தமிழர் வரலாறு: கீழடியில் அகழாய்வில் கிடைத்த எலும்புக்கூட்டை இன்னும் ஏன் எடுக்கவில்லை?
வெள்ளி, 5 ஜூன் 2020 (14:50 IST)
கீழடியில் ஆறாம் கட்ட அகழ்வாய்வு பணியின்போது, ஒரு விலங்கின் எலும்புக் கூடு கண்டறியப்பட்டுள்ளது என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கீழடியில் நடந்த அகழ்வாய்வில் இதுவரை கிடைத்த எலும்புத் துண்டுகளை விடப் பெரிதாக, ஒரு விலங்கின் எலும்புத் கூடு கண்டறியப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கீழடியில் ஆறாவது கட்ட அகழாய்வுப் பணிகள் பிப்ரவரி 19ஆம் தேதியன்று துவங்கப்பட்டன. கொந்தகை பகுதியில் நடந்துவரும் அகழாய்வில் முதுமக்கள் தாழிகள், ஈமச் சடங்குகளுக்குப் பயன்படுத்தப்படும் மண்ணாலான பாத்திரங்கள், மணிகள் ஆகியவை கிடைத்தன.
கொந்தகை பகுதியில் இதுவரை மூன்று குழிகள் தோண்டப்பட்டுள்ளன. முதல் குழியில் 2 முதுமக்கள் தாழிகளும், 2வது குழியில் 8 முதுமக்கள் தாழிகளும், மூன்றாவது குழியில் 2 தாழிகளும் கிடைத்தன.
இந்த நிலையில், கொந்தகையில் மார்ச் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட அகழாய்வில் எலும்புக்கூடு ஒன்று கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பிபிசி தமிழிடம் பேசிய கீழடி அகழ்வாய்வு இயக்குநர் சிவானந்தம் எலும்புக் கூட்டை அகழ்வாய்வு செய்த இடத்தில் இருந்து எடுக்காமல் வைத்திருப்பதாகவும், கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு முடிந்ததும், வல்லுநர்களின் துணையோடுதான் பிற சோதனைகளை மேற்கொள்ளமுடியும் என்று தெரிவித்தார்.
''கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் மாதம் முதல் அகழ்வாய்வு பணிகளை நிறுத்தியிருந்தோம். மே கடைசி வாரத்தில் பணிகளைத் தொடங்க அனுமதி கிடைத்தது. தற்போது ஒரு எலும்புக் கூடு உள்பட சில சிறிய பொருட்களையும் கண்டறிந்துள்ளோம்.
இவை அனைத்தையும் கண்டறிந்த இடத்தில் பிளாஸ்டிக் பைகளில் பாதுகாப்பாக சுற்றிவைத்துள்ளோம். கண்டறியப்பட்ட பொருட்கள் எந்த காலத்தை சேர்ந்தவை, எந்த விலங்காக இருக்கும் என எந்த தகவலையும் அறியமுடியவில்லை. அந்த எலும்புகளை எடுக்கும்போது அதிக கவனம் வேண்டும். பிரத்தியேகமான கருவிகளைக் கொண்டு பாதுகாப்பாக எடுக்கவேண்டும் என்பதால் காத்திருக்கிறோம்,'' என்றார் சிவானந்தம்.
மேலும் கொரோனா ஊரடங்கு காரணமாக பொது மக்களை இங்கு அனுமதிப்பதில்லை என்றும் பாதுகாப்பை பலப்படுத்தி, இந்த பொருட்களை கண்டறியப்பட்ட களத்தில் வைத்துள்ளதாக தெரிவித்தார்.
கடந்த மே 28-ல் பெய்த பலத்த மழையால் அகழாய்வு செய்த இடங்களில் தண்ணீர் புகுந்திருந்தது. பணிகள் நிறுத்தி தண்ணீர் வற்றிய பின்னர் பணிகளை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
அதேசமயம், மணலூர் பகுதியில் நடத்தப்பட்ட அகழ்வாய்வில், ஒரு குழியில் சுடு மண்ணால் செய்யப்பட்ட உலை ஒன்றையும் கண்டறிந்ததாக சிவானந்தம் தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக நடந்த அகழ்வாய்வில், 10-க்கும் மேற்பட்ட சங்ககால கட்டடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அக்கால மக்கள் பயன்படுத்திய சுடுமண் முத்திரைக் கட்டைகள் (ரப்பா் ஸ்டாம்ப்), எழுத்தாணிகள், அம்புகள் , இரும்பு, செம்பு ஆயுதங்கள், அரிய வகை அணிகலன்கள், 18 தமிழ் எழுத்துகளுடைய மட்பாண்ட ஓடுகள் உட்பட 5300-க்கும் மேற்பட்ட தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன. அரிக்கமேடு, காவிரி பூம்பட்டிணம், உறையூா் போன்ற இடங்களில் நடந்த அகழாய்வில் கிடைத்ததைவிட அதிக எண்ணிக்கையில் தொடா்ச்சியாக பல கட்டடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
கீழடியில் கண்டறியப்பட்டுள்ள பொருட்கள் மூலம் ஒரு நகர நாகரிகம் இருந்ததற்கான அடிப்படை ஆதாரங்களும் கிடைத்துள்ளன என அதிகாரிகள் முன்னர் தெரிவித்திருந்தனர்.