"மெட்ரோ மேன்" ஸ்ரீதரன் பாஜகவில் சேருகிறார் - கேரள தேர்தலில் போட்டியிடவும் விருப்பம்

வியாழன், 18 பிப்ரவரி 2021 (18:30 IST)
இந்தியாவின் பெருநகரங்களில் நரம்புகள் போல பிணைந்திருக்கும் மெட்ரோ ரயில் சேவைக்கு மூளையாக செயல்பட்டு அதற்கான திட்டங்களை வகுத்துக் கொடுத்தவர், டெல்லி மெட்ரோ ரயில் நிறுவன முன்னாள் தலைவர் இ. ஸ்ரீதரன்.

88 வயதாகும் ஸ்ரீதரன் வரும் ஞாயிற்றுக்கிழமை கேரளாவில் நடைபெறவுள்ள விஜய் யாத்ரா என்ற பாஜக நிகழ்ச்சியில் முறைப்படி அக்கட்சியில் இணையவுள்ளதாக தெரிய வந்துள்ளது. தற்போது கேரளாவின் மலப்புரத்தில் உள்ள வீட்டில் ஸ்ரீதரன் வசித்து வருகிறார்.
 
இந்த நிலையில், இன்று காலை சில ஊடகங்களிடம் பேசிய ஸ்ரீதரன், பாஜகவில் இணையும் தமது விருப்பத்தை உறுதிப்படுத்தினார். எல்லா ஏற்பாடுகளும் நடந்து  விட்டன. முறைப்படி இணைய வேண்டியதுதான் பாக்கி. தேர்தலில் போட்டியிடுவது பற்றி கட்சிதான் முடிவு செய்யும் என்று ஸ்ரீதரன் தெரிவித்தார்.
 
பாஜகவை பொறுத்தவரை 75 வயதை கடந்த தலைவர்கள் தேர்தலில் போட்டியிட கட்டுப்பாடு உள்ளது. இதை காரணம் காட்டியே எல்.கே. அத்வானி, முரளி  மனோகர் ஜோஷி போன்ற மூத்த தலைவர்கள் முழு நேர அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.
 
இந்த நிலையில், 88 வயதாகும் ஸ்ரீதரனுக்கு பாஜக மேலிடம் எதிர்வரும் கேரள சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருமா என்பது கேள்விக்குரியதாக  உள்ளது.
 
இதேவேளை, கேரளாவில் ஊடகங்களில் பேசிய ஸ்ரீதரன், "அரசு மற்றும் பொதுத்துறை பணிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு கடந்த 10 ஆண்டுகளாக  கேரளாவிலேயே வாழ்ந்து வருகிறேன். இதுவரை இங்கு பல அரசாங்கங்களை பார்த்து விட்டேன். மக்களுக்கு எது தேவையோ அதை அவர்கள் செய்வதில்லை. எனது  பங்களிப்பை மக்களுக்கு நேரடியாக வழங்கும் வகையிலேயே பாஜகவில் சேரவிருக்கிறேன்," என்று தெரிவித்தார்.
 
மொத்தம் 140 தொகுதிகள் கொண்ட கேரள சட்டப்பேரவையில் பாரதிய ஜனதா கட்சி, ஒரு உறுப்பினரை மட்டுமே பெற்றுள்ளது. அங்கு இடதுசாரி தலைமையிலான  கூட்டணியும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியும்தான் தொடர்ந்து ஆட்சியில் மாறி, மாறி இருந்து வருகின்றன. இந்த நிலையில், கேரளாவில் கடந்த 10  ஆண்டுகளாக பாஜக தனது கட்சியின் கிளைகள் மற்றும் அதன் துணை அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத் போன்றவை அம்மாநிலத்தில்  பரவலாக கிளைகளை தொடங்கி உறுப்பினர் சேர்க்கையை வலுப்படுத்தி வருகின்றன.
 
லவ் ஜிஹாத் விவகாரம், கேரளாவை சேர்ந்த இளைஞர்களில் சிலர் ஐ.எஸ். அமைப்பில் சேர காட்டிய ஆர்வம் மற்றும் அதன் பின்னர் அவர்கள் தேசிய புலனாய்வு அமைப்பால் பிடிபட்டதாக கூறப்பட்ட வழக்குகள், சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்க மத்தியில் ஆளும் பாஜக காட்டிய ஆர்வம் போன்றவை சர்ச்சைக்கு உள்ளானபோதும், அந்த மாநிலத்தில் கவனிக்கப்படக் கூடிய கட்சியாக பாஜக உருப்பெற்று வருகிறது.
 
இந்த நிலையில், ஸ்ரீதரன் பாஜகவில் சேரப்போவதாக அறிவித்திருப்பது அம்மாநில மக்களின் கவனத்தை மட்டுமின்றி இந்திய சமூக ஊடக பயன்பாட்டாளர்களின்  கவனத்தையும் வெகுவாக ஈர்த்திருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்