யுக்ரேனில் குண்டுவீச்சுக்கு நடுவே தவிக்கும் தமிழக மாணவர்கள்

திங்கள், 28 பிப்ரவரி 2022 (10:53 IST)
யுக்ரேனில் ரஷ்யப் படைகளின் தாக்குதல் தீவிரமடைந்திருக்கும் கார்கிவ் நகரில் தமிழ்நாட்டின் திருச்சி, தென்காசி, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் தவித்து வருகின்றனர். இவர்கள் கார்கிவ் தேசிய பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மூன்றாம் ஆண்டு படித்து வருகின்றனர்.


இதுகுறித்து கார்கிவ் பகுதியில் உள்ள மாணவர் கிஷோர் கூறுகையில், "தற்சமயம் யுக்ரேன் நாட்டின் கார்கிவ் பகுதியில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டுள்ளோம். நான்கு நாட்கள் போர் நடைபெற்ற கொண்டிருப்பதால், எங்களால் எங்கேயும் நகர முடியாமல் தற்போது எங்கள் குடியிருப்பு பகுதிக்கு கிழே உள்ள பதுங்கு குழியில் தான் தங்கியுள்ளோம். எங்களிடம் இருந்த உணவும் காலியாகி விட்டதால் தற்போது உண்ண உணவுமில்லை. வெளிய கடுமையான பாதுகாப்பு வளையம் ஏற்பாடு செய்துள்ளதால் ராணுவத்தினர் எங்களை வெளியே வரக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. “ என்றார்.

“இந்திய அரசு சார்பில் எந்த உதவியும் இதுவரை செய்யவில்லை. இதுவரை இந்திய அரசால் விமானங்கள் மூலம் அழைத்து செல்லப்பட்ட மாணவர்கள் மேற்கு பகுதியை சேர்ந்தவர்கள். ஆனால் அப்பகுதியில் எந்த பிரச்சனையும் நிலவவில்லை. தலைநகரம் கியவ் மற்றும் நாங்கள் இருக்கும் பகுதியான கார்கிவ்வில் தான் தற்போது அதிக அளவில் பாதிப்புகள் நிலவுகிறது.” என்று அவர் மேலும் கூறினார்.

“இப்பகுதியில் தீவிரமாக போர் நடைபெறுவதால் சாப்பாட்டிற்கும் வழியில்லாமல், கழிப்பறை செல்லவும் போதிய வசதியில்லாமல் தவிக்கிறோம். இந்திய அரசு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து எந்த தகவலும் இதுவரை தெரியவில்லை.

கார்கிவில் போர் நடைபெறுவதால் தற்போது எதுவும் செய்ய முடியாது. ரயில், பேருந்து போன்ற போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. கிழக்கு பகுதியில் இருக்கும் நாங்கள் விமானத்திற்கு மேற்கு பகுதியை நோக்கி சுமார் 1000கிமீ தொலைவில் உள்ள இடத்திற்கு பயணம் மேற்கொள்ள இயலாத நிலையில் இருக்கிறோம். இதனை கருத்தில் கொண்டு இந்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கார்கிவ் பகுதியில் உள்ள மாணவர்கள் பிபிசி தமிழ் மூலமாக வேண்டுகோள் வைக்கிறனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்