சீனா – அமெரிக்கா இடையே கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதார ரீதியான மோதல், வர்த்தக மோதல் என தொடர்ந்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையேயும் போர் பதற்றம் எழுந்துள்ள நிலையில் சீனாவின் சர்வதேச கடல் எல்லைப்பகுதியில் அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை நிறுத்தி வைத்துள்ளது. மட்டுமல்லாமல் சீனாவுடன் எல்லை பிரச்சினை கொண்டுள்ள இந்தியா, தைவான் போன்ற நாடுகளுடனும் அமெரிக்கா நட்பை பேணி வருவது சீனாவிற்கு எரிச்சலூட்டும் விஷயமாக அமைந்துள்ளது.
சமீபத்தில் தைவானுடன் ராணுவ உறவு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள அமெரிக்கா தனது கப்பலை தைவான் ஜலசந்தியில் கொண்டு சென்று சீனாவிற்கு போக்கு காட்டியது. இந்நிலையில் தைவான் எல்லை மீறி சீன எல்லைகளை ஆக்கிரமித்திருப்பதாக கூறி அதன் மீது போர் தொடுக்க எல்லையில் ஆயுதங்களை குவித்துள்ளது சீனா. எனினும் இரு நாடுகளிடையே எல்லை தொடர்பான பேச்சு வார்த்தைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.