பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்களை படம் பிடித்து விற்கும் கொடூரம் - அம்பலப்படுத்திய பிபிசி
வெள்ளி, 9 ஜூன் 2023 (21:23 IST)
கிழக்காசிய நாடான ஜப்பானில் ரயில் பயணம் செய்யும் பெண்களின் உடலை, அவர்களின் அனுமதியின்றி, உள்நோக்குடன் தொடுவது, வருடுவது போன்ற செயல்களில் ஆண்கள் ஈடுபடும் போது, அக்காட்சியைப் படம் பிடித்து விற்பனை செய்யும் ஒரு கும்பல் செயல்பட்டு வருகிறது.
பிபிசியின் புலனாய்வு பிரிவான பிபிசி ஐ (BBC Eye), இது தொடர்பான குற்றவாளிகளை ஓராண்டாகக் கண்காணித்து அந்த ஆண்களின் முகமூடியை அகற்றி அவர்களை உலகுக்கு அடையாளம் காட்டியுள்ளது.
டோக்கியோ நகரின் ஒரு காலை நேரம் அது. ரயில்கள் பயணிகளால் நிரம்பி வழிந்தன.
டகாகோ (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்ற 15 வயது மாணவி ஒரு ரயிலில் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது ரயிலில் உள்ள கம்பியைப் பிடித்தவாறு அவர் நின்றுகொண்டிருந்தார்.
திடீரென ஒரு கை அவருடைய பின்பகுதியை அழுத்தியதை அவர் உணர்ந்தார். யாரோ ஒருவர் தற்செயலாக அது போல் கையை வைத்து அழுத்தியதாக அவர் அப்போது நினைத்தார்.
ஆனால், அந்தக் கை அவருடைய உடலைத் தடவிக்கொண்டே இருந்தது.
"கடைசியில்தான் எனக்கு அது புரிந்தது. அதுவொரு பாலியல் துன்புறுத்தல்," என அந்தக் கொடூர சம்பவத்தை டகாகோ நினைவுகூர்ந்தார்.
அப்படி டகாகோவின் உடலை வருடிக்கொண்டிருந்த அந்தக் கை, திடீரென கூட்டத்தில் கலந்து மறைந்து போனது. "அந்த நேரத்தில் தன்னால் எதுவும் செய்யமுடியவில்லை," என்கிறார் டகாகோ. அன்று பள்ளிக்கு வந்த டகாகோவின் கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது.
பொது இடம் ஒன்றில் தன் மீது பாலியல் தாக்குதல் நடத்தப்படுவதை அவர் அப்போதுதான் முதல் முறையாக எதிர்கொள்கிறார். ஆனால், அதறகுப் பிறகு தொடர்ந்து ஓராண்டு காலத்துக்கு டகாகோ இதுபோன்ற தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்.
ஏராளமான நாட்களில் இரவு நேரத்தில் அவர் படுக்கைக்குச் சென்றபோது கண்ணீருடனேயே படுக்கும் நிலை ஏற்பட்டது.
அந்த நேரங்களில், "வாழ்க்கையில் இருந்த அனைத்து நம்பிக்கையையும் நான் இழந்துவிட்டேன். எந்தப் பிடிப்பும் இல்லாதது போல் தோன்றியது," என்கிறார் அவர்.
டகாகோவை போல ஏராளமான பெண்கள் இப்படி பொது இடங்களில் பாலியல் துன்பங்களுக்கு உள்ளாகின்றனர். இதில் ஒரு சில பெண்கள், இந்தத் துன்புறுத்தலைத் தாண்டி மேலும் பல கொடூரங்களை எதிர்கொள்ளும் நிலை காணப்படுகிறது.
இந்தப் பெண்கள் பொதுவெளியில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும்போது, அதை வீடியோவாக பதிவு செய்யும் சிலர் அந்தக் காணொளிகளை இணையத்தில் விற்பனை செய்வதால் அவர்கள் மேன்மேலும் துன்பத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்படுகிறது.
டோக்கியோவில் உள்ள மெட்ரோ ரயில்கள் ஒரு சில இடங்களில் எதிர்பாராத அளவுக்குக் கூட்டமாக இருக்கும்
பெரும்பாலான வீடியோக்கள் ஒரே மாதிரிதான் எடுக்கப்படுகின்றன. ஒரு பெண்ணை ரகசியமாக வீடியோ எடுக்கும் நபர், அந்தப் பெண் ரயிலில் பயணம் செய்யும்போதும் அவரைப் பின்தொடர்கிறார்.
