மனைவியின் பிறப்புறுப்பை அலுமினியம் வயரால் தைத்த சந்தேகக் கணவர் கைது

செவ்வாய், 23 மார்ச் 2021 (08:28 IST)
திருமண பந்தத்திற்கு வெளியே உறவு கொண்டிருப்பதாக தமது மனைவியை சந்தேகித்த உத்தரப் பிரதேச ஆண் ஒருவர் மனைவியின் பிறப்புறுப்பை அலுமினியம் வயர் கொண்டு தைத்ததாக திங்களன்று கைது செய்யப்பட்டுள்ளார் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
அதிர்ச்சியை ஏற்படுத்தும் இந்த சம்பவம், உத்தரப் பிரதேசத்தில் உள்ள ராம்பூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று நிகழ்ந்துள்ளது.
 
கைது செய்யப்பட்ட அந்த ஆண் தமது மனைவியைத் தாக்கி, அவரது பிறப்புறுப்பைத் தைத்த பின்பு அவரது வீட்டில் இருந்து தப்பியோடிவிட்டார் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
மிகுந்த வலியில் இருந்த அந்த மனைவி அருகில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் தமது தாயாரிடம் அலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
 
உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைப்பதற்கு அழைப்பு விடுத்த அவரது தாயார், காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தார்.
 
முதலில் அருகிலுள்ள உள்ளூர் மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்தப் பெண், பின்பு மேலதிக சிகிச்சைக்காக கூடுதல் வசதியுடைய அரசு மருத்துவமனைக்கு பின்னர் அழைத்துச் செல்லப்பட்டார்.
 
பிறப்புறுப்பு அலுமினியம் வயரால் தைக்கப்பட்ட அந்த பெண் மிகுந்த வலியுடன் மருத்துவமனைக்குச் செல்லும் காணொளிகளும் வெளியாகியுள்ளன.
 
அதில் அவரது தாய் மற்றும் இன்னொரு பெண் பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனைக்குள் அழைத்துச் செல்கின்றனர்.
 
கைது செய்யப்பட்ட ஆணின் காணொளியைப் பதிவு செய்த உத்தரப் பிரதேச காவல் துறையினர் அதை வெளியிட்டுள்ளனர்.
 
"எனது மனைவி கிராமத்தில் உள்ள பிற ஆண்களை சந்தித்து வந்தார். அவர்களுடன் முறையற்ற உறவு கொண்டிருந்தார். அது குறித்து கேள்வி எழுப்பிய நான் அது சரி இல்லை என்று அவரிடம் கூறி வந்தேன். அவருக்கு தேவையானவற்றை வழங்க எந்த முயற்சியும் நான் கைவிடவில்லை. ஆனால் நான் மிகுந்த கோபமுற்ற நேரத்தில், அலுமினியம் வயரை எடுத்து அவரது பிறப்புறுப்பைத் தைத்து விட்டேன்," என்று அந்தக் காணொளியில் அவர் கூறுகிறார்.
 
தங்களுக்கு இந்த நிகழ்வு குறித்த தகவல் கிடைத்தவுடன் உடனடியாக நடவடிக்கை எடுத்ததாகவும் பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள காயங்களின் அடிப்படையில் அவரது கணவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ராம்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷோகன் கௌதம் காவல்துறை வெளியிட்டுள்ள ட்விட்டர் காணொளி மூலம் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்