சிங்கப்பூரில் பள்ளிகளை மூட உத்தரவு: குழந்தைகளை பாதிக்கும் புதிய கொரோனா திரிபால் அச்சம்
புதன், 19 மே 2021 (00:02 IST)
இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்டதாக சொல்லப்படும் கொரோனா வைரஸ் திரிபு போன்று சிங்கப்பூரில் சில திரிபுகள் காணப்படுவதாகவும், அவை குழந்தைகளை அதிகளவில் தாக்குவதாகவும் சிங்கப்பூரர்களை அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.
இதையடுத்து சிங்கப்பூரில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இளையர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை விரைவுபடுத்துவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து ஆரம்ப, உயர்நிலை, ஜூனியர் கல்லூரிகள் நாளை (மே 19) முதல் மே 28ஆம் தேதி வரை மூடப்படும் என அந்நாட்டுக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சிங்கப்பூர் கல்வி அமைச்சர் சான் சுன் சிங், அதிக ஆபத்துடைய கொரோனா திரிபுகள் இருப்பதாகவும், அவை குழந்தைகளை அதிகம் பாதிப்பதாகத் தெரிகிறது என்றும் குறிப்பிட்டார்.
பள்ளியில் படிக்கும் குழந்தைகள், மாதிரிப் படம்
இத்தகைய வைரஸ் திரிபுகளால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளிடம் லேசான அறிகுறிகள் மட்டுமே தென்படுவதாகவும், யாருக்கும் கவலைப்படத்தக்க பாதிப்புகள் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூரில் உள்ளூர்த் தொற்றின் மூலமாக 38 பேர் பாதிக்கப்பட்டனர். கடந்த ஓராண்டில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அல்லாமல், ஒரே நாளில் பதிவான அதிகபட்ச சமூகத் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை இதுவாகும்.
இவற்றுள் 18 நோய்த்தொற்றுச் சம்பவங்களுக்கான காரணம் தெரியவில்லை. மேலும் கடந்த வாரம் 10 குழந்தைகளுக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை பாதிக்கப்பட்ட 38 பேரில் நான்கு குழந்தைகளும் அடங்குவர். இந்தத் தொற்றுத் திரள் (கிளஸ்டர்) டியூஷன் மையம் ஒன்றில் இருந்து உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
இந்த புதிய வகை கொரோனா திரிபு குழந்தைகளை அதிக அளவில் தாக்குவதாக கருதப்படுகிறது என்று சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார். எனினும் எத்தனை குழந்தைகளை இந்த வைரஸ் திரிபு தொற்றியுள்ளது என்பது தெரியவில்லை என்றார் அவர்.
"தற்போது கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் சில உருமாறிய திரிபுகள் வேகமாகப் பரவுகின்றன. அவை குழந்தைகளை அதிகம் தாக்குவதாகக் கூறப்படுவதால் அடுத்து வரும் நாட்களில் நமது நடமாட்டத்தையும் ஒன்றுகூடுதல்களையும் கணிசமான அளவு குறைத்துக்கொள்ள வேண்டும்," என கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.
எனினும் பாலர் பள்ளிகள், குழந்தைப் பராமரிப்பு மையங்கள் தொடர்ந்து இயங்கும் என்றும் பணிக்குச் செல்லும் பெற்றோருக்கு உதவிகரமாக இருக்க இந்த ஏற்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் சிங்கப்பூர் ஊடகம் தெரிவித்துள்ளது.
வீட்டில் இருந்தபடியே கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட அறிவுறுத்தல்
பள்ளியில் படிக்கும் குழந்தை, மாதிரிப் படம்
இதற்கிடையே, சிங்கப்பூர் மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது.
மே 19ஆம் தேதி முதல் மே 28ஆம் தேதி வரை சிங்கப்பூரில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் வீட்டில் இருந்தபடியே கற்றல், கற்பித்தல் நடைமுறையைப் பின்பற்ற உள்ளன. வீட்டில் இருந்தபடியே மாணவர்கள் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு உரிய அறிவுறுத்தல்கள் பள்ளிகள் வழங்க வேண்டும் என கல்வி அமைச்சு அறிவுறுத்தி உள்ளது.