சில விநாடிகளில் அந்தப் பெண்ணை, தற்செயலாக இடிப்பதுபோல் இடிப்பது, அவரது உடலை வருடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு அதையும் வீடியோவில் பதிவு செய்கிறார்.
பின்னர் இக்காட்சிகள் இணையதளம் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. இதுபோன்ற காட்சிகளை விற்பனை செய்வதற்கென்றே மூன்று இணையதளங்கள் செயல்பட்டு வருகின்றன.
ஒரு தொற்று நோய் போல மாறிய பழக்கம்
ஓராண்டாக விசாரணை செய்து, இந்த மூன்று இணையதளங்களுக்குப் பின்னால் இருந்து இயக்கும் நபர்களை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம்.
இந்த நபர்கள்தான் இதுபோல் பெண்களைத் தவறாகப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான வீடியோக்களை எடுத்து அவற்றை இணையதளம் மூலம் விற்பனை செய்கின்றனர்.
இதுபோன்ற துன்புறுத்தலை பெரும்பாலும் தினமும் எதிர்கொள்ளும் டகாகோ, பயம் காரணமாக அந்த நேரங்களில் அதைப் பற்றிப் பேச முடியாமல் தவிக்கிறார்.
ஆனால் ஒவ்வோர் இரவும் தூங்குவதற்கு முன்பு அவரது வாயை ஒரு துண்டினால் மூடிக்கொண்டு, பாலியல் துன்பம் அளிக்கும் நபரை எப்படி அழைப்பது எனப் பல சொற்களைப் பயன்படுத்திப் பார்த்து, அதில் ஒரு சொல்லைத் தேர்வு செய்திருக்கிறார்.
"இந்த நபரை 'சிகான்' (Chikan) என அழைப்பதே சரியாக இருக்கும்!"
"சிகான்" என்ற ஜப்பானிய மொழிச் சொல்லுக்கு, பொது இடங்களில் பெண்களுக்கு பாலியல் துன்பம் அளிப்பவன் எனப் பொருள். அதிலும் குறிப்பாக பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் பெண்களை பாலியல் ரீதியாக தடவும் செயல்களைக் குறிக்கும் சொல்தான் இது. இதுபோன்ற குற்றவாளிகளைக் குறிப்பிடுவதற்கும் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது.
இதுபோல் பெண்களைத் தடவும் குற்றவாளிகள் கூட்டமாக இருக்கும் சூழ்நிலைகளையும், பெண்களின் அச்சத்தையும் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்கின்றனர். ஜப்பானில் நேரடியாகவும், வெளிப்படையாகவும் பேசுவது ஒரு முரட்டுத்தனமான செயலாகக் கருதப்படுகிறது.
சிகான் குற்றங்களில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான நபர்கள் ஒவ்வோர் ஆண்டும் கைது செய்யப்படுகின்றனர். ஆனால் பெரும்பாலும் இதுபோன்ற குற்றவாளிகள் கண்டறியப்படுவதில்லை என்பது மட்டுமல்லாமல் அவர்கள் தண்டிக்கப்படும் வாய்ப்புகளும் இல்லை.
மேலும், இதுபோன்ற குற்றங்கள் குறித்து வெறும் பத்து சதவீத பெண்கள் மட்டுமே புகாரளிக்கின்றனர் என சிகான் குறித்து ஒரு புத்தகத்தை எழுதியவரும், மனநல மருத்துவருமான செய்ட்டோ அகியோஷி தெரிவிக்கிறார்.
இதுபோன்ற குற்றங்களில் பாதிக்கப்படும் பெண்கள் அதுகுறித்துப் பேசவேண்டும் என்றும், புகாரளிக்க முன்வர வேண்டும் என்றும் ஜப்பான் போலீசார் ஊக்குவிக்கின்றனர்.
இருப்பினும், இந்தக் குற்றத்தை ஒழிப்பது என்பது இன்னும் வெகுதொலைவில் இருக்கும் நிலையாகவே பார்க்கப்படுகிறது.
ஜப்பானில் இந்தக் குற்றங்கள் சர்வசாதாரணமாக நடைபெறும் நிலையில், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் தங்கள் நாட்டுப் பெண்கள் ஜப்பானுக்கு பயணம் மேற்கொள்ளும்போது இதுகுறித்து எச்சரித்து அனுப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளன.
