சௌதி இளவரசர் மீது அமெரிக்காவில் வழக்கு தொடுத்த துருக்கி பெண்

புதன், 21 அக்டோபர் 2020 (11:08 IST)
துருக்கியில் உள்ள சௌதி துணைத் தூதரகத்தில் கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியை கொலை செய்ய உத்தரவிட்டதாக, சௌதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மீது அமெரிக்காவில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

கஷோக்ஜி கொல்லப்படும் முன்பு அவர் திருமணம் செய்து கொள்ளவிருந்த அவரது பெண் தோழி ஹாடீஜா ஜெங்கிஸ் மற்றும் கஷோக்ஜி நிறுவிய 'டெமோக்ரசி பாஃர் த அரப் வோர்ல்டு நவ்' எனும் அமைப்பு சார்பில் வாஷிங்டனில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் நேற்று வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
 
துருக்கி நாட்டவரான ஹாடீஜா தமக்கு தனிப்பட்ட வாழ்க்கையிலும், பொருளாதார ரீதியாகவும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தனது மனுவில் கூறியுள்ளார்.
 
கஷோக்ஜி கொலையால் தங்கள் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக 'டெமோக்ரசி பாஃர் த அரப் வோர்ல்டு நவ்' தெரிவித்துள்ளது.
 
கஷோக்ஜி எவ்வாறு இறந்தார்?
 
59 வயதான ஜமால் கஷோக்ஜி 2017ஆம் ஆண்டில் தனது தாய் நாடான செளதியில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தார். இவர் சௌதி அரச குடும்பத்தின் தீவிர விமர்சகர்.
 
துருக்கியில் வாழும் அந்நாட்டு பிரஜையான ஹாடீஜா ஜென்கிஸை திருமணம் செய்ய முடிவு செய்த அவர், முதல் திருமணத்தின் மணமுறிவுக்கான ஆவணங்களைப் பெற 2018ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி இஸ்தான்புல்லில் உள்ள செளதி துணைத் தூதரகத்துக்கு சென்றார்.
 
நீண்ட நேரத்துக்குப் பிறகும் அவர் வெளியே வராத நிலையில், தூதரகத்துக்கு வெளியே காத்திருந்த அவரது காதலி ஹாடீஜா துருக்கி அரசின் கவனத்துக்கு இந்த விவகாரத்தை கொண்டு சென்றார்.
 
இதைத்தொடர்ந்து துருக்கி அதிகாரிகள் நடத்திய விசாரணையில், தூதரகத்துக்கு உள்ளே பதிவான ரகசிய உரையாடல்களை வைத்து கஷோக்ஜி மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருப்பது தெரிய வந்தது. ஆனால், கஷோக்ஜி மரணம், திட்டமிடப்பட்ட ஒன்று அல்ல என்று செளதி அரசு கூறுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்