வீகன் உணவு முறை பற்றிய கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

வெள்ளி, 28 அக்டோபர் 2022 (14:06 IST)
உலகம் முழுவதும் வீகன் எனப்படும் தாவரங்கள் சார்ந்த உணவு முறை பிரபலமாகி இருக்கிறது. இது தொடர்பான ஆராய்ச்சிகளும் நடந்து வருகின்றன. இந்த உணவு முறை தொடர்பான முக்கியமான தகவல்களை இங்கு வழங்குகிறோம்.

 
1. வீகன் என்பதும் வெஜிடேரியனும் ஒன்றா?

இல்லை. வீகன் என்பது தாவரங்கள் சார்ந்த உணவு முறைதான். அது இந்தியாவில் வெஜிடேரியன் என்று அழைக்கப்படும் சைவ உணவு முறையல்ல. காய்கறிகள், தானியங்கள், கொட்டைகள், பழங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட உணவு முறை.

வீகன் உணவு முறையில் விலங்குகளிடம் இருந்து கிடைக்கும் எந்த வகையான பொருளையும் எடுத்துக் கொள்ளக்கூடாது. பால், முட்டை இவை சார்ந்த பொருள்கள் அனைத்துக்கும் இது பொருந்தும்.

"இந்தியாவில் பால், தயிர், வெண்ணெய் உள்ளிட்டவை வெஜிடேரியன் எனப்படும் தாவர உணவு முறையின் அங்கமாக இருக்கின்றன. ஆனால் பெரும்பாலான வெளிநாடுகளில் இவை விலங்கு உணவுகளாகக் கருதப்படுகின்றன" என்று விளக்குகிறார் ஊட்டச் சத்து நிபுணரான தாரிணி.

"பாலுக்கு மாற்றாக சோயா, தேங்காய், வேர்க்கடலை ஆகியவற்றில் இருந்து பால் தயாரித்து பயன்படுத்துகின்றனர்" என்று ஊட்டச் சத்து நிபுணர் ஷைனி சுரேந்திரன் குறிப்பிடுகிறார். சிலர் இன்னும் ஒருபடி மேலே போய் தேனையும் பயன்படுத்துவதில்லை என்கிறார் அவர்.

2. வீகன் உணவு முறையைப் பின்பற்றினால் உடல் எடை குறைந்துவிடுமா?

இதை உத்தரவாதமில்லை என்கிறார் தாரிணி. மாமிச உணவு இல்லாமலேயே அளவுக்கு அதிகமான கலோரி உணவுகளை சாப்பிடும் வாய்ப்பிருக்கிறது. இது தவிர எண்ணெய் போன்றவற்றை அதிகமாகப் பயன்படுத்தினால் உடல் எடை அதிகரித்துவிடும் என்கிறார் அவர். உடல் எடை குறைவதற்கு ஆரோக்கியமான உணவு முறையுடன் உடற்பயிற்சியும் அவசியம். எந்தவகை உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுகிறோம் என்பது அவசியமில்லை.

3. வீகன் உணவு முறையைப் பின்பற்றுவோருக்கு புரதச் சத்து போதுமான அளவு கிடைப்பதில்லையா?

வீகன் உணவு வகைகளிலும் புரதச் சத்து இருக்கிறது. ஆனால் பால், இறைச்சி போன்றவற்றில் இருப்பதைவிடக் குறைவு. எனினும் பருப்பு வகைகள், பீன்ஸ் உள்ளிட்டவற்றை போதுமான அளவு சாப்பிடுவதன் மூலம் இதைச் சமன் செய்யலாம் என ஊட்டச் சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

"இறைச்சி, பால் அல்லாத பொருள்களில் இருந்தும் புரதத்தைப் பெற முடியும். அரிசியுடன் பருப்பை கூடுதலாகச் சேர்ப்பது, கெட்டியான சாம்பார் ஆகியவற்றின் மூலம் இதைச் சரி செய்யலாம். தாவர வகையிலான புரதச் சத்து மாவுகளும் கிடைக்கின்றன" என்கிறார் ஷைனி.

4. வீகன் உணவு முறையால் உடலுக்கு கால்சியம் சத்து கிடைக்காமல் போகுமா?

