோபதிக் பல்மோனரி ஃபைப்ரோசிஸ் (idiopathic pulmonary fibrosis) எனப்படும் நுரையீரல் தடிப்பு நோய் பாதிப்பு உள்ளவர் கோலின். இந்த நோய் பாதித்த மூன்று ஆண்டுகளில், பாதிப்புக்கு உள்ளானவர்களில் பாதி பேர் மரணம் அடைகின்றனர். இதற்கு மருத்துவம் எதுவும் கிடையாது.
 
நிலைமை தீவிரமானது என்றாலும், பாட்டுப் பாடுவது தனக்கு உதவிகரமாக இருப்பதாக அவர் கூறுகிறார்.
 
``நான் 16 பேர் குழுவில் சேர்ந்து பாடுகிறேன். என்னுடைய சுவாசத்தை நன்றாகக் கையாள்வதற்கு அது உதவுகிறது. உரிய காலத்தில் நுரையீரல் பரிசோதனை செய்து கொள்கிறேன். சில குறியீடுகளில் மேம்பாடு தெரிய வந்திருக்கிறது'' என்று அவர் தெரிவித்தார்.
 
ஹார்மோன்கள்
பாட்டுப் பாடுவதால் உடலில் என்டார்பின் சுரக்கிறது. இது மகிழ்ச்சியுடன் தொடர்புடைய சுரப்பி. பாட்டுப் பாடுவது, நம்மை ஆழமாக மூச்சை இழுக்கச் செய்கிறது. அதனால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. அதன் மூலம் என்டார்பின் தாக்கம் அதிகரிக்கிறது.
 
இசை நிகழ்ச்சிகளுக்குச் செல்வது நமது ஆரோக்கியத்தில் பயனுள்ள தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
நாம் சிரிக்கும்போது அல்லது சாக்லெட் சாப்பிடும்போது என்டார்பின் அதிகம் சுரப்பதைப் போலத்தான் இதுவும் உள்ளது.
 
40 நிமிடங்கள் குழுவில் பாடுவதால் -மன அழுத்தத்துக்கான - கார்ட்டிசோல் சுரப்பி சுரப்பது சாதாரண நேரங்களில் இருப்பதைவிட அதிக வேகமாகக் குறைந்திருப்பது கண்டறியப் பட்டுள்ளது.
 
குழுவில் பாடுபவர்கள் ஆக்சிடோசின் என்ற ஹார்மோனை சுரக்கச் செய்கின்றனர். அது சில நேரங்களில் `காதல் ஹார்மோன்' என்றும் குறிப்பிடப் படுகிறது.
 
நாம் கட்டித் தழுவும்போது இந்த ஹார்மோன் சுரக்கிறது. நம்பிக்கை மற்றும் பிணைப்பை இது அதிகரிக்கச் செய்கிறது.
 
குழுக்களில் பாடுபவர்கள் நட்புணர்வு மற்றும் சேர்ந்திருத்தல் அனுபவத்தை அதிகம் வெளிப்படுத்துவதன் காரணம் இதன் மூலம் தெரிய வருகிறது.
 
பாட்டுப் பாடுவது டோப்பமைன் சுரப்பையும் தூண்டுகிறது. இது மூளையில் தகவல்களை கடத்தும் சுரப்பியாகும். சாப்பிடுதல், கொக்கைன் எடுத்துக் கொள்தல் போன்ற தூண்டல் சமயங்களில் உள்ளதைப் போல, நல்ல உணர்வை உருவாக்கும் சுரப்பியாக இது இருக்கிறது.
 
தொழில்நுட்ப உதவி
வீட்டை விட்டு வெளியில் செல்ல விரும்பாதவர்கள், இணையதளம் மூலமான குழுவில் சேரலாம். வழக்கமான குழுவில் பாடுவதைப் போன்ற அதே சூழ்நிலையை இது உருவாக்கும்.
 
உலகெங்கும் உள்ள பாடகர்களை தொழில்நுட்பம் மூலம் ஒன்று சேர்ப்பது இதன் நோக்கமாக இருக்கிறது.
 
