சிரியா போர்: மனிதர்களை விஞ்சும் பூனைகளின் எண்ணிக்கை

செவ்வாய், 7 ஜனவரி 2020 (22:09 IST)
சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள கஃபார் நபில் நகரத்தில் சிரியா மற்றும் ரஷ்ய படைகள் பல மாதங்களாக தீவிரமாக நடத்திய வெடிகுண்டு தாக்குதலின் காரணாமாக அங்கு தற்போது மனிதர்களைவிட பூனைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக கூறுகிறார் பிபிசி செய்தியாளர் மைக் தாம்சன்.
வெடிகுண்டு தாக்குதல்களினால் சிதைவுற்று காணப்படும் வீட்டின் அடித்தளத்தில் மேசை ஒன்றின் கீழே பதுங்கி, உட்கார்ந்து இருக்கிறார் 32 வயதான சலாஹ் ஜார். வீட்டிற்கு வெளியே வீசப்பட்டு வரும் குண்டுமழையால் இவர் மட்டுமல்ல இவருடன் இருக்கும் பூனைகளும் சேர்ந்தே பீதியடைந்துள்ளன.
 
"பூனைகள் என்னருகே இருக்கும்போது ஆறுதலாக இருக்கிறது. இது குண்டுவெடிப்பு, தகர்ப்பு, துன்பம் ஆகியவை உண்டாக்கும் பயத்தை குறைக்கிறது," என்று சலாஹ் கூறுகிறார்.
 
சலாஹ்வின் சொந்த நகரமான கஃபார் நபிலில் ஒருகாலத்தில் 40,000 மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆனால், தற்போது அந்த நகரத்தின் மக்கள் தொகை 100க்கும் குறைவே. இந்த நகரில் எத்தனை பூனைகள் இருக்கின்றன என்பதை கணிப்பது கடினமானது. நுற்றுக்கணக்கிலோ அல்லது ஆயிரக்கணக்கிலோ கூட இங்கு பூனைகள் இருக்கலாம்.
 
"இந்த நகரத்தை விட்டு அதிக அளவிலான மக்கள் வெளியேறிவிட்டதால், மக்களே இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. தன்னை பார்த்துக்கொள்வதற்கும், உணவளிப்பதற்கும் இங்குள்ள பூனைகளுக்கு மனிதர்கள் வேண்டும். ஆகவே, கஃபார் நபிலில் எஞ்சியுள்ள மக்களின் வீடுகளில் பூனைகள் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளன. எனவே, தற்போது இந்த நகரத்தில் எஞ்சியிருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது 15 அல்லது அதற்கு மேற்பட்ட பூனைகள் உள்ளன," என்று சலாஹ் கூறுகிறார்.
 
உள்ளூரிலுள்ள வானொலி ஒன்றின் செய்தியாளராக சலாஹ் பணிபுரிகிறார். சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் அந்த வானொலி நிலையம் இருந்த இடம் சேதமடைந்தது. ஆனால், இந்த தாக்குதலுக்கு முன்னதாகவே அந்த வானொலி நிலையம் அருகிலுள்ள பாதுகாப்பான நகரம் ஒன்றுக்கு மாற்றப்பட்டது.
 
பல்வேறு தரப்பினரால் நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்த நிலவரங்கள் மட்டுமின்றி செய்திகள், நகைச்சுவை சார்ந்த நிகழ்ச்சிகள் மனிதர்களுக்கு மட்டுமின்றி பூனைகளுக்காகவும் அந்த வானொலி நிலையத்தால் நடத்தப்பட்டன. 2018ஆம் ஆண்டின் இறுதியில் நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றின்போது இந்த வானொலி நிலையத்தின் நிறுவனர் ரேட் பார்ஸ் கொல்லப்பட்டார். அவரது நினைவுகள் தன்னை மட்டுமின்றி அவரது மீது பாசம் கொண்ட பூனைகளையும் வாட்டுவதாக சலாஹ் கூறுகிறார்.
 
"சிலநேரங்களில் ஒருவர் வீதியில் நடந்து செல்லும்போது அவருடன் 20 முதல் 30 பூனைகள் சூழ்ந்து நடந்து கொண்டிருப்பதோடு வீட்டிற்குள்ளும் வரும்," என்று சலாஹ் கூறுகிறார்.
 
கஃபார் நபிலில் பூனைகளை போன்றே நாய்களுக்கும் பஞ்சமில்லை. பசியை போக்கவும், பாதுகாப்பாக இருக்கவும் இடம் தேடி நாய்கள் நகரமெங்கும் திரிகின்றன. ஆனால், நாய்களுடன் ஒப்பிடுகையில் பூனைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அவையே இறுதியில் வெற்றிபெறுவதாக சலாஹ் கூறுகிறார்.
 
இந்த நகரத்தில் வாழும் சலாஹ் போன்றோருக்கு தாங்கள் எத்தனை நாட்களுக்கு உயிருடன் இருப்போம் என்றோ அல்லது அடுத்த வேளைக்கான உணவு எங்கிருந்து வரும் என்றோ தெரியாது; ஆனால், அவர்களை நம்பி வாழும் நான்கு கால்களை கொண்ட நண்பர்களுக்கு எப்போதும் மேசைக்கு அடியில் உணவு கிடைக்கிறது.
 
"காய்கறிகள், நூடுல்ஸ், காய்ந்து போன ரொட்டி என நான் என்னென்ன சாப்பிடுகிறேனோ அவை அனைத்தையும் பூனைகளும் சாப்பிடும். இதுபோன்ற சூழ்நிலையில், நாம் இருவருமே பலவீனமான உயிரிகள், ஒருவருக்கொருவர் உதவ வேண்டும் என்று நாங்கள் உணர்கிறோம்," என்று அவர் கூறுகிறார்.
 
கஃபார் நபில் போன்ற போர் பதற்றம் மிக்க நகரங்களில் அடிக்கடி நடக்கும் தாக்குதலில் சிக்கி மனிதர்கள் மட்டுமின்றி அங்கு இருக்கும் பூனைகள் உள்ளிட்ட விலங்குகளும் காயமடைவதும் இயல்பானதே. உணவு பொருட்களை போன்று மருந்துகளுக்கும் இங்கு தட்டுப்பாடு நிலவும் நிலையில், காயமடைந்த பூனைகளை காப்பாற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சலாஹ் கூறுகிறார்.
 
கஃபார் நபில் நகரத்தின் நிலையை நினைத்து சலாஹ் பெரிதும் வருந்துகிறார். தனக்காக மட்டுமல்ல, தனது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பூனைகளுக்காகவும் வருந்துவதாக அவர் கூறுகிறார்.
 
"நல்ல - கெட்ட தருணங்கள், மகிழ்ச்சி - துன்பம் உள்ளிட்டவற்றை நாங்கள் பகிர்ந்து கொண்டுள்ளோம். அச்சம் என்பது எப்போதோ எங்களது வாழ்வின் ஓர் அங்கமாக மாறிவிட்டது" என்று கூறுகிறார் சலாஹ்.
 
கஃபார் நபில் நகரத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் நேரம் வரும்போது, தானும், மற்றவர்களும் இயன்ற அளவுக்கு பூனைகளையும் உடன் அழைத்து செல்வோம் என்று அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
 
கோரமான போர் ஏற்படுத்தும் பாதிப்புகள், இந்த நகரத்திலுள்ள மனிதர்கள் மற்றும் பூனைகளுக்கிடையே இருக்கும் பிணைப்பை அவ்வளவு எளிதில் முறித்துவிட முடியாது என்பது மட்டும் திண்ணம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்