செர்னோபிள்: யுக்ரேனின் திட்டங்களும், ரஷ்யாவின் அச்சுறுத்தலும்!
சனி, 26 பிப்ரவரி 2022 (08:57 IST)
35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது செர்னோபிள் அணு உலை. யுக்ரேனுக்குள் நுழைந்த ரஷ்யப் படைகள் செர்னோபிள் அணு உலை விபத்துத் தளத்தைக் கைப்பற்றியுள்ளதாக அறிவித்ததைத் தொடர்ந்து இந்த அணு உலை விவகாரம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
இதில் கவனிக்கத்தக்க அம்சம் என்னவென்றால், இந்த அணு உலை விபத்துத் தளத்தை சுற்றுலாத்தளமாக மாற்ற வேண்டும் என்று யுக்ரேன் அரசு திட்டமிருந்த நிலையில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், செர்னோபிள் சம்பவம் குறித்தும் அணு உலை விபத்துத் தளம் குறித்து யுக்ரேன் அரசு வைத்திருந்த திட்டம் குறித்தும் இந்தக் கட்டுரையில் சுருக்கமாகப் பார்க்கலாம்.
செர்னோபிள் அணுஉலை விபத்து:
சோவியத் ஒன்றியத்தில் இருந்த யுக்ரேன் நாட்டில் பிப்யாட் (Pripyat) என்ற பகுதிக்கு அருகில் செயல்பட்டு வந்தது செர்னோபிள் அணு உலை. இங்கு 4 அலகுகள் இயங்கி வந்த நிலையில், 1986ஆம் ஆண்டு அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
செர்னோபிள் அணு உலை விபத்து: கதிர்வீச்சால் உருவான சிவப்புக் காட்டில் ட்ரோன்கள் ஆய்வு
அணு உலை விபத்து, மாற்று மின் சக்தி பின் 24,000 ஆண்டுகள்
4 அலகுகளில் ஒன்றில் குளிரூட்டியில் கோளாறு ஏற்பட்டு வெப்பம் கட்டுப்படுத்தமுடியாத அளவுக்கு உயர்ந்து, அதன் விளைவாகத்தான் இந்த வெடிப்பு ஏற்பட்டது.
சரியாக 1986ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி அதிகாலை 1.26 மணிக்கு பெரும் வெடிப்பாக நிகழ்ந்தது இந்த அணு உலை விபத்து. இந்த விபத்தால் ஏறக்குறைய ஐரோப்பா முழுவதும் கதிர்வீச்சு பரவி சுமார் 50,000 சதுர கிலோமீட்டர் நிலம் வீணாகியுள்ளது. அதாவது கதிர்வீச்சு பாதிப்பால், மக்களும் வாழ முடியாத பகுதியாக அறிவிக்கப்பட்டு பயன்படுத்த முடியாத பகுதியாகவும் இந்த நிலம் மாறிப்போனது.
இந்த விபத்து நடந்த அடுத்த சில நாட்களுக்கு (தோராயமாக முதல் ஒரு மாதத்துக்குள்) கதிர்வீச்சு பாதிப்பால் 31 பேர் உயிரிழந்தும் 134 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டும் உள்ளனர். அதுமட்டுமன்றி இன்றுவரை அதன் பாதிப்புப் படிமங்கள் பரவி இருப்பதாகவே தெரிகிறது.
ஆனால், உண்மையான உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறித்து இதுவரை தகவல்கள் இல்லை. மக்கள் தைராய்டு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறப்பது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
யுக்ரேனின் திட்டம் என்ன?
இவ்வளவு பெரும் நிலப்பரப்பு பயன்பாட்டில் இல்லாமல் மக்கள் வாழவும் தகுதியற்ற இடமாக இருக்கிறது என்றால், அரசு அதை ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறதா என்று சிந்திக்கத்தான் செய்ய வேண்டும். அப்படித்தான் யுக்ரேனிய அரசு செர்னோபிள் விபத்தால் கைவிடப்பட்ட நிலங்களில், அதற்கென பிரத்யேகமாக பல்வேறு திட்டங்களை வைத்திருந்தது.
அப்படியான ஒரு திட்டம்தான் 2018இல் யுக்ரேனில் உருவாக்கப்பட்ட சூரிய விசை மின்சார உற்பத்தி ஆலை. செர்னோபிள் விபத்தால் கைவிடப்பட்ட பகுதியில் உருவாக்கப்பட்ட இந்த ஆலை மூலம் சுமார் 2000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்க திட்டமிடப்பட்டிருந்தது.
ஏனெனில், அடுத்த 24,000 ஆண்டுகளுக்கு இந்தப் பகுதியில் மக்கள் வசிக்க முடியாது என்று யுக்ரேனிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இப்படி இருக்கும் சூழலில் இந்த நிலத்தை என்னதான் செய்வது?
சுற்றுலாத் தளமாக்கினால் என்ன?
அடுத்த கட்ட திட்டம் இந்த கைவிடப்பட்ட நிலத்தையும் செர்னோபிள் விபத்து தளத்தையும் ஒரு சுற்றுலாத் தளமாக மாற்றுவது. இது தொடர்பாக 2019ஆம் ஆண்டு திட்டத்தை வடிவமைத்து அதற்கு ஒப்புதலும் வழங்கி கையெழுத்திட்டார் யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி.