கிராமி விருது பெற்ற இசைக் கலைஞர் எரிக் ஒயிட்டாகேர் இதுபோன்ற இணையதள பாடல் குழு ஒன்றை நடத்துகிறார். வெவ்வேறு இடங்களில் இருந்து பாடகர்கள் தங்களுடைய விடியோக்களைப் பதிவேற்றம் செய்கின்றனர். அவை உரியவாறு கோர்க்கப்பட்டு, ஒரே நிகழ்ச்சியாக உருவாக்கப்படுகின்றன.
 
உலகம் முழுவதும்
வாராந்திர இலவச பயிற்சிகளில் பங்கேற்கும் பாடகர்கள் குறித்து பிரிட்டனில் கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தில் 2017 ஆம் ஆண்டு நடத்திய ஆய்வில், அவர்களுடைய மன நிலை நன்றாக இருக்கிறது என்றும், சமூக செயல்பாட்டுத் திறன் மேம்பட்டிருக்கிறது என்றும் கண்டறியப் பட்டுள்ளது.
 
குழுக்களில் பாடுவது மன நோய்களில் இருந்து மீள்வதற்கு உதவியாக உள்ளது. தங்களுடைய மதிப்பை உணர்ந்து, நம்பிக்கை அதிகரிப்பதை உணர்கிறார்கள்.
 
லிபர்ட்டி இசைக் குழு பிரிட்டன் சிறைகளில் ஒரு நிகழ்ச்சி நடத்துகிறது. சிறைவாசிகளின் தன்னம்பிக்கையை உயர்த்தவும், சமூகத்தில் மீண்டும் இணைந்து வாழ்வதற்கான மனநிலையை உருவாக்க உதவி செய்யவும் இந்த நிகழ்ச்சி நடத்தப் படுகிறது.
 
``ஆரம்பத்தில் சிறைவாசிகள் தயங்கினர். ஆனால் அவர்கள் பாடத் தொடங்கியதும், நேருக்கு நேர் சந்திக்கத் தொடங்கினர். பாதுகாப்பாகவும் அவர்கள் உணர்ந்தனர்'' என்று லிபர்ட்டி இசைக் குழுவின் இயக்குநர் எம்.ஜே. பரான்ஜினோ கூறுகிறார்.
 
கடந்த இருபது ஆண்டுகளில் அதிக அளவிலான மக்கள், குழுப் பாடல்களில் இணைவதாக அவர் குறிப்பிட்டார்.
 
``உங்களை வெளிப்படுத்திக் கொள்வதற்கான ஒரு பொழுதுபோக்கு அம்சம்தான் இது. நீங்கள் சிறந்த கலைஞராக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது'' என்கிறார் அவர்.
 
மனத்தடைகள்
இசைக் குழுவில் சேரும்போது சமூக ஈடுபாடு அதிகரிப்பதால், தனிமை உணர்வு குறைகிறது என்றும், சமூகத்தில் இணைந்து செயல்படும் போக்கினை அதிகரிக்க உதவுகிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
 
பல கலாச்சாரங்களில் பாடுவதும், நடனமும் ஒருங்கிணைந்த அம்சங்களாக உள்ளன.
பள்ளிக்கூடங்களிலேயே மாணவர்களும், மாணவிகளும் பாட்டுப் பாடுவதில் ஆர்வம் காட்டும் நிலையில், பருவ வயதை எட்டியவர்களுக்கு இது சிரமமாக இருக்கிறது.
 
``முதல் நாள் பாடுவது, முதல் நாள் வேலைக்குப் போவதைப் போல உள்ளது. கொஞ்சம் வெட்கமாக இருக்கும். அங்கே செல்வதற்கு கொஞ்சம் தைரியம் தேவைப்படும். அந்தத் தயக்கங்களைக் கடந்துவிட்டால், அற்புதமான புதிய உலகத்தை நீங்கள் கண்டறிவீர்கள்'' என்று எம்.ஜே. பரான்ஜினோ உறுதி அளிக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்