ஜப்பான் இளைஞர்களின் பொழுதுபோக்குத் துறையில் முக்கியத்துவம் பெற்றுள்ள இந்த சிகான் வீடியோக்கள், தற்போது ஓீ இயல்பான வழக்கமாக மாறிவிட்டன. இதுதான் அந்நாட்டின் முன்னணி ஆபாசப் படமாகவும் பெரும்பாலனோரால் பார்க்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த சிகான அண்டை நாடுகளுக்கும் பரவி வருகிறது.
பதின்ம வயதில் ரயில் பயணத்தின்போது பாலியல் தாக்குதலுக்கு உள்ளான டகாகோ, அது போன்ற ஆபத்து இருப்பதை எடுத்துக் காட்டும் பேட்ஜ் ஒன்றை அணிந்திருக்கிறார்
சீன மொழியில் செயல்படும் டிங்புஜு (DingBuZhu- சீன மொழியில் இதன் பொருள், "என்னால் காத்திருக்க முடியாது.") என்ற இணையதளமே உடனடியாக எங்கள் கவனத்தை ஈர்த்தது.
இது, கூட்டம் அதிகமாக இருக்கும் ரயில், பேருந்து போன்ற இடங்களில் ரகசியமாக செல்ஃபோன்களில் பதிவு செய்யப்பட்ட சிகான் வீடியோக்களை விற்பனை செய்யும் ஓர் இணையதளமாக இருக்கிறது. சிகான் வீடியோக்கள் ஜப்பான், தென்கொரியா, தைவான், ஹாங்காங் உள்ளிட்ட சீனாவின் உள்நாட்டுப் பகுதிகள் போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் காட்சிப்படுத்தப்பட்டவையாக இருக்கின்றன.
சில வீடியோக்கள் ஒரு டாலருக்கும் குறைவான விலையில் கிடைக்கின்றன. இந்த இணையதளம் ஒருமுறை இதுபோன்ற மோசமான வீடியோக்களுக்கு ஆர்டர் அளிக்கவும் வாடிக்கையாளர்களை அனுமதித்தது.
DingBuZhu இணையதளத்திலிருந்து மேலும் இரண்டு இணையதளங்களுக்குச் செல்லும் வழிகாட்டிகளும் அங்கே இருந்தன. சிஹான் மற்றும் ஜியேஷே (Chihan and Jieshe ) என்ற அந்த இரண்டு இணையதளங்களிலும் இதுபோன்ற வீடியோக்களே இருந்தன.
கிருஷ்ணர் ஆட்சி செய்த 'துவாரகை' உண்மையில் இருந்ததா? – கடலில் மூழ்கிய ஒரு நகரத்தின் தேடல்
டெலிகிராமில் 4,000 பேர் அடங்கிய குழு ஒன்றில் பெண்களை எப்படி பாலியல்ரீதியாக இதுபோல் பயன்படுத்தலாம் என்பதற்கான ஆலோசனைகள் அளிக்கப்பட்டிருக்கின்றன.
சிகான் இணையதளங்களில் ஒரு பெயர் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது "Uncle Qi"
அவர்தான் இந்த வீடியோக்களை அதிக அளவில் உருவாக்கும் சமூகத்தின் குரு எனப் போற்றப்பட்டார். ஏராளமான வீடியோக்களில் அவரது பெயர்தான் இருந்தன. ட்விட்டரில் அவர் தனது வீடியோக்களின் ஒரு சிறுபகுதியை தன்னைப் பின்தொடரும் 80,000 பேருக்காகப் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால் யார் அவர்
நாங்கள் கண்காணித்து வந்த டெலிகிராம் குழு ஒரு முக்கியத் தகவலை எங்களுக்குக் கொடுத்தது. ஒரு நாள் அக்குழுவில் தொடர்ந்து ஏராளமான பதிவுகளை இட்ட நபர், அந்த "Uncle Qi"யுடன் இணைந்து ஒரு பெண்ணை இதுபோல் தவறாகப் பயன்படுத்தியதாகத் தெரிவித்தார்.
அவர் வெளியிட்ட புகைப்படங்களில் ஒரு மெட்ரோ நிலையத்தில் ஒரு பெண் நின்றுகொண்டிருந்ததைப் போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
சில மணிநேரத்தில் அது எந்த இடம் என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம். அது டோக்கியோவில் உள்ள இக்கெபுக்குரு (Ikebukuro) ரயில் நிலையம்.
