'ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்' பாடல் ரீ மிக்ஸ் ஆகிறது: நீயா-2 இயக்குநர் சுரேஷ் நேர்காணல்
செவ்வாய், 14 மே 2019 (19:27 IST)
தமிழ் சினிமாவில் இது சீக்வெல் சீசனாக இருக்கிறது. 'பில்லா-2' படத்தின் வெற்றியை சரியாக கணிக்காத தமிழ் சினிமா இயக்குநர்கள் தற்போது வெற்றிப்பெற்ற படங்களின் அடுத்தப் பாகத்தை ஆர்வமுடன் இயக்கி வருகிறார்கள்.
அந்த வரிசையில், கேத்ரின் தெரசா, ராய் லட்சுமி, வரலட்சுமி என மூன்று ஹீரோயின்களுடன் ஜெய் ஹீரோவாக நடிக்க, 'நீயா-2' படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் எல். சுரேஷ். திரைப்படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ள நிலையில் பிபிசி தமிழிடம் பேசினார் எல். சுரேஷ்.
தமிழ் சினிமாவின் சீக்வெல் சீசனுக்காக 'நீயா-2'வா? இல்லை.. நீயாவோட தொடர்ச்சியா?
நிச்சயமா இந்தப் படம் நீயாவோட தொடர்ச்சி எல்லாம் கிடையாது. நீயா படத்துக்கும் இந்தப் படத்துக்கும் இருக்கிற ஒற்றுமைகள் என்னன்னா, ரெண்டுமே ஒரு பாம்பு படம். தவிர, 'ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்' பாட்டை இந்தப் படத்துல ரீ-மிக்ஸ் பண்ணி பயன்படுத்தியிருக்கோம்.
கமல் ஹாசன், ஸ்ரீப்ரியா, லதான்னு பெரிய ஹிட்டடிச்ச படம் 'நீயா'. அப்படி அந்தப் படம் பெரிய வெற்றி பெற்றதுனால அதே தலைப்பை இதற்கும் வைத்திருக்கிறோம். மத்தப்படி அந்த படத்திற்கும் இதற்கும் வேறு எந்த சம்பந்தமும் கிடையாது.
தமிழ் சினிமாவில் பேய் பட சீசனே இன்னும் முடிவுக்கு வராமல் இருக்கு. இந்த நேரத்தில் பாம்பு படங்கள் ரசிகர்களிடம் எடுபடுமா?
தமிழ் சினிமாவுல இதுவரைக்கும் வெளிவந்த பாம்பு படங்கள் எல்லாவற்றிலுமே ஏதோவொரு விதத்துல பழிவாங்குகிற கதைகளாகவே இருக்கும். படத்தின் பிற்பகுதியில் பாம்பு ரிவெஞ்ச் எடுக்கிற மாதிரியான கதைகள் தான் தமிழ்ல அதிகளவில் வெளியாகியிருக்கு. இந்தப் படம் ஒரு அழுத்தமான காதல் கதையா இருக்கும். இதுவரைக்கும் தமிழில் இந்தமாதிரியான ஒரு காதல் கதையோட படம் வெளிவந்த மாதிரி தெரியலை. தவிர, பேய் படங்களில் இருக்கிற விறுவிறுப்புக்கும், சுவாரஸ்யத்திற்கும் கொஞ்சமும் குறைவில்லாம தான் 'நீயா-2' வை எடுத்திருக்கேன்.
வரலட்சுமி தொடர்ந்து ரெண்டு, மூணு கதாநாயகிகளோட நடிக்கறாங்க. நெகட்டிவ் கதாபாத்திரங்களா தேர்ந்தெடுத்து நடிக்குறாங்க. அவங்க எப்படி பாம்பாக நடிக்க சம்மதிச்சாங்க?
இந்தக் கதையைச் சொன்னப்பவே, முழுக் கதையையும் கேட்டுட்டு, இச்சாதாரி நாகமா நான் தானே பண்றேன்னு ஆசையா வந்தாங்க. அவ்வளவு பலமான, பவர்ஃபுல்லான கதாபாத்திரம் அவங்களுக்கு. அவங்களோட உருவத்திற்கு அந்த கதாபாத்திரத்தை அத்தனை சுவாரஸ்யமா செஞ்சிருக்காங்க. நடிகர்களுக்கு, நடிக்கிற கதாபாத்திரத்திற்கு நேர்மை செய்யணும் என்பது மட்டும் தான் எண்ணமா இருக்கணும்னு நினைக்கிறவங்க வரலட்சுமி.
ஒரு நடிகை இருந்தாலே ஷூட்டிங் ஸ்பாட்ல ஏகப்பட்ட ஈகோ முளைக்கும். மூணு நடிகைகளை வெச்சு படமெடுத்தது கஷ்டமா இல்லையா?
படத்துல மூணு பொண்ணுங்க இருந்தாலும், எல்லாருமே அவங்கவுங்க கேரெக்டரை உணர்ந்து, உள்வாங்கி நடிச்சதால பெருசா ஷூட்டிங்ல சண்டை, சச்சரவுகள் எல்லாம் எதுவுமே ஏற்படலை. இன்னும் சொல்லப் போனா மூணு பேருக்கும் படத்துல காம்பினேஷன் காட்சிகள் எல்லாம் இருக்கு. ஆனாலும் ஈகோ பார்க்காமல் மூன்று பேருமே நன்றாக நடித்துக் கொடுத்தாங்க.
பொதுவாக பிரபலமடைஞ்ச பாடலை ரீ-மிக்ஸ் பண்ணும் போது, பாடலோட ஒரிஜினாலிட்டியை சிதைச்சிடுவதா ஒரு எண்ணம் இருக்கே... 'ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்' பாட்டு எப்படி வந்திருக்கு?
எனக்கு அந்த பயம் இருந்தது நிஜம்தான். புதுசா ஒரு பாடலை எடுக்கும் போது சுலபமா மக்கள் அங்கீகரிச்சுடுவாங்க. பெரிய ஹிட்டானப் பாட்டை, நாம எவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்தாலும், ஒரே வார்த்தையில் 'அந்தப் பாட்டு மாதிரி இல்லை'ன்னு காலி பண்ணிடுவாங்க. அதுவும், கமல், ஸ்ரீப்ரியான்னு அப்போதிலிருந்து இன்னைக்கும் வரைக்கும் ரசிகர்களின் மனசுல கொண்டாடுகிற பாட்டு அது.
அதனால் அதிகமா அந்தப் பாட்டோட ஒரிஜினாலிட்டி சிதைந்துவிடாமதான் ரீ-மிக்ஸ் பண்ணியிருக்கோம். படத்தோட கதையிலும் ரொம்ப சரியான இடத்துல அத்தனை அழகா அந்தப் பாட்டு பொருந்தியிருக்கு. படம் பார்க்கும் போது, பாட்டை வலுக்கட்டாயமா திணிச்ச மாதிரி இருக்காது.