JNU தாக்குதல்- நேற்று மாலை என்ன நடந்தது? - விவரிக்கும் தமிழ் மாணவர் #JNUAttack
திங்கள், 6 ஜனவரி 2020 (14:04 IST)
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள், அங்கிருந்த ஆசிரியர்கள், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
நேற்று மாலை அங்கு என்ன நடந்தது என்று பிபிசி தமிழ் செய்தியாளர் மு. நியாஸ் அகமதுவிடம் விவரிக்கிறார் தமிழகத்தை சேர்ந்த ஆய்வு மாணவரான தமிழ் பரதன்.
"ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று மாலை 6.30 மணி அளவில் முகமூடி அணிந்த குண்டர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் வந்தனர். மாணவர்கள் போராட்டம் நடத்துவதற்காகக் குழுமி இருந்த மாணவர்கள் மீது கற்களை வீசினர், கிரிக்கெட் மட்டை மற்றும் பெரிய ராடுகள் கொண்டும் மாணவர்களை தாக்கினர்." என்று தமிழ் பரதன் கூறினார்.
"ஜே.என்.யூ போராட்டம் என்பது நேற்று தொடங்கிய போராட்டம் அல்ல. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டண உயர்வை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே, இருந்த கட்டணம் பல மடங்கு அளவு உயர்த்தப்பட்டது. அதனை எதிர்த்துத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர். ஏறத்தாழ மூன்று மாதங்களுக்கு மேலாக இந்தப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதன் காரணமாகப் பல மாணவர்கள் பருவத் தேர்வு எழுதவில்லை. அதாவது பருவ (செமஸ்டர்) தேர்வை புறகணித்துவிட்டனர். ஜனவரி 1 - 5 இடையே பருவ பதிவு நடந்தது. பருவ பதிவு செய்தவர்கள் மட்டும்தான் பல்கலைக்கழகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற கட்டளையையும் இட்டிருந்தனர். ஆனால், சில மாணவர்கள் மட்டும்தான் கட்டணம் செலுத்தி பருவ பதிவு செய்திருந்தனர். பருவ கட்டணம் செலுத்த நேற்று இறுதி நாள் என்றதால் பல்கலைக்கழகத்தில் சில அலுவலகங்கள் இயங்கின. பேராசிரியர்களும் வந்திருந்தனர்.
அக்டோபர் மாதம் தொடங்கிய மாணவர் போராட்டத்தை அடுத்து கல்விக்கட்டணமானது பகுதியளவு குறைக்கப்பட்டது. ஆனால், மாணவர்கள் முழுவதுமாக குறைக்க வேண்டும் என போராடினர்.
இதன் ஒரு பகுதியாகதான் மாணவர்கள் நேற்றும் போராட்டத்தை முன்னெடுத்தனர். ஏறத்தாழ 200 மாணவர்கள் பேரணியாக செல்ல திட்டமிட்டிருந்தனர்.
அமைதியாகப் போராட்டம் நடத்தக் குழுமி இருந்த மாணவர்கள் மீது மாலை 6.30 மணி அளவில் இந்தத் தாக்குதல் நடந்தது. ஏறத்தாழ 50க்கும் அதிகமான முகமூடி அணிந்த குண்டர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து தாக்கினர். அவர்கள் வலதுசாரி அமைப்பை சேர்ந்தவர்கள் என இப்போது கூறப்படுகிறது.
முதலில் கற்களைக் கொண்டு மாணவர்களைத் தாக்கிய அவர்கள். மாணவர்கள் சிதறுண்டு ஓடிய பின் அணி அணியாக பிரிந்து மாணவர்களைத் துரத்தித் துரத்தி தாக்கினர். மாணவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் நிலவும் ஜனநாயக சூழலைக் குலைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தாக்கினர்"என்று அவர் குறிப்பிட்டார்.
எங்கெங்கெல்லாம்தாக்குதல்நடைபெற்றது?
சபர்மதி விடுதி, தபதி விடுதி, உணவகம் ஆகிய இடங்களைக் குறிவைத்துத் தாக்கினர். இன்றிலிருந்து பல்கலைக்கழகம் இயங்க வேண்டும். சூழல் இப்படியாக இருக்கும்பட்சத்தில் எப்படி இனி கல்லூரி இயங்கும் என்ற அச்சம் நிலவுகிறது.
வேதனை அளிக்கிறது
இப்படியான சூழலில், மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் திங்கள்கிழமை காலையில் ஏஎன்ஐ செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில், இடதுசாரி மாணவர்கள் ஜே. என். யு வை ரௌடிகளின் மையமாக மாற்றிவிட்டனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாக்குதல் குறித்து ஜே.என்.யு வின் துணை வேந்தர் ஜெகதீஷ் குமார், இவ்வாறு மாணவர்கள் தாக்கப்பட்டது மிகுந்த வேதனையளிக்கிறது. பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த எவ்வித வன்முறை சம்பவங்களையும் ஜே.என்.யு நிர்வாகம் கண்டிக்கிறது என ட்விட்டரில் பதிவு செய்திருந்தார்.