ராகுல் காந்தி: “வயநாட்டில் டெபாசிட் வாங்கினாலே வெற்றிதான்”- யார் இவர்?
புதன், 10 ஏப்ரல் 2019 (15:32 IST)
பெயரில் என்ன இருக்கிறது? பெயருக்குப் பின்னால் எல்லாம் இருக்கிறது என்கிறது இரா.காமராசு கவிதை ஒன்று. ஆம், பெயரில்தான் எல்லாமும் இருக்கிறது. அதுவும் தேர்தல் களத்தில் பெயர் மிகவும் முக்கியம்.
ஒரே பெயரில் இரண்டு, மூன்று வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் செய்யும் போது அது நிச்சயம் வெற்றி தோல்வியில் தாக்கம் செலுத்தும். இதுபோல ஒரே பெயர் கொண்ட வேட்பாளர்கள், ஒரே தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வது ஒன்றும் புதிதல்ல என்றாலும் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியின் பெயரில் இரண்டு வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருப்பது தேசிய அளவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
ஒரு தொகுதி மூன்று ராகுல்
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தியை எதிர்த்து இரண்டு ராகுல் காந்திக்கள் போட்டியிடுகிறார்கள்.
அதில் ஒரு ராகுல் காந்தி (Raghul Gandhi K), நான் வெறும் பெயருக்காகவெல்லாம் போட்டியிடவில்லை, தீவிரமாக இருக்கிறேன் என்று பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
"அவர் ஒரு தேசிய தலைவர் என்றால் நான் மாநில அளவில் ஒரு தலைவர். இருவரும் அரசியலில் இருக்கிறோம். ஏதோ அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதற்காக நான் போட்டியிடுவதாக நினைக்க வேண்டாம்" என்கிறார் ராகுல் காந்தி.
நானும் காங்கிரஸ் குடும்பம்தான்
முப்பது வயதான இந்த ராகுல் காந்தியும் காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்தவர்தான். இவருடைய தந்தை காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இருந்திருக்கிறார். எனது தாத்தா சுதந்திர போராட்ட தியாகி. எனக்கு ராகுல் காந்தி என்றும், எனது மூத்த சகோதரிக்கு இந்திரா ப்ரியதர்ஷினி என்றும் பெயர் வைத்தார் என்கிறார் அவர்.
ஏன் போட்டியிடுகிறேன்?
தாம் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஒரு காரணம் இருப்பதாக கூறுகிறார் ராகுல்.
என்னுடைய வேட்புமனுவை கோயமுத்தூரில் உள்ள தேர்தல் அதிகாரிகள் தள்ளுபடி செய்துவிட்டார்கள். அவர்களுக்கு என்னை நிரூபிப்பதற்காகவே நான் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறேன் என்கிறார் அவர்.
அவர், "என் பெயர் ராகுல் என்பதற்காகவே அந்த அதிகாரிகள் எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை. வேட்புமனுவில் ஒரு இடத்தில் தகவலை நிரப்பாமல் விட்டுவிட்டதற்காக என் வேட்பு மனுவை நிராகரித்துவிட்டார்கள்." என்று பிபிசியிடம் தெரிவித்தார்.
"என்னிடம் பல திட்டங்கள் உள்ளன. அவற்றை செயல்படுத்துவதற்காகவே நான் தேர்தலில் போட்டியிடுகிறேன். ஏன் எதற்கெடுத்தாலும் மக்களிடம் வரி கேட்கிறார்கள். நான் இதனை கடுமையாக எதிர்க்கிறேன்"என்கிறார்.
பத்தாவது வரை மட்டுமே படித்த ராகுல், "இப்போது வேலைவாய்ப்பு இங்கு பெரும் பிரச்சனையாக உள்ளது."என்கிறார்.
கோயமுத்தூரில் வீட்டுக்கடன் கொடுக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார் ராகுல்.
வைப்புத் தொகை பெறுவதே வெற்றி
"என்னுடைய வைப்புத் தொகை மீண்டும் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். அதற்கு நான் மூன்றில் ஒரு பங்கு வாக்குகளை பெற வேண்டும். என் வைப்புத் தொகை மீண்டும் பெறுவதே வெற்றிதான்" என்கிறார்.
ராகுல் காந்தி என்ற பெயரில் போட்டியிடும் இன்னொரு நபரை தொடர்புகொள்ள பலமுறை முயற்சித்தோம். ஆனால் முடியவில்லை.
ஒரு பெயருடைய பல பேர் ஒரு தொகுதியில் போட்டியிடுவது கேரளாவில் மட்டும் அல்ல.
கர்நாடகா மாண்டியா மக்களவைத் தொகுதியில் மூன்று சுமலதாக்கள் போட்டியிடுகிறார்கள்.
இந்தத் தொகுதியில்தான் கர்நாடக முதல்வர் குமாராசாமியின் மகன் நிகில் கெளடா போட்டியிடுகிறார்.