ஈஷாவில் யோகா பயிற்சிக்கு சென்றபோது மாயமான பெண் சடலமாக மீட்பு – குடும்பத்தினர் சந்தேகம்

திங்கள், 2 ஜனவரி 2023 (11:07 IST)
கோவை ஈஷா யோகா மையத்திற்கு யோகா பயிற்சிக்காகச் சென்ற அவினாசியைச் சேர்ந்த பெண்ணைக் காணவில்லை என்று அவருடைய கணவர் காவல்துறையில் புகார் அளித்திருந்தார். அந்தப் பெண் தற்போது செம்மேடு காந்தி நகர் பகுதியிலுள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
 
திருப்பூர் மாவட்டம், அவினாசியைச் சேர்ந்தவர் பழனிகுமார். அவருக்கும் அவருடைய மனைவி சுபஸ்ரீக்கும் 11 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. பழனிகுமார், தனது மனைவியைக் காணவில்லை என்று டிசம்பர் 19ஆம் தேதியன்று கோவையிலுள்ள ஆலாந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அந்தப் புகாரில், “எனது மனைவி நியூ திருப்பூரிலுள்ள ஒரு பனியன் கம்பெனியில் கடந்த 8 ஆண்டுகளாக கணினி ஆபரேட்டராகப் பணியாற்றி வருகிறார். அவர் கோயம்புத்தூர் ஆலாந்துறையிலுள்ள ஈஷா யோகா மையத்தில் ஒரு வார யோகா பயிற்சியில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு முதன்முறையாகக் கலந்துகொண்டார்.
 
அதேபோல, கடந்த டிசம்பர் மாதம் 11ஆம் தேதியன்று காலை 6 மணிக்கு அதே வகுப்பில் மீண்டும் கலந்துகொள்வதற்காக அவரை ஈஷா யோகா மையத்தில் விட்டுவிட்டு வந்தேன்.
 
அங்கிருந்து மீண்டும் அழைத்து வருவதற்காக 18ஆம் தேதியன்று காலை 7 மணிக்குச் சென்று காத்திருந்தேன். 11 மணிக்கு வகுப்பு முடிந்தும் மனைவி வெளியே வராததால், மாலை சுமார் 3 மணிக்கு உள்ளே சென்று விசாரித்தபோது, வகுப்பு முடிந்து அனைவரும் சென்றுவிட்டதாகத் தெரிவித்தனர்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், டிசம்பர் 18ஆம் தேதியன்று அவர் பதிவு செய்துள்ள புகாரின்படி, அவருடைய மனைவி அன்று காலையில் வகுப்பிலிருந்து கர்ப்பவாசல் வழியாக வெளியேறியது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது. அங்கு ஒரு டாக்சியை நிறுத்தி, ஏறிச் சென்றதும் தெரிய வந்ததாக அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
 
அதோடு, தனது கைபேசிக்கு ஒரு புதிய எண்ணிலிருந்து மிஸ்டு கால் வந்ததாகவும் அந்த எண்ணைத் தொடர்புகொண்டபோது, ‘ஒரு பெண் தனது கணவரிடம் பேச வேண்டும் என்று கேட்டதாகவும் யாரும் அழைப்பை ஏற்கவில்லை என்பதால் திருப்பிக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார்’ என்று மறுமுனையில் பேசியவர் கூறியதாகவும் பழனிகுமார் அளித்த புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
 
இந்நிலையில், சுபஸ்ரீ ஏறிச் சென்ற டாக்சி டிரைவரும் அவர் செம்மேடு முட்டத்துவயல் பகுதியில் இறங்கியதாகத் தெரிவித்ததாக பழனிகுமார் கூறியுள்ளார். அதற்குப் பிறகு அவர் எங்கு சென்றார் என்பது தெரியாமலிருந்த நிலையில், தற்போது செம்மேடு காந்தி நகர் பகுதியிலுள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
 
அங்கு மீட்கப்பட்ட சடலத்தைப் பற்றிய விசாரணையின்போது, இறந்துள்ள பெண் தனது மனைவி சுபஸ்ரீ தான் என்பதை அவருடைய கணவர் பழனிகுமார் உறுதி செய்துள்ளார். அவருடைய உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், இந்த சந்தேக மரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
 
ஈஷா நிர்வாகம் தரப்பில் இதுகுறித்து விசாரித்தபோது, இது தங்கள் வளாகத்திற்கு வெளியே நடந்த ஒரு சம்பவம் என்பதால் அதில் கருத்து ஏதும் கூற இயலாது எனத் தெரிவித்தனர்.
 
உயிரிழந்த சுபஸ்ரீயின் சகோதரர் தன் தங்கையின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறுகிறார்.
 
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "சிசிடிவி காட்சிகளில் பார்த்தபோது அங்கிருந்து என் தங்கை அவசரமாக வெளியே வந்தது பதிவாகியுள்ளது. அவர் தற்கொலை செய்வதற்கு யோசிக்கக் கூடியவர் இல்லை. என் தங்கைக்கு அப்படிச் செய்யும் அளவுக்கு எந்தவொரு பிரச்னையும் இருந்ததில்லை.
 
சாலையில் இருந்து 50 அடி தள்ளி உள்ளே இருக்கும் கிணறு அவருக்குத் தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை. அங்கிருந்து தான் அவருடைய உடல் மீட்கப்பட்டுள்ளது. இது தற்கொலையாக இருக்கும் என்று நாங்கள் நம்பவில்லை.
 
இதற்குப் பின்னால் ஏதோ ஒன்று இருப்பது போலத்தான் தெரிகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை வருவதற்காகக் காத்திருக்கிறோம். அது வந்தபின் என்ன நடந்தது என்பது தெளிவாகத் தெரிந்துவிடும்," எனக் கூறினார்.
 
“போலீசார் அவசர அவசரமாக பெண்ணின் பிரேத பரிசோதனையைச் செய்வதின் மர்மமென்ன?” என்று சிபிஎம் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் அவருடைய சடலத்தை வருவாய்த்துறை, மாவட்ட நீதிபதிகள் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
 
“காவல்துறை அவசர அவசரமாக உடற்கூராய்வு செய்ய முயல்கிறது. இந்த நடைமுறை தவறானது. வருவாய்த்துறை அதிகாரியின் முன்னிலையில், மாவட்ட நீதிபதியின் விரிவான விசாரணைக்குப் பிறகே உடற்கூராய்வு செய்ய வேண்டும் என்று கோவை மாவட்ட காவல்துறையைக் கேட்டுக் கொள்கிறோம்.
 
கடந்த 12 நாட்களாக என்ன நடந்தது என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியது தமிழ்நாடு அரசு மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கடமை என்பதையும் வலியுறுத்துகிறோம்,” என்று சி.பத்மநாபன் தெரிவித்துள்ளார்.
 
இதுதொடர்பாக பேரூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜபாண்டியன் பிபிசி தமிழிடம் பேசுகையில், "பிரேத பரிசோதனை தற்போது தான் நிறைவடைந்துள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு தான் அடுத்த கட்ட விசாரணை நடைபெறும். பிரேத பரிசோதனை முறையாகத்தான் நடத்தப்பட்டுள்ளது.
 
இதில் எந்த சர்ச்சைகளும் இல்லை. ஏற்கெனவே நடத்தப்பட்ட விசாரணைகளில் ஈஷா நிர்வாகத்திடமும் விசாரணை நடைபெற்றுள்ளது. அங்கே பயிற்சியில் கலந்து கொண்ட சிசிடிவி காட்சிகளும் உள்ளது. இதில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்