நரேந்திர மோதிக்கு கடிதம் எழுதிய மு.க. ஸ்டாலின் - மேகேதாட்டு அணை கூடாது

செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (13:14 IST)
காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகேதாட்டு அணையை கட்ட அனுமதி வழங்கக்கூடாது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கர்நாடக முதலமைச்சர் மேகேதாட்டு திட்டத்துக்கான அனுமதியை, மத்திய அரசு விரைவாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள சூழலில் இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் அது, 2007ஆம் ஆண்டு வழங்கப்பட்ட காவிரி நதிநீர் நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கும், 2018ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கும் எதிரானது என்றும் அந்த கடிதத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.


 
இந்தக் கடிதத்தை திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, கனிமொழி, திருச்சி சிவா, ஆ. ராசா, தயாநிதி மாறன் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோதியை நேரில் சந்தித்து வழங்கினார்.

மேகேதாட்டு அணை கட்டுவது தமிழக மக்களின் குடிநீர் ஆதாரத்துக்கும் விவசாயிகளுக்கும் எதிரானது என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மேகேதாட்டு அணை கட்டப்படுவதை தொடர்ந்து எதிர்த்து வருவதாகவும், அதற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் மு.க. ஸ்டாலின் நரேந்திர மோதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேகேதாட்டு அணை கட்டப்படுவதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது என ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேகேதாட்டு அணை காவிரியின் கடைமடை பகுதிகளுக்கு நீர் வருவதை கடுமையாக பாதிக்கும்; அது தமிழகத்தில் உள்ள பல லட்சம் மக்களுக்கான குடிநீர் விநியோகத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று ஸ்டாலின் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

எனவே கர்நாடக அரசு சமர்ப்பித்துள்ள விரிவான திட்ட அறிக்கைக்கும், மேகேதாட்டு அணை கட்டப்படுவதற்கும், தொடர்புடைய அமைச்சரவைகள் எந்த விதமான அனுமதியும் வழங்கக்கூடாது என்று அறிவுறுத்துமாறு தனது கடிதத்தில் பிரதமர் நரேந்திர மோதிக்கு மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்