குவைத்: இணையத்தில் நடைபெற்ற அடிமை வர்த்தகம் - பிபிசி வெளிப்படுத்திய குற்றவாளிகள் மீது நடவடிக்கை

சனி, 2 நவம்பர் 2019 (21:25 IST)
ஓவென் பின்நெல் & ஜெஸ் கெல்லி
 
இன்ஸ்டாகிராம் உள்பட ஆப்-களில் இளம் பெண்கள் விற்கப்படுகின்றனர்.
வீட்டு பெண் வேலையாட்களை அடிமைகளைப் போல விற்பதற்கு சமூக வலைதள கணக்குகளை பயன்படுத்தியவர்களை நேரில் அழைத்து விசாரிப்பதற்கான அதிகாரபூர்வ ஆணையை அனுப்பியுள்ளதாக குவைத் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
பிபிசியின் அரபிக் சேவை நடத்திய புலனாய்வில், இணையத்தில் அடிமை வர்த்தக சந்தை என்பது செயலிகள் மூலமாக நடைபெற்று வருவதை கண்டறிந்தது. இந்த அடிமை வர்த்தக சந்தை, ஃபேஸ்புக்குக்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் உட்பட கூகுள், ஆப்பிள் செயலிகள் மூலமும் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
 
"இடமாற்றத்திற்கு பெண் வீட்டு வேலையாள்" அல்லது "விற்பனைக்கு பெண் வீட்டு வேலையாள்" என்று பொருள்படும் ஹாஷ்டேக்குகள் மூலம் பெண் வீட்டு வேலையாட்கள் விற்கப்பட்டுள்ளனர்.
 
இத்தகைய செயலில் ஈடுபட்டோர் இது தொடர்பாக வெளியிட்ட விளம்பரங்களை உடனடியாக அகற்றிவிட ஆணையிடப்பட்டுள்ளதாக குவைத் அதிகாரிகள் கூறுகின்றனர்.
 
சம்பந்தப்பட்டவர்கள் இத்தகைய செயல்பாடுகளில் இனிமேலும் ஈடுபடமாட்டோம் என்று சட்ட ஆவணம் ஒன்றில் அவர்கள் கட்டாயம் கையெழுத்திட வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பிபிசி தங்களை தொடர்பு கொண்ட பிறகு, இத்தகைய செயல்பாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளதாக இன்ஸ்டாகிராம் கூறியுள்ளது.
 
இது தொடர்பான உள்ளடக்கங்களை ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிலிருந்து நீக்கியுள்ளதாகவும், இணைய அடிமை வர்த்தக சந்தைக்கு வடிவமைக்கப்படும் புதிய கணக்குகள் தடுக்கப்படும் என்றும் அது கூறியுள்ளது.
 
நிறுவனங்களின் நடவடிக்கையை தொடர்ந்து, பெண் வீட்டு வேலையாட்களை வாங்கவும், விற்கவும் பயன்படுத்தப்பட்ட பிரபலமான பல கணக்குகளின் செயல்பாடு நிறுத்தப்பட்டுள்ளதாக தோன்றுகிறது.
 
சட்டவிரோதமாக கொண்டுவரப்படும் ஆயிரக்கணக்கான பெண்கள் வீட்டு பணிப்பெண்களாக விற்கப்படுகின்றனர்
 
பிபிசி புலனாய்வில் இடம்பெற்றிருந்த கினி நாட்டை சேர்ந்த 16 வயது பெண் ஒருவர் செயலி மூலம் விற்கப்பட்டிருந்தார். அவரை ஃபதூ என்றழைக்கும் குவைத் அதிகாரிகள், அப்பெண்ணை விற்றது யார் என்பது குறித்து விசாரித்து வருவதாக குவைத்தின் மனிதவளத் துறையின் தலைவர் டாக்டர் முபாரக் அல்-அசிமி தெரிவித்துள்ளார்.
 
அதிகாரிகள் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள போலீஸ் அதிகாரியையும் விசாரித்து வருகின்றனர்.
 
இந்த விசாரணையால் இந்த சம்பவத்தில் ஈடுபட்டோர் கைது செய்யப்படலாம். பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கப்படலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
ஃபதூ வழக்கில் வாதாடும் சர்வதேச வழக்கறிஞரான கிம்பெர்லே மோட்லெ இது பற்றி கருத்து தெரிவிக்கையில், "பதூவுக்கு இந்த செயலியை உருவாக்கியவர்கள் கட்டாயம் இழப்பீடு வழங்க வேண்டும். ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள்கூட இழப்பீடு வழங்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
 
இது ஆன்லைன் அடிமை வர்த்தகம் என்று ஐநாவின் சிறப்பு அலுவலர் உர்மிலா பூலா தெரிவிக்கிறார்.
 
ஃபதூவை குவைத்துக்கு கடத்தி சென்றதில் ஈடுபட்டோருக்கு எதிராக குற்றவியல் நடைமுறைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
தங்களின் தளங்கள் மூலம் நடைபெறும் சட்டவிரோத செயல்பாடுகளை தடுக்க ஆப் வடிவமைப்பவர்களோடு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
 
வளர்ந்து வரும் கள்ள சந்தையில், பெண் வீட்டு வேலையாட்கள் சட்டவிரோதமாக பணத்திற்கு வாங்கப்பட்டு, விற்கப்படுவதை தங்கள் புலனாய்வில் கிடைத்த தகவல்களை பிபிசி அரபிக் சேவை கடந்த வியாழக்கிழமை அன்று வெளிப்படுத்தியது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்