இது மட்டுமின்றி, ஜப்பானில் இருந்துதான் இந்த இணையதளங்கள் செயல்பட்டு வந்தன என்பதற்கு மேலும் பல ஆதாரங்கள் எங்களுக்குக் கிடைத்தன. அந்த இணையதளங்களில் ஜப்பானிய யென்களை பெறுவதற்காக ஜி மெயிலுடன் இணைக்கப்பட்ட பே பால் கணக்கு எண்ணும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்தக் கணக்கை ஜி மெயில் கான்டாக்ட் மூலம் ஆய்வு செய்தபோது, மிகுந்த அக்கறையுடன் அதிகமாக மேக்-அப் செய்துகொண்ட ஓர் இளைஞரின் புகைப்படம் எங்களுக்குக் கிடைத்தது.
அந்தப் படத்தை வைத்து மேலும் ஆய்வு செய்தபோது, 30 வயதுடைய நோக்டிஸ் ஜாங் தான் அவர் என்பதைக் கண்டறிந்தோம். டோக்கியோ நகரில் செயல்பட்டு வரும் The Versus என்ற இசைக்குழுவில் பணியாற்றிய ஒரு முண்ணனி சீன இசைக்கலைஞர்தான் அவர் என்பதும் தெரிய வந்தது.
இணையத்தில் தேடியபோது, அது சீன ராக் பாடகரான நோக்டிஸ் எனத் தெரியவந்தது
நோக்டிஸ் ஒரு நல்ல மனிதராகவே அனைவராலும் அறியப்பட்டிருந்தார். ஆனால் அதற்குப் பின்னால் ஏதோ ஒன்று இருந்ததை நாங்கள் விரைவில் கண்டுபிடித்தோம்.
ராக் பாடகர் நோக்டிஸ் ஆபாச இணையதளங்களை உருவாக்கியதாக 2022ம் ஆண்டு தொடக்கத்தில் The Versus குழுவைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் ஒருவர் சீனாவில் செயல்படும் சமுக ஊடகமான வீபோவில் பதிவிட்டிருந்தார். நோக்டிஸுடன் லுபஸ் ஃபு என்பவர் மீதும் அவர் குற்றm சாட்டியிருந்தார்.
அந்த இணையதளங்களில் இருந்த வீடியோக்களை போன்ற காட்சிகளுடன், ஒரு நோட்டுப் புத்தகத்தில் சில கணக்குகள் எழுதப்பட்டிருந்த படங்களையும் அவர் அந்தப் பதிவில் வெளியிட்டிருந்தார்.
மேலும், இணையத்தில் நோக்டிஸ் எந்த தளங்களைப் பார்த்திருந்தார் என்பது குறித்த புகைப்படமும் அங்கே வெளியிடப்பட்டிருந்தது. அதில் சிஹான் மற்றும் ஜியேஷே (Chihan and Jieshe ) இணையதளங்களுக்கான இணைப்புகளும், அந்த இணையதளங்களின் நிர்வாகிகள் குறித்த பக்கங்களில் நோக்டிஸ் புகைப்படம் இருந்ததும் அப்பதிவில் வெளியிடப்பட்டிருந்தன.
எங்களது ரகசிய செய்தியாளரான இயான், டோக்கியோவில் ஆபாச வீடியோக்களை வெளியிட்ட இணையதளம் தொடர்பான நபர்களைச் சந்தித்தார்
நிர்வாகிகளின் முகத்திரையைக் கிழித்தல்
நமது புலனாய்வுக் குழுவினரில் ஒருவர் இசையில் மிகுந்த ஆர்வம் கொண்டவராகத் தன்னை அறிமுகம் செய்துகொண்டு, டோக்கியோ நகரில் உள்ள ரூஃப்டாப் விடுதியில் நோக்டிஸை சந்தித்தார். தன்னை இயான் என்றும் அவர் அறிமுகப்படுத்திக்கொண்டார்.
அப்போது இருவரும் இசையைப் பற்றிப் பேசினர். ஆனால் அந்தப் பேச்சு விரைவில் பாலுறவு குறித்துத் திரும்பியது. தமது நிறுவனம் ஆபாசப் படங்களைத் தயாரிப்பதாக இயான் கூறியபோது, நோக்டிஸின் புருவம் உயர்ந்தது.
இதையடுத்து, இருவரும் பல முறை சந்தித்துக்கொண்டனர். நோக்டிஸின் பிறந்த நாளைக்கூட இருவரும் ஒன்றாக இணைந்து கொண்டாடினர்.
