கொரோனா வைரஸ் பாதிப்பால் களையிழந்த ‘மலைகளின் ராணி’ - முடங்கிய ஊட்டி சுற்றுலாத்தளங்கள்
வெள்ளி, 15 மே 2020 (16:05 IST)
தமிழகத்தின் மிக முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான மலைகளின் ராணி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி, ஊரடங்கு உத்தரவால் தற்போது களையிழந்து காணப்படுகிறது.
ஊட்டியில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்பட்டிருப்பதால் சுற்றுலாத்துறையை நம்பியிருந்த ஏராளமானோர் வருவாய் இழந்துள்ளனர்.
இது குறித்து பிபிசி தமிழுடன் வாகனசேவை நிறுவன உரிமையாளர் பாபு பேசுகையில், "கடந்த 28 ஆண்டுகளாக ஊட்டியில் வாகன சேவை நிறுவனம் நடத்தி வருகிறேன். வருடத்தின் 60 முதல் 70 சதவீத சுற்றுலாப்பயணிகள் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில்தான் ஊட்டிக்கு வருவார்கள்.
இந்த மாதங்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை வெளிமாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகளை அழைத்து வருவது, பல்வேறு சுற்றுலா தளங்களுக்கு பயணிகளை அழைத்துச் செல்வது மீண்டும் அவர்களை தங்கும் விடுதிகளில் இறக்கி விடுவது என மிகவும் பரபரப்பாக இயங்கி வருவோம்.
ஆனால், இந்த ஆண்டு நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. சுற்றுலாதளங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகளின் வருகை முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. பொதுவாக பந்த் நாட்களில் மட்டுமே ஊட்டி வெறிச்சோடி காணப்படும்.
ஆனால், கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஊட்டியில் ஆள் நடமாட்டமே இல்லை. ஆயிரக்கணக்கானோர் திரண்டு நிற்கும் ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையை வெறிச்சோடி காண்பது மனதுக்கு வேதனை அளிக்கிறது." என வருத்தத்தோடு தெரிவித்தார்.
"எனது நிறுவனத்தில் 25 வாகனங்கள் உள்ளன. 30க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் பணியாற்றி வருகின்றனர். ஊரடங்கு உத்தரவால் வருவாய் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர்களுக்கு கையிலிருந்த தொகையை சம்பளமாக வழங்கி தக்கவைத்து வருகிறோம். ஓட்டுநர்கள் பெரும்பாலானோர் வறுமையின் காரணமாக தேயிலை தோட்டங்களுக்கு தினக் கூலிகளாக சென்றுவிட்டனர். இந்த நிலை எப்போது மாறும் என தெரியவில்லை. ஊரடங்கால் ஊட்டியின் சுற்றுலாத்துறை வருவாய் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது." என்கிறார் பாபு.
நீலகிரி மாவட்டத்தில் சட்ட ரீதியில் செயல்படும் சுமார் 500 தனியார் விடுதிகள் உள்ளன. இவற்றில், 200-க்கும் மேற்பட்ட விடுதிகள் ஊட்டியில் அமைந்துள்ளன. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் இவை அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் சுற்றுலாத்துறை வருவாயை அதிகம் பெற்று தரும் முக்கியமான மாதங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கிறார் நீலகிரி ஹோட்டல் உரிமையாளர் சங்கப் பிரதிநிதி சந்திரசேகர்.
"ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் கிடைக்கும் வருவாயை வைத்து தான், சீசன் இல்லாத அடுத்த சில மாதங்களை சமாளிப்போம். இந்த ஆண்டு சீசனுக்காக ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருவார்கள் என்ற நம்பிக்கையில் ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதி நிறுவனங்கள் தயார்நிலையில் இருந்தன.
ஆனால், எதிர்பாராதவிதமாக கொரோனா நோய் தொற்று வெடித்தது. இதனால் மார்ச் 15ஆம் தேதி முதல் ஊட்டியில் சுற்றுலா பயணிகளின் வருகை நிறுத்தப்பட்டது. ரோஜா தோட்டம், படகு இல்லம், தொட்டபெட்டா காட்சிமுனை என அனைத்து சுற்றுலாதளங்களும் மூடப்பட்டன. சுற்றுலா பயணிகளை மட்டுமே நம்பியிருந்த ஹோட்டல் மற்றும் விடுதி உரிமையாளர்கள் பெரிய ஏமாற்றம் அடைந்துள்ளோம்" என்கிறார் இவர்.
