'மோதி அரசுக்கு வெட்கமும் இல்லை; தவறுகளையும் ஏற்றுக்கொள்ளாது' - ப. சிதம்பரம்
செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (08:56 IST)
இந்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், மத்தியில் ஆளும் நரேந்திர மோதி அரசை, கொரோனா பெருந்தொற்றை கையாள்வதில் திறனற்று உள்ளதாகவும், அதன் விளைவு, உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சியை ஆழமான சரிவுக்கு கொண்டு சென்றதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
பிபிசி தமிழுக்கு அவர் அளித்த பிரத்யேக நேர்காணலில், மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவு தொடர்பான காலாண்டு மதிப்பீடு, தனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை என்று கூறினார்.
"நாங்கள் ஏற்கெனவே அரசுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறோம். உலகெங்கிலும் உள்ள பொருளாதார வல்லுநர்கள் இந்தியாவை எச்சரித்தனர். மூன்று நாட்களுக்கு முன்புதான், இந்திய ரிசர்வ் வங்கி தனது ஆண்டு அறிக்கையில் என்ன நேரப்போகிறது என முன்னறிவித்தது" என்று சிதம்பரம் கூறினார்.
இந்த ஆண்டின் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மிகக் குறைவான அளவாக -23.9% ஆக சரிந்தது. இது கோவிட் -19 பெருதொற்றின் விளைவு மற்றும் பொது முடக்கத்தால் ஏற்பட்டதாகவும், ஏற்கெனவே மந்தமாக இருந்த இந்திய பொருளாதாரத்தில் அது மேலும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்தது.
இந்திய பொருளாதார மொத்த உற்பத்தி வளர்ச்சி, இதுபோன்ற ஆழமான பாதாளத்துக்கு செல்லும் என்பதை பிரதமரையும் இந்திய நிதியமைச்சரையும் தவிர அனைவரும் அறிந்திருந்தார்கள் என்று சிதம்பரம் கூறினார்.
மோதி அரசின் குட்டு வெளிப்பட்டது
"அவர்களின் செயல்பாட்டால் நாடு, ஒட்டுமொத்தமாக மிகப்பெரிய விலையை செலுத்தி வருகிறது. ஏழைகளும் பாதிக்கப்படக்கூடியவர்களும் விரக்தியில் உள்ளனர். மோதி அரசு மட்டுமே கட்டுப்பாடற்று அக்கறையற்று உள்ளது. யதார்த்தத்தை உணராமல் அரசாங்கம் ஒரு போலி விளக்கத்தை கூறி வந்தது. ஆனால் அந்த குட்டு தற்போதைய உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பீடுகளால் வெளிச்சத்துக்கு வந்து விட்டது," என்று சிதம்பரம் தெரிவித்தார்.
மோதி அரசு, பெருந்தொற்றுக்கு முன்னும் பின்னும் குறுகிய மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை அறிவித்துள்ளது குறித்தும் அவை செயலாக்கம் பெற சிறிது காலமாவது தேவைப்படாதா? என்று கேட்டபோது, கடுமையாகவே பதிலளித்தார் சிதம்பரம்.
"மோதி அரசு செய்ய வேண்டியதை சரியாக செய்தது அல்லது போதுமானதாக செய்தது என எந்த பொருளாதார வல்லுநரும் கூற மாட்டார். ரிசர்வ் வங்கியின் அறிக்கையைப் படியுங்கள். மோதி அரசு கொரோனா தொற்றுக்கு முன்னும் பின்னும் என்ன செய்திருக்கிறது என தெரிய வரும். அதன் பிறகும் மோதி அரசுக்கு இன்னும் நேரம் தேவைப்படும் என நீங்கள் நினைத்தால், நான் உங்களுக்காக வருந்த மட்டுமே முடியும்" என்று சிதம்பரம் கூறினார்.
மேலும் அவர், விவசாயம், வனத்துறை மற்றும் மீன்பிடித்தொழில் ஆகிய துறைகள் மட்டுமே 3.4% வளர்ச்சியடைந்தவையாக என்றும் சுட்டிக்காட்டினார்.
