அதிவேக சதம் அடித்த சூர்யகுமார், தொடரை வென்ற இந்தியா - ஆட்டம் எப்படி இருந்தது?

சனி, 7 ஜனவரி 2023 (23:44 IST)
தற்போது நடைபெற்று வரும் இலங்கையுடனான போட்டியில், சூர்யகுமார் யாதவ் ஏழாவது ஓவரில் தனது ஆட்டத்தைத் தொடங்கி, 45 பந்துகளில் அதிவேக சதம் அடித்துள்ளார்.
 
இந்தியாவும் இலங்கையும் டி20 தொடருக்கான ராஜ்கோட் மைதானத்தில் இன்று விளையாடின. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்தியாவும் இரண்டாவது போட்டியில் இலங்கையும் வெற்றி பெற்றன. கடந்த இரு போட்டிகளிலுமே தங்கள் அதிரடியை வெளிப்படுத்தி, இந்தியாவின் ரன் வேட்டைக்கு உதவிய சூர்யகுமார் யாதவ், அக்ஷர் பட்டேல் இருவரும் இந்த முறையும் தங்களுடைய வேகத்தைச் சிறிதளவும் குறைத்துக் கொள்ளவில்லை.
 
மூன்று டி20 போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன்களோடு தனது ஆட்டத்தைப் பூர்த்தி செய்தது. அதைத் தொடர்ந்து ஆடிய இலங்கை 17வது ஓவரிலேயே 10 விக்கெட்களையும் இழந்து 137 ரன்களோடு தோல்வியடைந்தது.
 
மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றதன் மூலம் இலங்கையுடனான இந்தத் தொடரில் இந்தியா வெற்றி பெற்றது. இது ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி வென்றுள்ள மூன்றாவது தொடர்.
 
 
இந்தியாவின் பந்துவீச்சில், முந்தைய போட்டியில் தொடர்ந்து மூன்று நோ பால்களை போட்ட அர்ஷ்தீப் சிங் இந்த முறை மூன்று விக்கெட்களை எடுத்து அணியின் வெற்றிக்கு உதவியுள்ளார். அவரைத் தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யா, உம்ரான் மாலிக், யஸ்வேந்திர சாஹல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும் அக்ஷர் பட்டேல் ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.
 
இந்தியா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷனும் ஷுப்மன் கில்லும் களமிறங்கினார்கள். ஆனால், முதல் ஓவரிலேயே இஷான் கிஷன் மதுஷங்கவின் பந்துவிச்சில் தனஞ்சய கேட்சில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து ஷுப்மன் கில்லோடு கூட்டணியில் ஆடுவதற்கு மூன்றாவதாகக் களமிறங்கினார் ராகுல் திரிபாதி.
 
ஆனால் ஆறாவது ஓவரில், 16 பந்துகளில் 35 ரன்களை எடுத்து அவரும் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து களமிறங்கினார் சூர்யகுமார் யாதவ். அவர் களமிறங்கியபோது ஏழாவது ஓவர் தொடக்கத்தில், இந்திய அணியின் ஸ்கோர் கணக்கு 2 விக்கெட் இழப்புக்கு 63 ரன்களாக இருந்தது.
 
ஏழாவது ஓவரில் ஷுப்மன் கில் அடித்த சிக்சர் உட்பட மொத்தம் 10 ரன்களை இந்திய அணிக்குக் கொடுத்திருந்தார் ஹசரங்க. அதைத் தொடர்ந்து 8வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் தனது பேட்டிங்கை ஒரு பவுண்டரிக்கு பந்தைத் தட்டிவிட்டுத் தொடங்கினார்.
 
சூர்யகுமார் அடித்த அதிவேக சதம் இந்திய அணியின் வெற்றிக்குக் கைகொடுக்குமா?
 
அதற்கு அடுத்த பந்திலேயே மீண்டுமொரு சிக்சர். இரண்டே பந்துகளில் 10 ரன்களைக் குவித்து, தனது ஆட்டத்தை அதிரடியாகத் தொடங்கினார். அடுத்த நான்கு பந்துகளில் நான்கு ரன்ககளை எடுத்து மொத்தம் 14 ரன்களோடு தனது முதல் ஓவரை முடித்தார் சூர்யகுமார்.
 