நோக்டிஸ் தன்னுடன் இசைக்குழுவில் பணியாற்றும் லூபஸ் ஃபுவிடமும் இயானை அறிமுகப்படுத்தினார். அவரது பெயரும் அந்த இணையதளதில் இடம்பெற்றிருந்தது. அவர் ஜப்பானில் சமூகவியல் துறையில் பட்டப்படிப்பு படித்து வந்தார்.
அவர்களிடம் தொடர்ந்து பேசிய இயான், தனது நிறுவனம் ஆபாசப் படங்களை வெளியிடும் இணையதளங்களில் முதலீடு செய்ய விரும்புவதாகத் தெரிவித்து, அதைப் பற்றி அவர்களுக்கு ஏதாவது தெரியுமா என்றும் கேட்டார்.
இதற்குப் பதிலளித்த நோக்டிஸ், தனது நண்பர் ஒருவர் மூலம் இதுபோன்ற தொழில்களை மேற்கொண்டதாகத் தெரிவித்ததோடு, மயோமி என்ற அந்த நண்பர், பெருநகரங்களில் காட்சிப்படுத்திய ஆபாசப் படங்களுடன் கூடிய இணையதளங்களை நிர்வகிப்பதாகவும் தெரிவித்தார்.
பின்னர் இயான் தற்செயலாகப் பேசுவதுபோல் பேசி, DingBuZhu இணையதளம் குறித்த விவரங்களைப் பற்றிப் பேசினார்.
லூபஸ் மற்றும் நோக்டிஸ் ஆகிய இருவரும் அதைக் கேட்டு சிரித்தனர். "அதுதான் மயோமியின் இணையதளம்!" என்றனர்.
டோக்கியோவில் வசிக்கும் சீனாவை சேர்ந்த நபர் ஒருவர்தான் மயோமி என்ற பெயரில் சிகான் இணையதளத்தை நிர்வகித்து வருவதாக அவர்கள் இருவதும் தெரிவித்தனர். மேலும், மயோமி எப்போதும் தனிமையில் வசிப்பவர் என்றும் அவர்கள் கூறினர்.
அந்த இணையதளத்தின் நிர்வாகிகளாக அவர்கள் இருவரும் பணியாற்றியதைவும் அப்போது அவர்கள் ஒப்புக்கொண்டனர். பின்னர் அவர்களுடைய தொழிலைப் பற்றிப் பேசினர்.
"சீனாவில் பாலுறவு மற்றும் அது சார்ந்த இன்பங்கள் அனைத்தும் பல கட்டுப்பாடுகளுக்குள் அடக்கி வைக்கப்பட்டுள்ளன," என்றார் நோக்டிஸ். "ஆண்களில் பலர் மிகவும் காமவெறி பிடித்தவர்களாக இருக்கின்றனர். அவர்கள் எப்போதும் பெண்களை ஏமாற்றுபவர்களாகவே இருக்கின்றனர்," என்றார்.
அந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களை ட்விட்டரில் விளம்பரப்படுத்துவதே தமது வேலை என லூபஸ் தெரிவித்தார்.
இதேபோல் சில தகவல்களைத் தெரிவித்த நோக்டிஸ், இதுவரை அவர் 5,000த்துக்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளதாகவும், அதற்காக பணம் பெற்றிருந்தாலும், கூடுதலாக அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் 30 சதவிகிதத்தை எடுத்துக்கொண்டு மீதி தொகையை மயோமிக்கு கொடுத்து விடுவதாகவும் தெரிவித்தார்.
இயானையும் மயோமியுடன் சேர்த்துவிடுவதாக லூபஸ் தெரிவித்தார்.
யோக்கோஹாமா என்ற சிவப்பு விளக்கு மாவட்டத்தின் அமைதியான ஒரு பின்வழித் தடத்தில் அவர்கள் இருந்தனர். அங்கிருந்த பாலியல் விடுதிகள் காண்போரின் கண்களைக் கவரும் விதத்தில் ஒரு மெட்ரோ ரயில் போலவே வடிவமைக்கப்பட்டிருந்தன.
இந்த பாலியல் விடுதியில் வாடிக்கையாளர்கள் பணம் கட்டி, பெண்களைத் தடவுவது போன்ற உண்மையான அனுபவங்களைப் பெறமுடியும். இது சட்டத்திற்கு உட்பட்டதும்கூட.
