யுக்ரேன் மீதான தாக்குதலால் திருப்பூர் பின்னலாடை தொழிலுக்கு என்ன பாதிப்பு?

திங்கள், 28 பிப்ரவரி 2022 (12:19 IST)
யுக்ரேன் மீது ரஷ்யா மேற்கொண்டு வரும் போர் நடவடிக்கையால் உலகப் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படலாம் என பொருளாதார வல்லுநர்கள் பேசி வருகின்றனர். `கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கான திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி என்பது 30 சதவீதமாக உள்ளது.
 
இதனால், வரும் நாள்களில் இதில் கணிசமான பாதிப்பு ஏற்படலாம்' என்கின்றனர் திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள்.
 
ரஷ்யாவின் படைகள், யுக்ரேன் மீது ஐந்தாவது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தத் தாக்குதல் காரணமாக ரஷ்ய நாட்டின் பங்கு சந்தைகள் 50 சதவீதம் என்ற அளவுக்கு சரிவை சந்தித்துள்ளதாகத் தகவல் வெளியானது.
 
இதன் தொடர்ச்சியாக, பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகளின் பங்குச் சந்தைகளும் சரிவைச் சந்தித்துள்ளன. ரஷ்யா-யுக்ரேன் யுத்தம் காரணமாக தங்கத்தின் விலையும் கச்சா எண்ணெயின் விலையும் உயரத் தொடங்கியுள்ளன.
 
இதன் தொடர்ச்சியாக, திருப்பூர் பின்னலாடை உற்பத்தியில் பெரும் பாதிப்பு ஏற்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. திருப்பூரில் ஒவ்வோர் ஆண்டும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு முப்பது சதவீதம் அளவுக்கு பின்னலாடை ஏற்றுமதி நடக்கிறது. இதன் மதிப்பு என்பது பத்தாயிரம் கோடி ரூபாயாக உள்ளது.
 
கொரோனா தொற்று காரணமாக நலிவடைந்திருந்த பின்னலாடைத் தொழிற்சாலைகள், தற்போது சீரடைந்து வரும் நிலையில் ரஷ்யா, யுக்ரேன் போர் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் இணைச் செயலாளர் செந்தில்குமார், ``பின்னலாடையைப் பொறுத்தவரையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுடன் அதிகளவில் வர்த்தகம் நடக்கிறது. குறிப்பாக, ஐரோப்பிய ஒன்றியங்களுக்கு திருப்பூரில் இருந்து 30 முதல் 40 சதவீதமான பின்னலாடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இதன் மதிப்பு என்பது 12,000 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உள்ளது. ரஷ்ய, யுக்ரேன் போரால் உடனடி பாதிப்புகள் என்பது தென்படவில்லை. உலகப் பொருளாதாரத்தை இந்தப் போர் பாதிக்கும்போது எங்களுக்கும் பாதிப்பு வரும். தற்போது ரஷ்யா மீது பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றன. கச்சா எண்ணெய் விலை அதிகமாகியுள்ளதையும் கவனிக்க வேண்டியுள்ளது'' என்கிறார்.
 
தொடர்ந்து பேசுகையில், `` கோவிட் தொற்றுக்குப் பிறகு பின்னலாடைத் தொழில் படிப்படியாக சீரடைந்து வருகிறது. அண்மையில் நூல் விலையேற்றத்தால் கடும் சிரமம் ஏற்பட்டது. அந்தப் பிரச்னை சீராகும் சூழலில் தற்போது போர் ஏற்பட்டுள்ளது. இந்தப் போரால் கடல்வழிப் போக்குவரத்தில் எந்தளவுக்குப் பாதிப்பு ஏற்படப் போகிறது என்பதைப் பார்க்க வேண்டும். '
 
தற்போது வரையில் எங்களுக்கான ஆர்டர்களை பையர்கள் (Buyers) குறைக்கவில்லை. இந்தப் போரில் ஐரோப்பிய யூனியனில் உள்ள இதர நாடுகள் பங்கேற்கவில்லை. கச்சா எண்ணெய் விலை உயர்வால், சரக்கு ஏற்றுமதியில் விலை அதிகரிக்கலாம்'' என்கிறார்.
 
`` ரஷ்யா, யுக்ரேன் மோதலால் ஏற்பட்டுள்ள டீசல் விலையேற்றம் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போர் ரஷ்யா - யுக்ரேனுடன் நிற்காமல் இதர நாடுகளும் கூட்டணி சேர்ந்தால் பின்னலாடை ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்படும்.
 
அதேநேரம், ரஷ்யாவில் பின்னலாடைக்கான பெரிய சந்தை உள்ளது. அங்கு போர் நடப்பதால் ரஷ்யாவுக்குச் செல்ல வேண்டிய உற்பத்தி ஆர்டர்கள், திருப்பூருக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
 
தவிர, ரஷ்ய சந்தை என்பது எங்களுக்குத் தொடர்பில்லாத ஒன்றுதான். ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்தவர்கள், ரஷ்யாவிலும் பின்னலாடைகளை வாங்குகின்றனர்.
 
பின்னலாடைக்கான மூலப் பொருள் விலையேற்றம், சம்பள உயர்வு என எங்களுக்குப் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. புதிதாக ஆர்டர்கள் வந்தாலும் அதனைத் தக்க வைப்பதும் சிரமமாக உள்ளது'' என்கிறார், திருப்பூர் ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்துரத்தினம்.
 
திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதியைப் பொறுத்தவரையில் ஒவ்வோர் ஆண்டும் 27,500 கோடி ரூபாய் என்றளவில் வர்த்தகம் நடக்கிறது. கொரோனா காரணமாக கடந்தாண்டு ஏற்றுமதியில் பெரும் சரிவு ஏற்பட்டது.
 
தற்போது கொரோனா மூன்றாம் அலை குறைந்து இயல்பு நிலை திரும்பி வருவதால் இந்த ஆண்டுக்கான வர்த்தகம் என்பது முப்பதாயிரம் கோடி ரூபாயைத் தாண்டும் என பின்னலாடை உற்பத்தியாளர்கள் பேசி வருகின்றனர். அதேநேரம், யுக்ரேன் மீது ரஷ்யா நடத்தி வரும் போரால் வரும் நாள்களில் திருப்பூரிலும் அதன் பாதிப்பு தென்படலாம் என்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்