இரான் தளபதி காசெம் சுலேமானீயை அமெரிக்கா கொன்றது சட்டவிரோதம்: ஐ.நா. வல்லுநர்
வியாழன், 9 ஜூலை 2020 (22:36 IST)
இரானின் முக்கிய ராணுவ தளபதியான காசெம் சுலேமானீயை அமெரிக்கா கொன்றது சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என்று ஐநா வல்லுநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் இராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள், அதிபர் டிரம்பின் உத்தரவின் பேரில் விமான தாக்குதல் நடத்தியதில் காசெம் சுலேமானீ உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலை நியாயப்படுத்த அமெரிக்கா எந்த போதிய ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை என்று சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் குறித்த ஐநாவின் சிறப்பு அறிக்கையாளரான ஏக்னஸ் கேலமார்ட் கூறியுள்ளார்.
இதனை “பயங்கராவதிகளுக்கு ஆதரவளிக்கும் பேச்சு” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.
சுலேமானீ கொலை தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட 35 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ள இரான், கடந்த வாரம் அவர்களுக்கு கைது வாரண்டும் பிறப்பித்துள்ளது.
யார் இந்த காசெம் சுலேமானீ?
இரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவின் தலைவரான இவர், அந்த நாட்டிலேயே அதிக அதிகாரம் பெற்ற ராணுவத் தளபதியாக விளங்கியவர்.
இரானின் ஆட்சியில் ஜெனரல் காசெம் சுலேமானீ, ஒரு முக்கியமான நபர். 1998 ஆண்டு முதல் காசெம் சுலேமானீ, இரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவு (Quds Force) ஒன்றின் தலைவராக இருந்து வந்தார். இந்தப்பிரிவு வெளிநாடுகளில் ரகசிய நடவடிக்கைகள் மேற்கொள்ளும்
இரானின் புரட்சிகர ராணுவப் படையானது, அந்நாட்டின் இஸ்லாமிய கட்டமைப்பை பாதுகாக்க 40 ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கப்பட்டது.
இந்த படையின் Quds என்ற பிரிவு, மத்திய கிழக்கு பகுதிகளில் உள்ள கூட்டணி அரசுகள் மற்றும் ஆயுதம் ஏந்திய போராளிகள் குழுவிற்கு ரகசியமாக பணம், ஆயுதங்கள், தொழில்நுட்பம், பயிற்சி மற்றும் ஆலோசனை போன்ற உதவிகளை வழங்கும். இதன் மூலம் இரானின் ஆதிகத்தை மத்திய கிழக்கு பகுதிகளில் விரிவுபடுத்தும் லட்சியம் முன்னெடுக்கப்பட்டது.
இதற்கு பின்னால் இருந்த முக்கிய புள்ளிதான் காசெம் சுலேமானீ. போர் என்று வரும்போது அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் போன்று இவர் செயல்பட்டார் என்கிறார் பிபிசியின் சர்வதேச தலைமை செய்தியாளர் லைஸ் டவுசட்.
சுலேமானீ இறந்தது எப்படி?
சுலேமானீ மற்றும் இரான் ஆதரவு பெற்ற போராளிகள் இரண்டு கார்களில் பாக்தாத் விமான நிலையத்தில் இருந்து செல்லும்போது, அமெரிக்க ட்ரோனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணையால் அவர்கள் தாக்கப்பட்டனர்.
இது தொடர்பாக பென்டகன் வெளியிட்ட அறிக்கையில், "அதிபரின் உத்தரவின் பேரில், வெளிநாட்டில் இருக்கும் அமெரிக்க பணியாளர்களை பாதுகாக்கும் நோக்கத்தில் ஜெனரல் காசெம் சுலேமானீயை கொல்லும் முடிவை அமெரிக்க ராணுவம் எடுத்தது" என்று கூறப்பட்டது..
"இரான் எதிர்காலத்தில் தாக்குதல் நடத்துவதை தடுக்கும் நோக்கத்தோடு இது நடத்தப்பட்டது. அமெரிக்கர்கள் உலகில் எங்கிருந்தாலும், அவர்களை பாதுகாக்க அமெரிக்கா அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்" என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
ஐ.நா. வல்லுநர் கூறுவது என்ன?
சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் குறித்த ஐநாவின் சிறப்பு அறிக்கையாளரான ஏக்னஸ் கேலமார்ட் தனது அறிக்கையை வியாழக்கிழமை அன்று ஐ.நா. மனித உரிமை கவுன்சிலிடம் சமர்ப்பித்தார்.
அமெரிக்காவுக்கு எதிராக தாக்குதல் நடத்த சுலேமானீ திட்டமிட்டார் என்பதற்கான எந்த ஆதாரத்தை அந்நாடு அளிக்கவில்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“இரான் ராணுவத்தின் ராஜதந்திரங்களுக்கு தலைமை தாங்கியவரான சுலேமானீ, சிரியா மற்றும் இராக்கில் நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான தலைமை தாங்கும் பொறுப்பில் இருந்தார். அவரால் மற்றவர்கள் உயிர்களுக்கு ஆபத்து என்ற நிலை இல்லாத நிலையில், இதுபோன்ற தாக்குதலை அமெரிக்கா நடத்தியது சட்டத்துக்குப் புறம்பானது” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனவே இந்த ட்ரோன் தாக்குதலானது “தன்னிச்சையாக நடத்தப்பட்ட கொலை” என்பதால், சர்வதேச மனித உரிமை சட்டப்படி இதற்கு அமெரிக்காதான் பொறுப்பு என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்களும் சட்டத்துக்கு எதிரானது என்று கேலமார்ட் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் பதில் என்ன?
“இரான் ஜெனரல் சுலேமானீ உலகின் மோசமான பயங்கரவாதி என்ற அவரது கடந்த காலத்தை மறந்துவிட்டு, இவ்வாறு அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை எழுதியது நேர்மையின்மையை காட்டுகிறது” என அமெரிக்காவின் உள்துறை செய்தித்தொடர்பாளர் மார்கன் ஒர்டகஸ் தெரிவித்துள்ளார்.
“மனித உரிமை என்ற பெயரில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுவதை இந்த அறிக்கை காண்பிக்கிறது என்றும், 2018ல் ஐநாவின் மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகியது சரிதான் என்று மீண்டும் ஒரு முறை நிரூபணமாகி உள்ளது” என்றும் மார்கன் குறிப்பிட்டுள்ளார்.