மாணவர்கள் கைப்பிரதிகளை வைத்துக்கொண்டு இணையம் வழியே எந்தவித இடையூறும் இன்றி கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கேற்ப பள்ளிகள் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். இணைய வசதி, மின்னணு கருவிகள் தொடர்பாக மாணவர்களுக்குத் தேவைகள் இருப்பின் பள்ளி நிர்வாகம் உரிய வகையில் உதவ வேண்டும் என்று கல்வி அமைச்சு கூறியுள்ளது.
தேவை ஏற்பட்டால் ஜூன் 13ஆம் தேதி வரை பெரும்பாலான வகுப்புகளை இணையம் வழி நடத்த பள்ளிகள் தயாராக இருக்கவேண்டும் என்றும் ஆய்வக செய்முறை வகுப்புகள் இறுதியாண்டு ஒப்படைப்புகள் போன்ற நேரில் கற்கவேண்டிய அவசியமுள்ள வகுப்புகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளதாக சிங்கப்பூர் தமிழ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
"மாணவர்கள் வெளிப்புற நடவடிக்கைகளை குறைத்துக்கொள்ள வேண்டும்"
இதற்கிடையே பள்ளி விடுமுறையை முன்கூட்டியே அறிவிக்கலாம் என்று ஒருதரப்பினர் வலியுறுத்தி வரும் நிலையில், அதற்கு அவசியமில்லை என சிங்கப்பூர் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
"மாணவர்கள் வீடுகளுக்கு வெளியே முடிந்த அளவு தங்களது நடவடிக்கைகளை குறைத்துக்கொள்ள வேண்டும் என்பதே இந்தக் கற்றல் நடவடிக்கையின் நோக்கம்," என்று கல்வி அமைச்சர் தெளிவுபடுத்தி உள்ளார்.
மாணவர்களை அர்த்தமுள்ள நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதன் மூலம் வீட்டில் இருந்தபடி கற்றல் நடவடிக்கையில் ஈடுபடுவது என்ற இலக்கின் ஒரு பகுதியை அடைய இயலும் என்று குறிப்பிட்டுள்ள அவர், மே 29ஆம் தேதியிலிருந்து ஜூன் 27 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக கூறியுள்ளார்.
கவலை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் திரிபுகள்:
வீட்டில் இருந்தபடி கற்றல் நடவடிக்கையில் மாணவர்களை ஈடுபடுத்தும் நடைமுறை தொடங்குவதற்கு முன்பே சில மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சிங்கப்பூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதையடுத்து அங்குள்ள 7 தொடக்கப் பள்ளிகள் அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்பாகவே புதிய கற்றல் நடைமுறையை பின்பற்றத் தொடங்கிவிட்டன.
டியூஷன் மையங்களுக்குச் சென்ற மாணவர்களுக்குதான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பள்ளிகளில் இதுவரை யாருக்கும் நோய்த்தொற்று ஏற்படவில்லை என்றும் கல்வி அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.
கொரோனா வைரஸ் திரிபுகள் வேகமாக பரவக்கூடியவை என்பதும் குழந்தைகளை அதிகம் தாக்கக்கூடியவை என்பதும் கவலை அளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், அடுத்த அறிவிப்பு வரும் வரை பெரும்பாலான கற்றல் நடவடிக்கைகளை இணையம் வழி செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்கிடையே சிங்கப்பூரில் 12 முதல் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அந்நாட்டின் சுகாதார அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது. இத்தகவலை சுகாதார அமைச்சர் ஓங் யி காங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஃபைசர், பயோ என்டெக் நிறுவன தடுப்பூசிகள்தான் அந்த வயதினருக்கு செலுத்தப்படும் என்றார் அவர். சிங்கப்பூர் அறிவியல் ஆணையம் எடுத்துள்ள இந்த முடிவுக்கு கோவிட் தடுப்பூசிகள் தொடர்பான நிபுணர் குழு ஆதரவளித்துள்ளதாக அமைச்சர் ஓங் மேலும் தெரிவித்துள்ளார்.