இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க தாலிபன் தூதருக்கு அழைப்பு - இருநாட்டு உறவை புதுப்பிக்க முயற்சியா?

Sinoj

திங்கள், 22 ஜனவரி 2024 (21:30 IST)
ஆப்கானிஸ்தானின் தற்காலிக வெளியுறவுத்துறை அமைச்சராக அமீர்கான் முத்தாகி பதவி வகித்து வருகிறார்.
 
குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தாலிபன் தூதருக்கு அங்குள்ள இந்திய தூதரகம் அழைப்பு அனுப்பியுள்ளது.
 
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளர் பிலால் சர்வாரி இந்த அழைப்பை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
 
தமது சமூக ஊடக பக்கத்தில் எழுதியுள்ள பிலால், "தாலிபன்களுக்கும் பிரதமர் நரேந்திர மோதியின் அரசாங்கத்திற்கும் இடையிலான உறவுகள் ஒவ்வொரு மட்டத்திலும் மேம்பட்டுள்ளன. தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இந்திய தூதரகம் தாலிபன் தூதர் பத்ருதீன் ஹக்கானி மற்றும் அவரது மனைவிக்கு அழைப்பிதழ் அனுப்பியுள்ளது. எதிர்பார்ப்புகளுக்கு அப்பால், இது இந்தியாவையும் தாலிபனையும் நெருக்கமாகக் கொண்டுவரும் ஒரு முக்கியமான மாற்றமாகும்,” எனத்தெரிவித்துள்ளார்.
 
மேலும், “பிரதமர் மோதியின் தலைமையின் கீழ், காபூலில் மட்டுமல்ல, முக்கியமான பகுதிகளின் தலைநகரங்களிலும் தாலிபன்களுடன் உறவுகள் நிறுவப்பட்டுள்ளன. சில மாதங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தான் தூதரக அதிகாரிகள் வெளியேறியதும், டெல்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் மூடப்பட்டதும் ஒரு சகாப்தத்தின் முடிவாக இருந்தது. இந்தியாவை விட்டு வெளியேறும்படி அந்நாட்டின் மீது அழுத்தம் இருந்ததையே இது காட்டுகிறது,” எனத் தெரிவித்துள்ளார்.
 
தாலிபன் தூதருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் உறுதி செய்துள்ளது.
 
ஃபரித் மாமுண்ட்சாய், இந்தியாவுக்கான ஆப்கானிஸ்தான் தூதராகப் பணியாற்றினார்.
 
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தாலிபன்களின் தூதராக பத்ருதீன் ஹக்கானி செயல்பட்டு வருகிறார்.
 
ஜலாலுதீன் ஹக்கானியின் மகன் பத்ருதீன். அவர் அக்டோபர் 2023 முதல் இந்தப் பதவியில் தொடர்ந்து வருகிறார்.
 
பத்ருதீனின் சகோதரர் சிராஜுதீன் ஹக்கானி ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சராக உள்ளார்.
 
2008ல் காபூலில் உள்ள இந்திய தூதரகம் தாக்கப்பட்டது. இந்த தாக்குதலில் முக்கிய தாலிபன் தலைவர்கள் தவிர, ஹக்கானி அமைப்பும் ஈடுபட்டுள்ளது.
 
பத்திரிகையாளர் பிலால் சமூக ஊடகத்தில் பகிர்ந்த அழைப்பிதழில், ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கான இந்திய தூதர் சஞ்சய் சுதீரின் பெயர் இடம்பெற்றுள்ளது.
 
காபூலில் மீண்டும் திறக்கப்பட்ட தூதரகத்திற்கு இந்தியா தொழில்நுட்பக் குழுவை அனுப்பியதிலிருந்து, அது மீண்டும் தாலிபன்களுடன் பேசி வருவதாக ஆதாரங்களை மேற்கோள் காட்டி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில், இந்த அணுகுமுறைக்கு இணங்க இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 
இந்தியா தாலிபன்களுடன் பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால் ராஜ தந்திர ரீதியாக தாலிபன்களின் ஆட்சியை இன்னும் அங்கீகரிக்கவில்லை.
 
இந்தியாவின் நிலைப்பாடு தாலிபன்களுடன் பேசும் நாடுகளைப் போலவே உள்ளது. ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் அதை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை.
 
இந்திய அரசு நிலைப்பாடு என்ன?
 
கடந்த ஆண்டு நவம்பரில், மும்பை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் துணைத் தூதரகத்தால், புதுதில்லியில் தூதரகத்தைத் திறந்து வைப்பதாகக் கூறப்பட்டது.
 
அகற்றப்பட்ட ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் தூதர் ஃபரித் மாமுண்ட்சாய் அதை மூடுவதாக அறிவித்தார்.
 
