Once Upon a time in Hollywood - சினிமா விமர்சனம்

வியாழன், 15 ஆகஸ்ட் 2019 (18:00 IST)
ஹாலிவுட்டின் பொற்காலம் எனக் கருதப்படும் 1960களின் பிற்பகுதியில் நடக்கிறது கதை. ரிக் டால்டன் (லெனார்டோ டி காப்ரியோ) ஒரு தொலைக்காட்சி நடிகர். சண்டைக் கலைஞரான க்ளிப் பூத் (பிராட் பிட்) ரிக் டால்டனுக்கு டூப்பாக நடிப்பவர். இருவரும் நண்பர்கள்.


 
ஆனால், ஒரு கட்டத்தில் ரிக்கிற்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பிக்கின்றன. அந்தத் தருணத்தில் ஒரு கௌபாய் வில்லன் பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வருகிறது.
 
அதில் முதலில் சொதப்பும் ரிக், பிறகு பிரமாதமாக நடிக்கிறான். இதற்குப் பிறகு இத்தாலிக்குச் சென்று சில மேற்கத்திய சாகசங்களில் நடித்துவிட்டு ரிக்கும் க்ளிஃபும் அமெரிக்கா திரும்புகிறார்கள்.
 
திரைப்படம் Once Upon a time in Hollywood
நடிகர்கள் லெனார்டோ டி காப்ரியோ, பிராட் பிட், மார்கோட் ராபி, அல் பாசினோ, எமில் ஹிர்ஷ்
இயக்கம் க்வென்டின் டொரன்டினோ
இனி இருவரும் சேர்ந்து பயணிப்பதில் பயனில்லை என முடிவுசெய்யும் அவர்கள், உணவருந்த ஒரு நாள் இரவு ஒன்று சேர்கிறார்கள். அப்போது, பக்கத்து வீட்டிலிருக்கும் இயக்குனர் ரொமன் பெலான்ஸ்கியின் மனைவியை (மார்கோட் ரபி) கொல்லவரும் ஹிப்பி கும்பல், இவர்களைக் கொல்ல முயல்கிறது. ஆனால், சண்டைக் கலைஞனான க்ளிஃப், அனைவரையும் வீழ்த்திவிடுகிறான்.
 
ஒரு வகையில் பார்த்தால், மேலே உள்ள கதையைப் படிக்கும் ஒருவர் இது எப்படி சுவாரஸ்யமான படமாக இருக்கும் என கேட்கலாம். இந்தப் படத்தின் முக்கியமான அம்சம் கதையல்ல; அது சொல்லப்படும் விதம்தான். மாற்றம் நிகழும்போது அதனை எப்படி எதிர்கொள்வது, அந்த மாறிய சூழலில் முக்கியமானவர்களாக இருப்பது எப்படி என்ற மனப்போராட்டம்தான் இந்தப் படத்தின் அடிநாதம்.


 
இயக்குனர் ரொமன் பொலான்ஸ்கி, ஸ்டீவ் மெக்குயின், ப்ரூஸ் லீ என ஹாலிவுட்டின் நிஜமான பாத்திரங்கள் படத்தில் ஆங்காங்கு வருகிறார்கள். ஆனால், படம் பிரதானமாக க்ளிஃபையும் ரிக்கையும் சுற்றி மட்டுமே நகர்கிறது.
 
மிக மெதுவாக நகரும் இந்தப் படத்தில் பல காட்சிகள் மிக சுவாரஸ்யமானவை. குறிப்பாக, கௌபாய் வில்லனாக வரும் ரிக் டால்டனை எட்டு வயதுச் சிறுமி தனது பேச்சின் மூலம் அசத்துவது, ஹிப்பி கும்பலைச் சேர்ந்த ஒரு பெண்ணை அவளது வசிப்பிடத்தில் விடச் செல்லும் க்ளிஃப், அங்கே தன் பழைய நண்பனை பார்க்கச் செல்வது ஆகியவை சில உதாரணங்கள்.


 
தவிர சின்னச் சின்னப் பாத்திரங்களில் எல்லாம் அல் பாசினோ, மார்கோட் ராபி போன்ற பெரிய நட்சத்திரங்கள் வந்துசெல்கிறார்கள்.
 
டொரன்டினோ படங்களுக்கே உரிய கொடூர வன்முறை இந்தப் படத்தில் இல்லை. அந்தக் குறையை க்ளைமாக்ஸில் ஈடுகட்ட முயற்சித்திருக்கிறார் என்றாலும் அவ்வளவு மோசமில்லை.
 
60களில் வெளிவந்த ஹாலிவுட் படங்களை ரசித்தவர்கள், டொரன்டினோவின் அதிதீவிர ரசிகர்கள் ஆகியோர் இந்தப் படத்தை வெகுவாக ரசிக்கலாம். மற்றவர்களைப் பொறுத்தவரை நேரம் அதிகமிருந்தால் பார்க்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்