அசைவ உணவுகளைச் சாப்பிடுவோர் பால், தயிர், வெண்ணெய் உள்ளிட்டவற்றில் இருந்து கால்சியம் சத்தை அதிக அளவில் பெறுகின்றனர். வீகன் உணவுமுறையைக் கடைப்பிடிப்போருக்கு இது கிடைப்பதில்லை. "தானியங்களில் கால்சியம் சத்து இருக்கிறது என்றாலும் அதில் இருந்து மிகக் குறைந்த அளவே உடலுக்குச் செல்கிறது" என்கிறார் தாரிணி.

ப்ரக்கோலி, முட்டைகோஸ், உலர் பழங்கள் போன்றவற்றில் கால்சியம் சத்து இருப்பதாகவும் அவற்றை உட்கொள்வதன் மூலம் வீகன் உணவுமுறையைப் பின்பற்றுவர் கால்சியம் சத்தைப் பெற முடியும் என்றும் பிரிட்டன் சுகாதாரத்துறை கூறுகிறது.

5. வீகன் உணவு முறையால் விட்டமின் டி பற்றாக்குறை ஏற்படுமா?

கால்சியம் மற்றும் பாஸ்பேட் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதற்கு விட்டமின் டி பயன்படுகிறது. எலும்புகள், பற்கள், தசைகள் ஆகியவை ஆரோக்கியமாக இருப்பதற்கு இவை அவசியம். சூரிய ஒளிதான் விட்டமின் டி-க்கான மூலம். அதனால் உடலில் சூரியஒளி படுமாறு பார்த்துக் கொள்வது அல்லது விட்டமின் டி சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஊட்டச் சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

6. வீகன் உணவு முறையால் விட்டமின் பி12 பற்றாக்குறை ஏற்படுமா?

மாமிசம், மீன், பால் பொருள்கள் ஆகியவற்றில்தான் அதிக அளவிலான விட்டமின் பி12 கிடைக்கிறது. நரம்பு மண்டலம், ரத்தம் ஆகியவை ஆரோக்கியமாக இருப்பதற்கு இது அவசியம். "வீகன் உணவு முறையில் விட்டமின் பி12 இருக்கும் உணவுகள் மிகவும் குறைவு. அதனால் வீகன் உணவு முறையைப் பின்பற்றுவோர் பி12 சத்துமாத்திரைகள் பலருக்குத் தேவைப்படலாம்" என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி.

7. திடீரென வீகன் உணவு முறைக்கு மாறலாமா?

இறைச்சி உணவு சாப்பிடுவோர் வீகன் உணவு முறைக்கு மாற விரும்பினால் உடனடியாக மாற வேண்டாம் என உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிரிவு பரிந்துரைக்கிறது. படிப்படியாக இறைச்சியை விலக்கிவிட்டு தாவரவகை உணவுகளை சாப்பிடத் தொடங்குவது பின்பற்ற எளிமையான வழியாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. "நாள்தோறும் இறைச்சி சாப்பிடுபவர்கள் வாரத்தில் ஒருநாள் அதை விலக்கி வைப்பதில் இருந்து வீகன் உணவு முறைக்கு மாறலாம். ஒரே நாளில் வீகனுக்கு மாறுவது நடைமுறையில் சாத்தியமில்லை" என்கிறார் ஷைனி.

8. வீகன் உணவு முறையால் புற்றுநோய் வரும் ஆபத்து உள்ளதா?

உணவு முறைகளுக்கும் புற்றுநோய்க்கும் அதிக தொடர்பு இருப்பதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக மலக்குடல் புற்றுநோயுடன் உணவுப் பழக்கம் அதிகத் தொடர்பைக் கொண்டிருக்கிறது.

ஆனால், வீகன் உள்ளிட்ட தாவர வகை உணவு முறையைக் கடைப்பிடிப்போருக்கு இறைச்சி சாப்பிடுவோரைக் காட்டிலும் புற்றுநோய் ஆபத்து குறைவாக இருப்பதாக குறைந்த புற்றுநோய் தொடர்பான ஆய்வுகள் கூறுகின்றன. சிவப்பு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி ஆகியவற்றை அதிகமாகச் சாப்பிடுவது புற்றுநோய் ஆபத்தை அதிகரிப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

9. இறைச்சி சாப்பிடாமல் இருப்பதால் தசைகள் வலுவிழந்து விடுமா?

இது உண்மையல்ல என்று கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி. விளையாட்டு வீரர்கள் பலர் வீகன் அல்லது இறைச்சி இல்லாத உணவு முறையைக் கடைப்பிடிக்கிறார்கள் என்றும் அவர் கூறுகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்