நேரடி மோதலுக்கு 'துணிவு' காட்டிய 'வாரிசு' - காத்திருந்து ரிலீஸ் தேதி மாற்றப்பட்டதா?

வெள்ளி, 6 ஜனவரி 2023 (10:07 IST)
வாரிசு திரைப்படத்தின் டிரைலர் வெளியான சில நிமிடங்களில் துணிவு படத்தின் ரிலீஸ் தேதியை அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் சமூக வலைதளத்தில் அறிவித்தார். வாரிசு படத்தின் தயாரிப்பு நிறுவனமும் உடனடியாக படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தனர். இந்த அடுத்தடுத்த அறிவிப்புகளால் அஜித்-விஜய் ஆகியோரின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். 
 
அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளதால் இருதரப்பு ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். 
 
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு நடிகர் அஜித்தும் இயக்குநர் ஹெச்.வினோத்தும் இணைந்துள்ள 3வது திரைப்படம் துணிவு. முந்தைய இரு படங்களையும் தயாரித்த போனி கபூரே துணிவுப் படத்தையும் தயாரித்துள்ளார். மஞ்சு வாரியர், ஜான் கொக்கென், யோகிபாபு, மகாநதி சங்கர் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
மறுபக்கம், நடிகர் விஜய் தெலுங்கில் பிரபல இயக்குநராக உள்ள வம்சி பைடிபள்ளியுடன் இணைந்துள்ள வாரிசு திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்கள் தவிர, சரத்குமார்,  பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஷாம், ஸ்ரீகாந்த், யோகி பாபு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
 
அஜித் ரசிகர்களுக்கான புத்தாண்டு பரிசாக துணிவுப் படத்தின் டிரைலரை டிசம்பர் 31ஆம் தேதி தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. வங்கிக் கொள்ளையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அஜித்தின் தோற்றம், டிரைலரில் இடம்பெற்றிருந்த வசனங்கள் ஆகியவை மிக சிறப்பாக வந்துள்ளதாக அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 
 
குறிப்பாக டிரைலரில், ஹீரோ போன்று நடிக்க வேண்டாம், அந்த வேலையை நான் பாத்துக்கிறேன்` என அஜித் பேசியுள்ள பஞ்ச் வசனமும் வெகுவாக கவர்ந்துள்ளதாக அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.  இதுவரை 53 மில்லியன் பார்வைகள் துணிவு படத்தின் டிரைலர் பெற்றுள்ளது. 
 
இந்நிலையில், ஜனவரி 1ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட வாரிசு திரைப்படத்தின் டிரைலர் ஜனவரி 4ஆம்தேதி மாலை யூடியூப்பில் வெளியிடப்பட்டது. `ஃபேமலி ஆடியன்ஸ்`ஐ குறிவைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது டிரைலர் மூலம் தெரியவருகிறது. இதனுடன் விஜய்க்கே உண்டான நகைச்சுவை, ஆக்‌ஷன், ரொமான்ஸ், பஞ்ச் டயலாக் ஆகியவையும் வாரிசு படத்தில் இடம்பெற்றுள்ளதாக அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். 
 
அடுத்தடுத்து வெளியான அப்டேட்கள்
வாரிசு படத்தின் டிரைலர் வெளியானதை தொடர்ந்து வாரிசு, வாரிசு டிரைலர் ஆகிய ஹேஷ்டேக்களை அவரது ரசிகர்கள் டிவிட்டரில் டிரெண்ட் ஆக்கினர். இதனிடையே, வாரிசு டிரைலர் வெளியான சில நிமிடங்களிலேயே துணிவு படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், ஜனவரி 11ஆம் தேதி  துணிவு வெளியாகும் என்ற அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதையடுத்து, துணிவு, துணிவுப் பொங்கல் போன்ற ஹேஷ்டேக்களை அஜித் ரசிகர்கள் டிரெண்ட் செய்ய தொடங்கினர். 
 
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
Twitter பதிவின் முடிவு, 1
துணிவுப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே வாரிசு படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ்,  ஜனவரி 11ஆம் தேதி உலகம் முழுவதும் வாரிசுப் படம் வெளியாகும் என்ற அறிவிப்பை வெளியிட்டது.
 
இதையடுத்து, வாரிசு பொங்கல் என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். ஒரே நாளில் துணிவு, வாரிசு ஆகிய இரண்டு படங்களின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டதால் இருதரப்பு ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர். 
 
முன்னதாக 12-ஆம் தேதி படம் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதனால் துணிவு படத்தின் வெளியீட்டு அறிவிப்பை பார்த்துவிட்டு வாரிசு படக்குழு தேதியை மாற்றியதா என்று கேள்வி எழுந்தது.
 
இதற்கு முன்பு நேரடியாக மோதியது எப்போது?
1996ல் அஜித் நடித்த வான்மதி படமும் விஜய் நடித்த கோயம்புத்தூர் மாப்பிள்ளை படமும் பொங்கலுக்கு வெளியாயின. இதுதான், அஜித் - விஜய் திரைப்படங்கள் ஒரே சமயத்தில் ரிலீஸாகிய முதல் தருணம். இரண்டு படங்களுமே வெற்றிபெற்றன.
 
இதை தொடர்ந்து பூவே உனக்காக - கல்லூரி வாசல், நேசம்- காலமெல்லாம் காத்திருப்பேன், அஜித் கௌரவ வேடத்தில் நடித்திருந்த உன்னிடத்தில் என்னை கொடுப்பேன் - விஜயின் நிலாவே வா, உன்னைக் கொடு என்னைத் தருவேன் - குஷி, ஃப்ரண்ட்ஸ்- தீனா, வில்லன் - பகவதி,  திருமலை- ஆஞ்சநேயா, ஆதி- பரமசிவன், போக்கிரி- ஆழ்வார் ஆகிய திரைப்படங்கள் ஒன்றாக மோதியுள்ளன. 
 
கடைசியாக 2014ஆம் ஆண்டில் விஜய் நடித்த படமும் அஜித் நடித்த படமும் பொங்கலின்போது ஒரே நேரத்தில் வெளியாகின. விஜய் நடித்த ஜில்லா திரைப்படம் 2014 ஜனவரி 9ஆம் தேதியும் அஜித் நடித்த வீரம் திரைப்படம் ஜனவரி பத்தாம் தேதியும் வெளியானது. இந்த இரு படங்களுமே சுமார் 80 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்ததாக அப்போது பேசப்பட்டது. ஆனால், வீரம் படத்தைவிட ஜில்லா படத்தின் தயாரிப்புச் செலவு அதிகம் என்பதால், வீரம் படத்திற்கே லாபம் அதிகம் என அஜித் ரசிகர்கள் கொண்டாடினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்