அந்த விடுதியின் மேலாளர் ஹசுதா ஷுகி எங்களை வரவேற்றார். "மக்கள் பொதுவெளியில் எதைச் செய்ய முடியாதோ, அதை இங்கே செய்ய நாங்கள் ஏற்பாடு செய்கிறோம். அதனால்தான் ஏராளமான பொதுமக்கள் இங்கே வருகின்றனர்," என்றார் அவர்.
உள்ளே சென்றால் இனிமையான நறுமணம் கமழும் அறைகள் இருந்தன. ஒவ்வொரு தனி அறையும் ஒரு ரயில் பெட்டியைப் போலவே இருந்தது. ரயில் நிலையங்களில் வரும் அறிவிப்புகளைப் போன்ற அறிவிப்புக்களும் அங்கே வெளியாகி வந்த நிலையில், அந்த விடுதிக்குள் நுழைய அளிக்கப்பட்ட நுழைவு அட்டையும் ரயில் டிக்கெட்டை போலவே இருந்தது.
லிவ்-இன் உறவில் இருந்த காதலியை கொன்று, துண்டு துண்டாக வெட்டிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது (காணொளி)
"ஆண்கள் இதுபோன்ற இடங்களுக்கு வந்து இந்த அனுபவங்களைப் பெறுவதன் மூலம் பாலியல் வன்புணர்வுகள், பாலியல் குற்றங்கள் குறைகின்றன," என்கிறார் ஹசுதா.
ஆனால், ஹசுதா சொல்வதை முழுக்க முழுக்க உண்மை என நாம் எடுத்துக்கொள்ள முடியாது என்கிறார் மனநல மருத்துவர் செய்டோ. பெரும்பாலான பாலியல் குற்றவாளிகள் oor ஆதிக்க மனப்பான்மையிலும், பெண்களை அவமதிக்கும் வகையிலும்தான் உள்ளனர் எனக் கூறுகிறார் செய்ட்டோ.
"இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள், பாதிக்கப்பட்ட பெண்களை ஒரு சமமான உயிராகக் கருதுவதில்லை. மாறாக அவர்களை ஓர் இன்பம் தரும் போகப் பொருள் போலத்தான் கருதுகின்றனர்."
இந்தக் கருத்துதான் உண்மையானது என்று டகாகோவும் கருதுகிறார்.
பல மாதங்கள் இதுபோன்ற தாக்குதலை எதிர்கொண்ட பிறகு ஒரு நாள் டகாகோவும் குற்றவாளியை எதிர்க்கத் தொடங்கினார். கூட்டமாக இருந்த ஒரு ரயில் பெட்டியில் பயணம் செய்தபோது, அவரது குட்டைப் பாவாடையைத் தொட ஒரு கை நீண்டு வந்ததை உணர்ந்த டகாகோ, உடனடியாகத் தன்னால் முடிந்த அளவு உரத்த குரலில் கத்தி பிற பயணிகளின் கவனத்தை ஈர்த்ததுடன், தனது பாவாடையைத் தொட முயன்ற கையையும் பற்றி இறுக்கிப் பிடித்தார்.
அந்த நபர் மீது புகார் அளித்த டகாகோ, ஏற்கெனவே அவர் அது போன்ற குற்றங்களில் தண்டிக்கப்பட்ட நபராக இருந்தும், நீதிமன்றம் அவரை எச்சரித்து அனுப்பியதால் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தார். அந்த நபர் மீண்டும் அதே தவற்றைச் செய்தால் தண்டனை விதிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்தது.
நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பை அடுத்து, இதுபோன்ற குற்றங்களைக் குறைக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள முடிவெடுத்த டகாகோ, இதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்.
இந்த விழிப்புணர்வு நடவடிக்கையின்போது அணிந்துகொள்வதற்காக பல வண்ணங்களில் பேட்ஜ்களையும் அவர் தயாரித்து அனைவருக்கும் வழங்கினார். அந்த பேட்ஜ்களை அணிந்துகொண்ட விழிப்புணர்வு போராட்டக்காரர்கள், "பெண்களைத் தவறான நோக்கத்துடன் தடவுவது ஒரு குற்றம்," என்ற முழக்கத்துடன் விழிப்புணர்வு பணிகளைத் தொடங்கினர். மேலும, அவர்கள், இதுபோன்ற குற்றவாளிகளைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க முடியாது எனவும் தெரிவித்தனர்.
"இது குற்றவாளிகளைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கை," என்கிறார் 24 வயதான டகாகோ. தற்போது ஆண்டுதோறும் சிகான்-எதிர்ப்பு பேட்ஜ் வடிவமைக்கும் போட்டிகள் ஜப்பான் நாட்டு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படுகின்றன.