"பொதுவாகவே, விவசாயத்துறையில் அரசுக்கு இருக்கும் பொறுப்பு மிகக் குறைவு. அது தவிர, ஒவ்வொரு துறையின் செயல்பாட்டை அரசாங்க கொள்கையே தீர்மானிக்கும். எதை உற்பத்தி செய்வது, எதை விற்பது, எதை வாங்குவது என அனைத்தும் அந்த கொள்கைப்படியே நடக்கும்.
கொரோனா கடவுளின் செயலா?
அதிர்ஷ்டவசமாக விவசாயம் இந்த நாட்டின் விவசாயிகளுக்கும், அவர்களை ஆசீர்வதித்த கடவுளுமே தங்களின் உற்பத்தி, விற்பனையை தீர்மானிக்க விடப்பட்டுள்ளனர். பொருளாதார வீழ்ச்சிக்கு கடவுளின் செயல் என குற்றம்சாட்டிய இந்திய நிதியமைச்சர், இந்த நாட்டின் விவசாயிகளையும் அவர்களை ஆசீர்வதிக்கும் கடவுளுக்கும்தான் ரகசியமாக நன்றி தெரிவிக்க வேண்டும். காரணம், தற்போது விவசாயத்தைத் தவிர மற்ற எல்லா துறைகளும் கடுமையாக சரிந்துள்ளன. உற்பத்தி, கட்டுமானம், வர்த்தகம், ஹோட்டல் அனைத்தும் 40 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை குறைந்துவிட்டன, "என்று சிதம்பரம் சுட்டிக்காட்டினார்.
2020ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்த சரிவு, பெரும் மந்தநிலை மற்றும் உலகளாவிய நிதி நெருக்கடியை (2008 இல் இருந்ததை விட) விட ஆழமாகவும் அழிவுகரமாகவும் இருக்கலாம் என ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டியிருக்கிறதே என கூறியபோது, அதை தாமும் ஏற்பதாக சிதம்பரம் ஒப்புக்கொண்டார்.
"ஆமாம். ரிசர்வ் வங்கியின் எச்சரிக்கை சரியானது. ஆனால் அது மிகவும் தாமதமாக வந்தது. அதன் அறிக்கை மூன்று நாட்களுக்கு முன்புதான் வெளிவந்தது. கடந்த 6 மாதங்களாக, கொரோனா தொற்று பரவலுக்கு நீண்ட காலம் முன்பே இப்படிப்பட்ட நிலை வரும் என நாங்கள் எச்சரிக்கை செய்தோம். பொது முடக்கத்தை அறிவித்த பிறகு கடந்த மூன்று மாதங்களாக எச்சரிக்கை செய்தோம். அனைத்து எச்சரிக்கைகளையும் ரிசர்வ் வங்கி மறுஆய்வு செய்து இப்போது அனைத்தையும் தனது அறிக்கையில் பிரதிபலித்துள்ளது.
இந்த நாட்டில் தேவை நுகர்வு அதிர்ச்சி தரும் வகையில் பாதிக்கப்படும் என நாங்கள் கூறவில்லையா, நுகரும் தேவை கடுமையாக பாதிக்கப்படும் என நாங்கள் கூறவில்லையா, நுகரும் தேவை ஊக்குவி்க்கப்பட வேண்டும் என நாங்கள் வலியுறுத்தவில்லையா, ஏழை மக்களுக்கு பணப்பரிமாற்றம் செய்யப்பட வேண்டும் என நாங்கள் கூறவில்லை?" என சிதம்பரம் வாதிட்டார்.
மேலும் அவர், "இந்திய தலைமை பொருளாதார ஆலோசகர் மற்றும் பிற பொருளாதார வல்லுநர்கள் இப்போது ஊக்கத்தொகுப்புதவி அவசியம், ஊதிய பாதுகாப்பு, தேவை நுகர்வை அதிகரிக்க வேண்டும் என குரல் கொடுக்கிறார்கள். இந்த திடீர் ஆத்மாக்கள் கடந்த மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு முன்பு எங்கே போனார்கள்" என்று கேள்வி எழுப்புகிறார்.