முதல் ஓவரிலேயே இஷான் கிஷன் அவுட்டானதில் சோர்வடைந்திருந்த ரசிகர்களுக்கு சூர்யகுமாரின் முதல் ஓவரே ஓர் உற்சாகத்தை வழங்கியது. அதைத் தொடர்ந்து வந்த பந்துகளில் ஹசரங்க முதல் நான்கு பந்துகளில் மூன்றே ரன்களை வழங்கி, அவருடைய ரன் குவிப்பைத் தடுக்க முயன்றார். ஆனால், அதை முறியடிக்கும் விதமாக அந்த ஓவரின் ஐந்தாவது பந்து அவர் அடித்த ஷாட் மூலம் பவுண்டரிக்கு பறந்தது.
 
ரன் குவிப்பைத் தடுக்க ஹசரங்க முயன்ற அந்த ஓவரிலும் இந்தியாவுக்கு 8 ரன்கள் கிடைத்தது. இப்படியாக ராஜ்கோட்டில் இன்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் பறக்கவிட்ட பந்துகள் அவரை மூன்றாவது டி20 சதத்தை அடிக்க வைத்தது.
 
 
முந்தைய ஆட்டத்தில் இலங்கை பவர் ப்ளேவை கையாண்டது. இந்த முறை பவர் ப்ளே மூலம் இரண்டு விக்கெட்டுக்கு 52 ரன்களை இந்தியா எடுத்திருந்த நிலையில் சூர்யகுமார் களத்திற்குள் நுழைந்தார். இறங்கிய வேகத்தில் அவர் தொடங்கிய அசர வைக்கும் பேட்டிங் மூலம் 45 பந்துகளிலேயே வேகமாக சதம் அடித்தார்.
 
அவர் 34 பந்துகளில் 77 ரன்களைச் சேர்த்திருந்தார். அந்த நேரத்தில் மூன்றாவது விக்கெட்டாக விழுந்த ஷுப்மன் கில்லுடனான கூட்டணியில் இருவரும் 111 ரன்களை எடுத்திருந்தார்கள். ஷுப்மன் கில், 46 ரன்களில் ஆட்டமிழந்தார்.
 
32 வயதான சூர்யகுமார் யாதவ், 19வது ஓவரில் சதம் அடித்தார். இந்திய மண்ணில் அவருடைய முதல் சதம் இது. அவர் ஆடிய 51 பந்துகளில் மொத்தம் ஏழு பவுண்டரிகள், ஒன்பது சிக்சர்களை அடித்து, மொத்தமாக 112 ரன்களை எடுத்து, ஆட்டமிழக்காமல் முடித்தார். இதன்மூலம், இந்தியா 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 228 ரன்களோடு பேட்டிங்கை நிறைவு செய்தது.
 
சூர்யகுமார் அடித்த அதிவேக சதம் இந்திய அணியின் வெற்றிக்குக் கைகொடுக்குமா?
 
2022இல் டி20 போட்டிகளில் அதிக ரன் ஸ்கோரர் பட்டியலில், 31 இன்னிங்ஸ்களில் 1164 ரன்களோடு முன்னணியில் இருந்தார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாட்டிங்ஹாமில் இங்கிலாந்துக்கு எதிராகத் தனது முதல் டி20 சதத்தை அடித்தார்.
 
கடந்த நவம்பரில் நியூசிலாந்துக்கு இந்தியா மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின்போது சூர்யகுமார் 51 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 111 ரன்களை எடுத்தார்.
 
மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட டி20 சதங்களை அடித்த ஐந்து பேட்ஸ்மேன்களில் சூர்யகுமாரும் ஒருவர். ரோஹித் ஷர்மா நான்கு சதங்களுடன் முதலிடத்திலும், சூர்யகுமார், கிளென் மேக்ஸ்வெல்(3), காலின் முன்ரோ(3), சபாவூன் டேவிசி(3) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளார்கள். மூன்று வெவ்வேறு நாடுகளில் டி20 போட்டிகளில் சதங்களை அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை மேக்ஸ்வெல்லை தொடர்ந்து சூர்யகுமாரும் பெற்றுள்ளார்.
 
2017இல் இந்தூரில் இலங்கைக்கு எதிராகவே ரோஹித் ஷர்மா 35 பந்துகளில் சதம் அடித்தார். அதற்குப் பிறகு, சூர்யகுமாரின் சதம் ஓர் இந்தியர் அடித்துள்ள அதிவேக சதமாகப் பதிவாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்