அப்போது இந்தத் திட்டம் குறித்துப் பேசிய ஸெலன்ஸ்கி, "மனிதன் ஏற்படுத்திய ஒரு பேரழிவுக்குப் பின் இந்த பிரபஞ்சத்தில் மீண்டும் உயிர்த்தெழுந்த இடம் செர்னோபிள்" என்று பேசினார்.
மேலும்,"இந்த இடத்தை விஞ்ஞானிகள், சுற்றுச்சூழல் நிபுணர்கள், வரலாற்றாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் என அனைவருக்கும் காட்ட வேண்டும்" எனவும் கூறினார்.
இப்படியான திட்டங்களின் மூலம், செர்னோபிள் குறித்த எதிர்மறையான எண்ணத்தை மாற்ற நேரம் வந்துவிட்டது என்றும் கூட பேசியிருந்தார் அதிபர் ஸெலன்ஸ்கி. ஏனெனில் உண்மையிலேயெ அப்படி ஒரு திட்டம் இருந்தது.
மருத்துவச் சுற்றுலா, கல்விச்சுற்றுலா என்ற வரிசையில் கதிரியக்கச் சுற்றுலா என்பதற்கான தளமாக செர்னோபிளை மாற்றும் திட்டம் அது.
கதிரியக்கச் சுற்றுலாத் திட்டம்
கதிர்வீச்சு அதிகம் இருந்தாலும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஏற்கெனவே செர்னோபிளுக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.
எனவே இந்த ஆணை மூலம், செர்னோபிளுக்கு நீர்வழிப் பயணம் செய்ய வழிவகை ஏற்படுத்தலாம். அத்துடன், அங்காங்கே சுங்கச் சாவடிகளையும் அமைக்கலாம், அது வருவாய்க்கும் வழி வகுக்கும்.
அது மட்டுமல்லாமல் செர்னோபிளில் புகைப்படம் எடுப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்பட்டது.
மேலும், "பார்வையாளர்களுக்கு மின் நுழைவுச்சீட்டு தருவதால் அங்கே நடக்கும் ஊழலையும் தடுக்க உள்ளோம். காரணம், ஒரு தடை செய்யப்பட்ட பகுதி எப்போதும் ஊழல் மிக்கதாக இருக்கும் . இதில் சுற்றுலா பயணிகளிடமிருந்து அரசு அதிகாரிகள் வாங்கும் லஞ்சமும் அடங்கும். இது விரைவில் நிறுத்தப்படும்" எனவும் ஸெலன்ஸ்கி கூறியிருந்தார்.
மனிதர்களால் நிகழ்ந்த ஒரு சரிசெய்ய முடியாத பெரும் பிழையை குறைந்தபட்சம் சமன்செய்யும் விதத்தில் கையாளவாவது முயற்சி செய்யலாம் என்பதுதான் யுக்ரேனின் திட்டமாக இருந்தது. ஆனால், இப்போது மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது செர்னோபிள் அணுவிபத்துத் தளம்.
என்ன அச்சுறுத்தல்?
யுக்ரேன் இன்று மூன்றாவது நாளாக ரஷ்யாவின் ராணுவ தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. இந்நிலையில், செர்னோபிள் அணு விபத்துத் தளத்தை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியதாக, யுக்ரேன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக இது குறித்துத் தெரிவித்த யுக்ரேன் அதிபரின் ஆலோசகர் மிக்கைலோ பொடாலியாக், இதனை "முற்றிலும் அர்த்தமற்ற தாக்குதல்" என்றதோடு "இன்று ஐரோப்பாவில் நிகழும் தீவிரமான அச்சுறுத்தல்களில் ஒன்று" எனவும் எச்சரித்தார்.
அத்துடன், செர்னோபிள் அணு விபத்துத் தளத்தை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ள நிலையில், ரஷ்யா படையெடுப்பை தொடர்ந்தால், அத்தகைய பேரழிவு மீண்டும் நடக்கும் என, யுக்ரேன் அதிபரும் எச்சரித்துள்ளார்.
மாறி மாறி அச்ச உணர்வையும் எச்சரிக்கையையும் யுக்ரேன் வெளிப்படுத்தும் நிலையில், செர்னோபிள் அணு விபத்துத் தளத்தில், "மற்றுமொரு சூழலியல் பேரழிவு" நிகழ்வதன் சாத்தியம் குறித்து, யுக்ரேன் வெளியுறவு துறை அமைச்சகமும் எச்சரித்துள்ளது.
உலகம் உறைந்து போன விபத்துச் சம்பவங்கள் என்று ஒரு பட்டியல் தயார் செய்தால் செர்னோபிள் அணுஉலை விபத்துக்கு அதில் தவிர்க்க முடியாத இடம் உண்டு. மனிதகுலம் மறக்கமுடியாத துயரச் சம்பவமாக வரலாற்றில் பதிவான இந்த விபத்தின் நீட்சி இன்னும் தொடரும் நிலையில், மீண்டும் வன்முறைக் களத்துக்கு நடுவே பேசுபொருளாகியுள்ளது செர்னோபிள் அணு விபத்துத் தளம்.