இந்திய பொருளாதாரத்தின் எதிர்காலம் எப்படியிருக்கும் என கேட்டபோது, சிதம்பரம் உறுதியாகவே பதிலளித்தார்.
"குறுகிய காலத்தில் எந்தவொரு வளர்ச்சியையும் என்னால் பார்க்க முடியவில்லை. தற்போதைய நிலைமை சீரடைந்து, மீண்டும் புத்துயிர் பெற நீண்ட காலம் ஆகலாம் என்பது ரிசர்வ் வங்கியின் பார்வை. என்னைப்பொருத்தவரை, முதலாவது சாதகமான வளர்ச்சியை நாம் பெற இன்னும், பல மாதங்கள் ஆகக்கூடும். ஆனால், ஆட்சியில் இருக்கும் இந்த அரசாங்கமும் அதன் கணிக்க முடியாத தன்மையும் அது மேலும் மேலும் தவறுகளைச் செய்யக்கூடியதாக இருக்கும் என்பதை உணர்த்துகிறது. அப்படி மேலும், மேலும் தவறு செய்தால் பொருளாதாரத்தை மீட்க இன்னும் அதிக காலம் ஆகக்கூடும்" என்கிறார் சிதம்பரம்.
இரண்டு தீர்வு, ஆனால் பலன் இல்லை
அப்படியென்றால் பெருந்தொற்று காலத்தில் உலக அளவில் நாடுகள் பொருளாதார தாக்கத்தை அனுபவிக்கும் வேளையில் இந்தியா எதிர்கொண்டுள்ள நிலைமைக்கு என்னதான் தீர்வாக இருக்கும் என சிதம்பரத்திடம் பிபிசி செய்தியாளர் கேட்டார்.
"கொரோனா பெருந்தொற்று நமது பொருளாதாரத்தை பாதித்துள்ளது. இதை நாங்களும் கூறி வருகிறோம். அதனால்தான் அதன் விளைவுகளை எதிர்கொள்ள சரியான எதிர் நடவடிக்கைகளை முன்மொழிந்தோம்.
உலக அளவில் பெருந்தொற்றால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா ஒன்றும் விதிவிலக்கு அல்ல. அதை நான் ஒப்புக்கொள்கிறேன். இங்கே கேள்வி என்னவெனில், நீங்கள் எவ்வளவு விரைவில் மீளப்போகிறீர்கள் என்பதுதான். அதற்கு இரண்டே காரணிகள் மட்டுமே தீர்வாக இருக்கும். ஒன்று, பெருதொற்றின் பரவலை எதிர்த்துப் போராடுவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் உங்களுக்கு திறன் இருக்க வேண்டும். இரண்டாவதாக, பெருந்தொற்றுநோயின் விளைவை எதிர்ப்பதற்கான நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் திறன் உங்களுக்கு இருக்க வேண்டும். முதலாவது தீர்வை ஆராயும்போது, சில விஷயங்கள் அரசின் கட்டுப்பாட்டை மீறி இருக்கும் என்றாலும் பெருந்தொற்றை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கையை அரசு எடுத்தே ஆக வேண்டும்.
இரண்டாவது தீர்வை ஆராய்ந்தால், அரசு எல்லா எதிர் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு பெருந்தொற்றை கட்டுப்படுத்தியாக வேண்டும். ஆனால் இந்த அரசாங்கம் எந்தவொரு எதிர் நடவடிக்கையையும் எடுப்பதில்லை. மோதி அரசாங்கத்துக்கு வெட்கமும் இல்லை. தனது தவறுகளை ஏற்றுக்கொள்ளவும் செய்யாது. இவை எல்லாம் எதிர்பார்த்தவைதான் என்கிறார் சிதம்பரம்.