கொரோனா வைரஸின் புதிய திரிபை 89% எதிர்கொள்ளும் புதிய தடுப்பூசி நோவாவேக்ஸ்
வெள்ளி, 29 ஜனவரி 2021 (08:52 IST)
பிரிட்டனில் நடத்தப்பட்ட ஒரு புதிய தடுப்பூசி பரிசோதனையில், அது 89.3 சதவீதம் கொரோனா வைரஸுக்கு எதிராக செயல்திறனோடு இருப்பது தெரிய வந்திருக்கிறது.
அந்த தடுப்பு மருந்தின் பெயர் நோவாவேக்ஸ். இந்த மருந்து பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் புதிய திரிபுக்கு எதிராக கூடுதல் செயல்திறனோடு இருப்பதைக் காட்டி இருக்கிறது என பிபிசியின் மருத்துவ ஆசிரியர் ஃபெர்குஸ் வால்ஷ் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனின் பிரதமர் இந்த நற்செய்தியை வரவேற்றிருக்கிறார், அதோடு நோவாவேக்ஸ் தடுப்பு மருந்தை பிரிட்டனின் மருந்து நெறிமுறையாளர்கள் மதிப்பிடுவார்கள் எனவும் கூறியுள்ளார்.
பிரிட்டன் இந்த புதிய நோவாவேக்ஸ் தடுப்பு மருந்திலும் 60 மில்லியன் டோஸ்களை ஆர்டர் செய்திருக்கிறது. இந்த மருந்து இங்கிலாந்திலிருக்கும் ஸ்டாக்டன் நகரில் தயாரிக்கப்படும்.
ஒருவேளை இந்த மருந்துக்கு பிரிட்டனின் மெடிசின்ஸ் & ஹெல்த்கேர் ப்ராடெக்ட்ஸ் ரெகுலேட்டரி ஏஜென்சி (பிரிட்டனின் மருந்து கட்டுப்பாட்டு முகமை) அனுமதி வழங்கினால், நோவாவேக்ஸ் உற்பத்தி செய்யப்பட்டு, இந்த ஆண்டின் பிற்பகுதியில் வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாக பிரிட்டன் அரசு கூறுகிறது.
ஆக்ஸ்ஃபோர்டு - ஆஸ்ட்ராசெனீகாவின் தடுப்பு மருந்து, பிஃபிசர் - பயோஎன்டெக், மாடர்னா என இதுவரை பிரிட்டன் மூன்று தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கி இருக்கிறது.
18 முதல் 84 வயது வரையிலான பல்வேறு வயதுடையவர்கள் அடங்கிய, 15,000 பேர் கலந்து கொண்ட மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையில், கொரோனா வைரஸுக்கு எதிராக நோவாவேக்ஸ் தடுப்பூசி 89.3% செயல்திறனைக் காட்டியிருக்கிறது. இதில் 27 சதவீதத்தினர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் என நோவாவேக்ஸ் கூறியுள்ளது.
கொரோனா வைரஸின் தென் ஆப்பிரிக்கத் திரிபால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் பங்கெடுத்த பரிசோதனையில், ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்படாதவர்களிடம் 60 சதவீதம் செயல்திறனைக் காட்டியிருக்கிறது.
"பிரிட்டனில் நடத்தப்பட்ட சோதனைகளின் முடிவுகள் நாங்கள் நம்பியது போல பிரமாதமாக இருந்தது. அதே நேரத்தில் தென் ஆப்பிரிக்காவில் நடத்தபட்ட சோதனையில் மருந்தின் செயல்திறன் மக்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே இருந்தது," என்கிறார் நோவாவேக்ஸின் முதன்மைச் அதிகாரியான ஸ்டான் எர்க்.
