ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் இந்தியாவில் ஒருவர்கூட உயிரிழக்கவில்லை - மத்திய அரசு
புதன், 21 ஜூலை 2021 (13:35 IST)
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின்போது ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் யாரும் உயிரிழக்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அளித்த அறிக்கைகளின் மூலம் இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் யாரும் உயிரிழக்கவில்லை என்பது தெரிய வருகிறது என குறிப்பிட்டுள்ளது.
மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி என்ன?
1.கொரோனாவின் இரண்டாம் அலையில், நோயாளிகள் ஆக்சிஜன் கிடைக்காமல் சாலைகள் மற்றும் மருத்துவமனைகளில் உயிரிழந்தது உண்மையா?
2.கடந்த மூன்று மாதங்களில் மாநிலங்களின் ஆக்சிஜன் தேவை எவ்வளவாக இருந்தது? எவ்வளவு ஆக்சிஜன் வழங்கப்பட்டது?
3.கொரோனா மூன்றாம் அலை குறித்து நிபுணர்கள் எச்சரித்துள்ள நிலையில், ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
மத்திய அரசின் பதில்
1.சுகாதாரம் மாநில அரசின் கீழ் வருகிறது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் கொரோனா உயிரிழப்புகளை கணக்கிடும் வழிமுறைகள் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன. அதனை பின்பற்றி அனைத்து மாநிலங்களும் மத்திய அரசிடம் இறப்பு எண்ணிக்கையை தெரிவித்தன. எனினும், எங்கும் ஒருவர் கூட ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்ததாக எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.
2.மருத்துவ ஆக்சிஜன் விநியோகிப்பவருக்கும் அந்தந்த மருத்துவமனை நிர்வாகத்திற்கும் போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே மருத்துவ ஆக்சிஜன் விநியோகம் நடைபெறும். எனினும் வழக்கத்தை விட அதிகமான ஆக்சிஜன் அளவு கொரோனா இரண்டாம் அலையின்போது தேவைப்பட்டது. கொரோனா முதல் அலையின்போது 3095 எம்டி-யாக இருந்த ஆக்சிஜன் தேவை, இரண்டாம் அலையின்போது 9000 மெட்ரிக் டன்னாக அதிகரித்தது. இந்நிலையில், அனைத்து மாநிலங்களுக்கும் சரியான அளவு ஆக்சிஜன் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு அளவு, இரட்டிப்பு விகிதம், மருத்துவ கட்டமைப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, மாநிலங்கள், சம்மந்தப்பட்ட அமைச்சகங்கள், திரவ ஆக்சிஜன் விநியோகிப்பவர்கள் ஆகியோரிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டு மத்திய அரசு ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்தது.
3.கொரோனா இரண்டாம் அலையின்போது ஏற்பட்ட ஆக்சிஜன் தேவையை சமாளிக்க மாநில அரசுகளுடன் சேர்ந்து மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 2020ல் 5700 மெட்ரிக் டன்னாக இருந்த திரவ மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி, 2021 மே மாதத்தில் 9690 மெட்ரிக் டன்னாக உயர்த்தப்பட்டது.
தொழிற்சாலைகள் ஆக்சிஜன் பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
மருத்துவ ஆக்சிஜனை வீணாக்காமல் பயன்படுத்த செப்டம்பர் 2020ல் வழிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்த வழிமுறைகள் 2021 ஏப்ரல் மாதம் புதுப்பிக்கப்பட்டு, மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டது.
மேலும் மாநிலங்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள், கான்சென்ட்ரேட்டர்கள் போன்ற உபகரணங்கள் வழங்கப்பட்டன. மொத்தம் 4,02,517 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்கப்பட்டு, அவை மாநிலங்களுக்கு விநியோகிக்கப்பட்டன. மேலும் 1222 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது. மாநில அளவிலும் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் தொடங்க அறிவுறுத்தப்பட்டது.
இந்தியாவின் கொரோனா இரண்டாம் அலை
கடந்த ஏப்ரல் மே மாதங்களில் மேற்கு இந்தியாவின் மகாராஷ்டிரா, குஜராத், வட இந்தியாவின் டெல்லி, உத்தரப்பிதேசம், ஹரியாணா, மத்தியப் பிரதேசம் என பல மாநிலங்களிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவியதாக செய்திகள் வெளியாகின.
குறிப்பாக தலைநகர் டெல்லியில் உள்ள பல மருத்துவமனைகளும் ஆக்சிஜன் தீர்ந்துவிட்டதாகவும், தங்களுக்கு உதவும்படியும் தொடர்ந்து ட்விட்டரில் பதிவிட்டு வந்தன.
இந்தியாவில் ஆக்சிஜன் கிடைக்காமல் கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்தாக பல சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
மேலும் வட மாநிலங்களில் சாலைகளிலும், மருத்துவமனைகளிலும் மக்கள் மருத்துவ உதவி இல்லாமல் படுத்துகிடந்த காட்சிகளும், மயானங்கள் நிறம்பி சடலங்களை எரியூட்டக்கூட இடம் கிடைக்காத செய்திகளும் உலகத்தை இந்தியா பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.