மகாராஷ்டிராவில் 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற 43 வயது தந்தை, தோல்வியடைந்த மகன்

செவ்வாய், 21 ஜூன் 2022 (13:48 IST)
(இன்றைய நாளில் இந்தியாவில் உள்ள ஊடகங்கள், இணையதங்களில் வெளிவந்த முக்கியத் தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)

தேர்ச்சி பெற்ற தந்தை, தோல்வியடைந்த மகன்

மகாராஷ்டிர மாநிலத்தில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய தந்தை தேர்ச்சி பெற்றுள்ளார். மகன் தோல்வியடைந்துள்ளார் என செய்தி வெளியிட்டுள்ளது இந்து தமிழ் திசை.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புனேவில் வசிப்பவர் பாஸ்கர் வாக்மரே (43). இவர் குடும்ப சூழல் காரணமாக 7-ம் வகுப்புக்குப்பின், வேலைக்கு சென்று விட்டார். இவரது மகன் சாகில். தனது படிப்பை தொடர விரும்பிய பாஸ்கர் வாக்மரே 30 ஆண்டுகளுக்குப்பின், தனது மகனுடன் சேர்ந்து 10-ம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்தார்.

ஒவ்வொரு நாளும் வேலைக்கு சென்று திரும்பியபின் தேர்வுக்காக படித்துள்ளார் பாஸ்கர் வாக்மரே. தந்தையும், மகனும் 10-ம் வகுப்புதேர்வை எழுதி முடித்து முடிவுகள் கடந்த வெள்ளிக் கிழமை வெளியிடப்பட்டது. இதில் பாஸ்கர் தேர்ச்சி பெற்றார். அவரது மகன் 2 பாடத்தில் தோல்வியடைந்துள்ளார் என்று தெரியவந்தது.

தன் மகனுடன் சேர்ந்து 10ஆம் வகுப்பு படித்தது தனக்கு உதவியாக இருந்தது என்று கூறிய பாஸ்கர், தான் தேர்ச்சிப் பெற்றாலும் தனது மகன் தோல்வி அடைந்திருப்பது வருத்தத்தை தருகிறது என்றார் என விவரிக்கிறது இந்து தமிழ் திசை செய்தி.

ஐஐடியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க திட்டம்

சென்னை ஐஐடியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொண்டு வரப்படுவது குறித்து முதலமைச்சர் ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கிராமப்புற அரசுப் பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எஸ்டிஇஎம் திட்டத்தின் 6 நாள் பயிற்சி வகுப்பு சென்னை தரமணியில் உள்ள ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் நேற்று தொடங்கப்பட்டது.

திட்டத்தை தொடங்கிவைத்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், "சென்னை ஐஐடியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொண்டு வரப்படுவது குறித்து முதலமைச்சர் ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

மாநில கல்விக் கொள்கை தயாரிப்புக் குழுவின் கூட்டம் 25ஆம் தேதி நடைபெற உள்ளது.குழுவின் ஒவ்வொரு கூட்டத்திலும் மாநில கல்வி கொள்கை வளர்ச்சி அடையும். கொரோனா காலத்திலும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 93.76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றது பெருமையளிக்கிறது. அடுத்த கட்டமாக 100 சதவீத தேர்ச்சியை நோக்கிச் செல்வோம். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்," என்றார். என விவரிக்கிறது அச்செய்தி.

10, 12 பொதுத் தேர்வின் தேர்ச்சி சதவீதம்

10 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின.

இரு தேர்வுகளின் தேர்ச்சி சதவீதம் குறித்த விவரத்தை வெளியிட்டுள்ளது தினந்தந்தி.

பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதியவர்களில் 7 லட்சத்து 55 ஆயிரத்து 998 மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். இதில் மாணவிகள் 4 லட்சத்து 6 ஆயிரத்து 105 பேரும், மாணவர்கள் 3 லட்சத்து 49 ஆயிரத்து 893 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்களைவிட மாணவிகள் 5.36 சதவீதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மொத்த தேர்ச்சி சதவீதம் 93.76 ஆகும்.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை பொறுத்தவரையில் 9 லட்சத்து 55 ஆயிரத்து 139 மாணவ மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதில் 9 லட்சத்து 12 ஆயிரத்து 620 பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். 42 ஆயிரத்து 519 பேர் தேர்வு எழுதவில்லை.

தேர்வு எழுதியவர்களில் 4 லட்சத்து 27 ஆயிரத்து 73 மாணவர்கள், 3 லட்சத்து 94 ஆயிரத்து 920 மாணவிகள் மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 994 பேர் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். இதில் மாணவர்களைவிட மாணவிகள் 8.55 சதவீதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ள்னர்.

மொத்த தேர்ச்சி சதவீதம் 90.1 ஆகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்