"நோவாவேக்ஸ் மருந்துக்கு பிரிட்டனின் மருந்து மற்றும் சுகாதார பொருட்கள் ஒழுங்கு கட்டுப்பாட்டு முகமை அனுமதி வழங்கிய பின் ஸ்டாக்டன்னில் இருக்கும் உற்பத்தி ஆலையில், அதன் உற்பத்தி மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்படும்," என பிபிசியிடம் கூறினார் எர்க்.
`வைரஸுக்கு எதிரான மற்றொரு ஆயுதம்`
நோவாவேக்ஸ் அனுமதிக்கப்பட்டால் அதை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டு வர பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை தயாராக இருப்பதாக பிரிட்டனின் சுகாதாரச் செயலர் மேட் ஹென்காக் கூறினார்.
"இது ஒரு நற்செய்தி. நோவாவேக்ஸுக்கு பிரிட்டனின் மருந்து மற்றும் சுகாதார பொருட்கள் ஒழுங்கு கட்டுப்பாட்டு முகமை அனுமதி வழங்கினால், பிரிட்டனின் தடுப்பூசித் திட்டத்துக்கு மிகப் பெரிய ஊக்குவிப்பாக இருக்கும். கொரோனா வைரஸை எதிர்கொள்ள நமக்கு மற்றொரு ஆயுதம் கிடைத்தது போலிருக்கும்," எனக் கூறினார் ஹென்காக்.
"பிரிட்டன் மற்றொரு அரிய மருத்துவ கண்டுபிடிப்பின் விளிம்பில் இருப்பதை நினைத்துப் பெருமை அடைகிறேன். விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நோவாவேக்ஸ் பரிசோதனையில் பங்கெடுத்த ஆயிரக் கணக்கான தன்னலமற்ற தொண்டர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்" என அவர் மேலும் தெரிவித்தார்.
"நோவாவேக்ஸ் தடுப்பூசி பரிசோதனையில் பல வியப்பான விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இது அதிக செயல்திறன் கொண்ட பாதுகாப்பான கொரோனா தடுப்பு மருந்து. குறிப்பாக அதிவேகமாக பரவக் கூடிய கொரோனா வைரஸின் பிரிட்டன் திரிபுக்கு எதிராக இந்த தடுப்பு மருந்து அதிக செயல்திறனோடு இருக்கிறது," என்கிறார் நோவாவேக்ஸ் தடுப்பு மருந்தின் முதன்மை ஆய்வாளராக இருக்கும் பேராசிரியர் பால் ஹீத்.
"பிரிட்டனில் நடத்திய சோதனையில் நோவாவேக்ஸ் அதிக பாதுகாப்பை வழங்குவது நல்ல விஷயம் தான், ஆனால் தென் ஆப்பிரிக்காவில் நடத்திய சோதனையில் குறைந்த அளவிலேயே பாதுகாப்பு வழங்குவது தான் கவலையளிக்கிறது," என்கிறார் இம்பீரியல் காலேஜ் ஆஃப் லண்டனைச் சேர்ந்த சோதனை மருத்துவப் பேராசிரியர் பீட்டர் ஓபன்ஷா.
பிரிட்டனை பொறுத்தவரை ஆக்ஸ்ஃபோர்ட் - ஆஸ்ட்ராசெனீகா தடுப்புமருந்து மொத்தம் 100மில்லியன் டோஸ், பிஃபிசர் - பயோஎன்டெக் தடுப்பு மருந்து 40மில்லியன் டோஸ்களும் கோரப்பட்டுள்ளன.
மேலும் பிரிட்டனின் மருந்து மற்றும் சுகாதார பொருட்கள் ஒழுங்கு கட்டுப்பாட்டு முகமையால் ஒப்புதல் வழங்கப்பட்ட மாடர்னா மருந்து 17 மில்லியன் டோஸ்களில் வசந்த காலத்தில் வந்து சேரும்.
இந்த நோவாவேக்ஸ் தடுப்பு மருந்து பிரிட்ஜ் வெப்பநிலையில் வைக்க கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.