சீன மொழியில் மயோமி என்றால் வீட்டில் வளர்க்கப்படும் பூனையைக் குறிக்கும். இருப்பினும் மயோமியின் குணாதிசயங்கள் எலியின் குணாதிசயங்களைப் போன்றது என்றார் லூபஸ்.
"அவரால் எந்த ஆபத்தும் ஏற்படாது. ஆனால் எந்த நேரத்திலும் அவர் எச்சரிக்கையுடன்தான் இருப்பார். சில நேரங்களில் தேவைக்கும் அதிகமான ரியாக்ஷன் காட்டும் நபராக அவர் இருப்பார்," என்றார் அவர்.
லூபஸ் சொன்னது சரியாக இருந்தது. மயோமி அவரைச் சந்திக்க தொடர்ந்து மறுத்து வந்தார். ஆனால் சீனப் புத்தாண்டு தினத்தன்று, இயானுக்கு அதிர்ஷ்டம் கிடைத்தது. மயோமி அப்போது ஒரு கரோக்கி பாரில் அவரைச் சந்திக்க ஒப்புக்கொண்டார்.
அந்த பாரில் சிகரெட் வாசனையுடன் காற்று கொஞ்சம் அடர்த்தியாக இருந்தது. கண்ணாடி கிளாஸ்களில் ஊற்றப்பட்ட மது, அந்த கிளாஸ்கள் ஏற்படுத்திய கிண்கிணி சத்தம் மற்றும் சீன பாப் பாடல்களால் அந்த பார் நிரம்பி வழிந்தது.
அங்கே வந்த நபர் (மயோமி) நாங்கள் எதிர்பார்த்த நபர் அல்ல. அவர் மிகவும் இளமையாக, ஒல்லியான உருவத்துடன் இருந்தார். அவர் அரை விளிம்பு கண்ணாடி அணிந்திருந்தார். மேலும் அடர் வண்ண கோட் அணிந்த நிலையில் இருந்த அவரை ஒரு கல்லூரி மாணவர் என்றே சொல்லத் தோன்றியது. ஆனால் அவருக்கு 27 வயது எனச் சொன்னார்.
அவரது தொழிலில் ஒரு தொகையை முதலீடு செய்வதாக இயான் உறுதியளித்தபின், மயோமி எவ்வளவு சம்பாதித்தார் எனக் கேள்வி எழுப்பினார்.
"எங்களது தினசரி பணப்புழக்கம் 5,000 முதல் 10,000 சீன யுவான் (US$700-$1,400; £565-£1,130)," என்றார் மயோமி. தினசரி வருவாய் குறித்து செல்ஃபோனில் பதிவாகியிருந்த ஆதாரங்களையும் அப்போது அவர் காட்டினார். "மிக அருமையான- நிலையான வருமானம், சரியா?"
இயான் உணர்ச்சிவசப்பட்டவராகத் தன்னைக் காட்டிக்கொண்டார். மேலும் Uncle Qi என்ற பெயரையும் அங்கு குறிப்பிட்டார்.
"நான் தான் Uncle Qi," என மயோமி ஒத்துக்கொண்டார்.
சிகான் பாலியல் வன்முறை வீடியோக்களை வழங்கும் மூன்று இணையதளங்களை மயோமி வைத்திருந்தார்
ஆனால், எங்களுக்கு ஆச்சரியமளிக்கும் வகையில், Uncle Qi என்பது ஒரே ஒரு நபரைக் குறிக்கும் சொல் அல்ல என்ற தகவலையும் அவர் அப்போது தெரிவித்தார்.
15 பேர் கொண்ட ஒரு குழுவை அவர் நிர்வகித்து வந்ததாகவும், அதில் இருந்த பத்து சீனர்கள்தான் அந்த வீடியோக்களை தயாரித்ததாகவும், அதற்கு அவர்கள் அனைவரும் Uncle Qi என்ற ஒரே பெயரைப் பயன்படுத்தியதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு மாதமும் அவர்களிடம் இருந்து 30 முதல் 100 வீடியோக்கள் மயோமிக்குக் கிடைத்தன.
