டாஸ்மாக் கடைகள் மூடல்; தள்ளாடும் தொழிலாளர்கள்

திங்கள், 3 ஏப்ரல் 2017 (12:00 IST)
நெடுஞ்சாலைகளில் இருந்த டாஸ்மாக் கடைகளை மூடுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகளை அரசு மூடிவருகிறது. இதனால், அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள், அடுத்தது என்ன என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.


 

 
நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள கடைகளில் உள்ள ஊழியர்களுக்கு மாற்றுப் பணி வழங்காமல், கடைகளை மட்டும் மூடிவருவது தொடர்பாக டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.
 
பிபிசி தமிழிடம் பேசிய டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தை சேர்ந்த திருச்செல்வன் டாஸ்மாக் ஊழியர்களிடம் நெடுஞ்சாலைகளில் எந்த கடைகள் அகற்றப்படும் என்றும் அந்தக் கடைகளில் உள்ள ஊழியர்களுக்கு மாற்றுப்பணி எப்போது வழங்கப்படும் என்பது தொடர்பாகவும் எந்தத் தகவலையும் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை என்கிறார்.
 
''பலரும் ஒப்பந்த தொழிலாளர்களாக இருப்பதால், கடையில் வியாபாரம் நடந்தால் மட்டும்தான் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும். மாற்று இடங்களில் பணிகள் அளிக்கப்படும் வரை சம்பளம் இல்லாமல்தான் பணியாளர்கள் இருக்கவேண்டும்,'' என்று திருச்செல்வம் சுட்டிக்காட்டினார்.
 
''திடீரென சில கடைகளை மூடிவிட்டனர். அந்த கடைகளில் உள்ள ஊழியர்கள், மூடப்பட்ட கடை உள்ள பகுதியில் மாற்று இடம் தேடி கடையை அமைக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதுவரை கடைகளில் உள்ள சரக்குகளை பாதுகாக்கும் பணியும் அந்த ஊழியர்களையே சாரும் என்றும் கூறப்பட்டுள்ளது,'' என்றார்.
 
''கடந்த பிப்ரவரி மாதம் முதல்வராக பொறுப்பேற்று முதல் கையெழுத்தாக 500 மதுக்கடைகளை மூடுவதற்கு உத்தரவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி. அந்தக் கடைகளில் பணிபுரிந்தவர்களுக்கு தற்போது வரை மாற்றுப் பணி கொடுக்கப்படவில்லை,'' என்றும் திருச்செல்வன் சுட்டிக்காட்டினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்