"எனது ஹோட்டலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். வேலை மற்றும் வருவாய் இல்லையென்றாலும் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுத்தாக வேண்டும். மின் கட்டணம், வங்கி கடன், பணியாளர்கள் சம்பளம் ஆகியவற்றை இன்னும் எத்தனை மாதங்களுக்கு வருவாய் இல்லாமல் சமாளிக்க முடியும் என தெரியவில்லை. ஊட்டியில் இயல்புநிலை திரும்பினாலும் கொரோனா அச்சுறுத்தலால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும்" என கூறுகிறார் சந்திரசேகர்.
நீலகிரிக்கு வருகைதரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் ஊட்டியில் தயாரிக்கப்படும் சாக்லேட்டுகளை விரும்பி வாங்கிச் செல்வர். தற்போது, அமலில் உள்ள ஊரடங்கால் சாக்லெட் தயாரிப்புப்பணி முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
"ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இங்கு தயாரிக்கப்படும் சாக்லெட் வகைகளை விரும்பி வாங்கிச்செல்வர். இந்த ஆண்டு சீசனுக்காக எனது நிறுவனத்தில், 300 கிலோவிற்கு சாக்லெட்டுகள் தயாரித்து வைத்திருந்தோம். சுற்றுலாப் பயணிகள் வராததால், தயாரிக்கப்பட்ட சாக்லெட்டுகள் விற்பனையாகவில்லை.
ஒரு மாதத்திற்கும் மேலாக தேக்கி வைக்கப்பட்டதால் சாக்லெட்டுகள் அனைத்தும் கெட்டுவிட்டன. இதுமட்டுமின்றி சாக்லெட் தயாரிப்பிற்காக வாங்கப்பட்ட பட்டர், சீஸ் மற்றும் ஐஸ்கிரீம் ஆகியவை அனைத்தும் பயன்படுத்தப்படாததால், அவையும் கெட்டுவிட்டன." என்கிறார் சாக்லெட் தயாரிப்பாளர் முரளிதரன் ராவ்.
"ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சுப நிகழ்வுகளுக்காக அதிக அளவில் சாக்லெட் விற்பனையாகும், ஊரடங்கால் நிகழ்வுகள் அனைத்தும் எளிமையாக நடத்தப்படுவதால் சாக்லெட்டுகள் விற்பனையாகவில்லை. ஊட்டியில் மீண்டும் எப்போது சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என காத்திருக்கிறோம். மீண்டும், விற்பனையை துவங்கினாலும் இந்த மாதங்களில் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய பல மாதங்களாகும்" என தெரிவிக்கிறார் இவர்.
ஆண்டுதோறும் கோடைவிழா கொண்டாட்டத்திற்காக ஊட்டியில் உள்ள ரோஜா பூங்கா, தாவரவியல் பூங்கா மற்றும் படகு இல்லங்களில் சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படும். இந்த ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகள் அனைத்தும் கொரோனா அச்சுறுத்தலால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் தெரிவிக்கப்படுகிறது.
தோட்டக்கலைத்துறை துனை இயக்குனர் சிவசுப்பிரமணியம் கூறுகையில், "இந்த ஆண்டு மே மாதம் முழுவதும் கோடை விழா நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மே முதல் வாரம் கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி, அடுத்தடுத்த வாரங்களில் ரோஜா கண்காட்சி, மலர் கண்காட்சி, பழங்கள் கண்காட்சி மற்றும் படகு சவாரி ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
குறிப்பாக, ரோஜா பூங்காவில் 25வது ரோஜா மலர் கண்காட்சி மற்றும் தாவரவியல் பூங்காவில் நடைபெறவிருந்த 124வது மலர் கண்காட்சிக்கு சுமார் 5 லட்சக்கிற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என காத்திருந்தோம்" என்கிறார்.
மேலும், ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா திறக்கப்பட்ட நாள் முதல், தற்போது தான் முதல்முறையாக அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் இவர்.
கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மருத்துவர்கள், செவிலியர்கள், வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் தாவரவியல் பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மலர் கண்காட்சியை பார்வையிட அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும், சுற்றுலாப்பயணிகள் வராததால் ஊட்டி மட்டுமின்றி, நீலகிரி மாவட்டத்தையொட்டி அமைந்துள்ள கோவை மற்றும் மைசூர் நகரங்களில் உள்ள ஹோட்டல்கள், தனியார் விடுதிகள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள் அனைத்தும் வருவாய் இழந்துள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் மே 13 ஆம் தேதி வரை 14 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 11 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்