தமிழர் வரலாறு: தமிழ்நாட்டில் 3 இடங்களில் புதிதாக அகழாய்வு!

சனி, 12 பிப்ரவரி 2022 (10:03 IST)
இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
 
கீழடி உள்பட நான்கு இடங்களில் தொடர் அகழாய்வுப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார் என்கிறது தினமணி செய்தி.
 
தமிழ்நாட்டில் ஏழு இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்புக்கிணங்க அகழாய்வுப் பணிகளை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி வழியாக தொடங்கி வைத்தார்.
 
தமிழகத்தில் நான்கு இடங்களில் வெவ்வேறு கட்டங்களாக ஏற்கெனவே அகழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன.
 
சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஏழு கட்டங்களும், தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் இரண்டு கட்டங்களும், அரியலூா் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை ஆகிய இடங்களில் முதல் கட்டமாகவும் அகழாய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
 
இந்த நிலையில், கீழடியில் எட்டாம் கட்டமாகவும், சிவகளையில் மூன்றாம் கட்டமாகவும் அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
 
மயிலாடும்பாறை, கங்கைகொண்ட சோழபுரத்தில் இரண்டாம் கட்ட ஆய்வுப் பணிகளும் தொடக்கப்பட உள்ளன.
 
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி, தருமபுரி மாவட்டம் பெரும்பாலை ஆகிய இடங்களில் ஆய்வுப் பணிகள் முதல் கட்டமாகத் தொடங்கப்பட உள்ளன.
 
ஏழு தொல்லியல் அகழாய்வுகளுடன், இரண்டு கள ஆய்வுகள், சங்ககால கொற்கைத் துறைமுகத்தினை அடையாளம் காண முன்கள ஆய்வுப் பணிகளும் செய்யப்பட உள்ளன. இதற்கென ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்கிறது அந்தச் செய்தி.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்