தாலிபன்களுக்கு இந்தியா அங்கீகாரம் தருகிறது என்ற செய்தி போகாமல் இருக்க, இந்திய அரசு மூன்று விஷயங்களை பரிசீலிப்பதாக தெரிய வந்துள்ளது என இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் செய்தியில் எழுதப்பட்டுள்ளது.
 
தாலிபன்களுக்கு இந்தியாவின் நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் எழுதுகிறது. ஆப்கானிஸ்தான் கவுன்சல்ஸ் ஜெனரல் அவர்களின் விதிகளை பின்பற்றுவதாக வெளியுறவு அமைச்சக அதிகாரிகளிடம் உறுதிப்படுத்தியுள்ளனர்.
 
டெல்லியில் ஆப்கானிஸ்தான் தூதரகத்தை திறக்க இந்தியா அனுமதி அளித்துள்ளது.
 
தாலிபன் தூதருக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழ் வழக்கமான ஒரு நடைமுறைதான் என்றும், இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அதிகாரிகளை மேற்கோள் காட்டி 'இந்து' செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
 
தாலிபன்களுடன் இந்தியா தனது உறவை இயல்பாக்குகிறது என்ற கூற்றை அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.
 
குடியரசு தினத்திற்காக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தூதரக அதிகாரிகளுக்கும் இந்த அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது என்று இந்தியத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும், இதில் இந்தியாவின் உறவுகள் மிகவும் பலவீனமடைந்துள்ள பாகிஸ்தான் சேர்க்கப்படவில்லை.
 
அபுதாபியில் உள்ள தூதரகத்திற்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழில், ‘இஸ்லாமிய குடியரசு ஆப்கானிஸ்தான்’ என்று எழுதப்பட்டுள்ளது என்றும் ‘இஸ்லாமிய எமிரேட்’ அல்ல என்றும் தி ஹிந்து தனது கட்டுரையில் எழுதியுள்ளது. மேலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் பழைய கொடி இன்னும் பறந்துகொண்டிருக்கிறது என்பதையும் கவனிக்கவேண்டும்.
 
டெல்லியில் ஆப்கானிஸ்தான் தூதரகத்தை திறக்க இந்தியா அனுமதி அளித்துள்ளது.
 
இதில் தாலிபன் ஆட்சி தொடர்பான கவுன்சில்களும் அடங்கும். மேலும், இந்த தூதரகத்தில் நிறுவப்பட்டுள்ள கொடியும் தாலிபன் கொடியல்ல என்பதும் கவனிக்கத்தக்கது.
 
ஹக்கானி அமைப்பு இந்திய தூதரகங்கள் மீது பல தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளது.
 
2008 ஆம் ஆண்டு காபூல் தூதரகம் மீது நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 58 பேர் கொல்லப்பட்டனர். இதில் இரண்டு மூத்த இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் இரண்டு இந்திய பாதுகாப்புப் படையினரும் அடங்குவர்.
 
தாலிபன்களை இதுவரை எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை. இருப்பினும், ரஷ்யா மற்றும் சீனா போன்ற சில நாடுகளில், தாலிபன் பிரதிநிதிகள் செயல் தூதர்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த தூதரகங்களில் தாலிபன் கொடிகளும் நிறுவப்பட்டுள்ளன.
 
2023 டிசம்பரில், தாலிபன்களால் நியமிக்கப்பட்ட பிலால் கரிமியை தூதராக சீனா அங்கீகரித்தது. அவ்வாறு செய்த முதல் நாடு சீனா தான்.
 
பெய்ஜிங், மாஸ்கோ மற்றும் பிற நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள், அங்குள்ள அரசாங்கங்களால் அங்கீகரிக்கப்பட்ட தாலிபன்களால் நியமிக்கப்பட்ட தூதர்களுக்கு அழைப்பிதழ் அனுப்புமா?
 
தி இந்து கேட்ட இந்தக் கேள்விக்கு வெளியுறவு அமைச்சகத்திடம் இருந்து எந்த பதிலும் வெளியாகவில்லை.
 
ஆகஸ்ட் 2021 இல் தாலிபன்கள் ஆட்சிக்கு வந்ததும், இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகள் ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கள் தூதரகங்களை மூடிவிட்டன.
 
ஐக்கிய நாடுகளின் அகதிகள் அமைப்பின் (UNHCR) கூற்றுப்படி, 2021 இல் தாலிபன் அமைப்பினர் ஆட்சிக்கு வந்த பிறகு, 16 லட்சத்திற்கும் அதிகமான குடிமக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது.
 
சிரியா மற்றும் யுக்ரேனுக்கு அடுத்தபடியாக, ஆப்கானிஸ்தானில்தான் உலகிலேயே அதிக அகதிகள் உள்ளனர்.
 
இந்தியாவில் சுமார் இருபதாயிரம் ஆப்கானிஸ்தான் குடிமக்கள் வாழ்கின்றனர் என்பதுடன் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்