அந்த வீடியோக்கள் அனைத்தும் 3 இணையதளங்களிலும் விற்பனை செய்யப்பட்டன. அந்த வீடியோக்கள் தமக்குச் சொந்தமானவை என மயோமி ஒப்புக்கொண்டார். அந்த இணையதளங்களுக்கு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டண முறையிலான வாடிக்கையாளர்கள் இருந்ததாகவும் அவர்களில் பெரும்பாலானோர் சீனர்கள் என்றும் அவர் அப்போது கூறினார்.
"இந்த வீடியோக்களை பார்க்க ஒரு கடவுச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்," என்றார் மயோமி. அவருடைய இணையதளங்கள் மூலம், போதை மருந்து கொடுக்கப்பட்டு பின்னர் பாலியல் வன்புணர்வு செய்த காட்சிகள் அடங்கிய வீடியோக்களும் விற்பனை செய்யப்பட்டன என்றும் மயோமி கூறினார்.
"இந்தத் தொழில்கள் மற்ற தொழில்களைப் போன்றவையே. அவருடைய குழுவினர் உணர்வுள்ள மற்றும் தைரியமான நபர்கள்," என அவர் கூறினார். மேலும், இதுபோன்ற பாலியல் வீடியோக்களை தயாரிப்பது எப்படி என்பது குறித்தும், பெண்கள் மீது எப்படி பாலியல் தாக்குதல் நடத்துவது என்பது குறித்தும் பலருக்குப் பயிற்சி அளித்ததாகவும் அவர் தற்செயலாகத் தெரிவித்தார்.
ஆனால் அவர் எப்போதும் பேசாத ஒரு விஷயம் என்னவென்றால், அந்த வீடியோக்களில் இருந்த பெண்கள் யார் என்பதே. அவரது பேச்சைக் கேட்டால், அந்தப் பெண்கள் யாரென்று யோசிக்கும் அளவுக்கு முக்கியமானவர்கள் அல்ல என்ற எண்ணம் அவருக்கு இருந்தது என்பதுதான் தெரிய வந்தது.
மயோமியின் உண்மையான அடையாளத்தை அறிய நாங்கள் முயன்றோம். அவரை மற்றொரு முறை சந்திக்க நேர்ந்தபோது, இந்தத் தொழிலுக்கு அவர் எப்படி வந்தார் என்பதைப் பற்றிப் பேசினார்.
வழக்கமான சிறுவர்களைப் போலவே, மயோமியும் சூப்பர்மேன், அனிமேசன் படங்கள் மற்றும் வீடியோ கேம்ஸ் போன்றவற்றுடன்தான் வளர்ந்தார். ஆனால் அவருக்கு 14 வயதானபோது, தற்போது அவர் விற்பனை செய்து வருவதைப் போன்ற பாலியல் வன்முறை வீடியோக்களை பார்க்கத் தொடங்கினார்.
அவருடைய இந்தத் தொழில் ஆபத்து மிக்கது என்பதை அவர் நன்றாகவே உணர்ந்திருந்தார்.
"நான் எப்போதும் மிகுந்த எச்சரிக்கையுடனேயே செயல்பட்டு வருகிறேன்," என்றார் மயோமி. "முதலில் பாதுகாப்பு," என்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்த அவர், சீன அதிகாரிகளுக்குப் பயந்து, ஜப்பானிய குடியுரிமை பெற முயன்று வருவதாகவும் தெரிவித்தார்.
மயோமி எவ்வளவுதான் எச்சரிக்கை உணர்வுடன் இருந்தாலும், அவர் ஒரு தவறு செய்துவிட்டார்.
இத்தொழிலில் முதலீடு செய்யும் தொகையை எப்படித் தருவது என இயான் கேட்டபோது, மயோமி தனது வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்களை அளித்தார்.
அந்த விவரங்களில், மயோமியின் பெயர் டாங் ஜுவாரன் (Tang Zhuoran) எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை வைத்து அவரை அடையாளம் கண்டுபிடித்த நாங்கள் பின்னர் மயோமி மீதான பிற குற்றச்சாட்டுகள் குறித்துப் பேசினோம். மேலும் நாங்கள் அவரை நெருங்க முயன்றபோது, அவர் தமது முகத்தை மூடிக்கொண்டு அங்கிருந்து தப்ப முயன்றார்.
திடீரென அவர் எங்களது காமிரா மீது மோதி விட்டு எங்களை விட்டு தப்பிச் சென்றார். அடுத்த நாள் தற்செயலாக விமான நிலையத்தின் அருகில் நாங்கள் மயோமியை பார்த்தோம். அவர் ஜப்பானிலிருந்து வெளியேறும் முயற<