பனிப்பாறைகள் உருகுவது உணவுச் சங்கிலியை பாதிக்கும்

செவ்வாய், 5 மே 2015 (08:16 IST)
ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியில் ஐஸ் பாறைகள் உருகி உடைவதன் காரணமாக, வட துருவம் ஒரு பெரிய அளவிலான மாற்றத்தை சந்தித்துக்கொண்டிருக்கிறது என நார்வே விஞ்ஞானிகள் கூறுகின்றனர். முன்னெப்போதும் இல்லாத வகையில் குளிர்காலத்தில் ஆர்க்டிக் பெருங்கடலில் இவர்கள் பயணம் மேற்கொண்டிருந்தனர்.


 
கணிசமான வெப்பம் ஆர்க்டிக் கடல்நீரில் நிலவுவதன் காரணமாக, பழமையான தடித்த ஐஸ்கட்டிகள் உடைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மிகவும் மெல்லிய - புதிதாக உருவான ஐஸ் கட்டிகளே அந்த பகுதியில் தற்போது எஞ்சியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
உயிரினப் பன்முகத் தன்மை பெருமளவு குறைவதற்கும், உருகிவரும் ஐஸ் பாறைகளே தூண்டுகோலாக இருக்கிறது என்றும், இதனால் உணவு சங்கிலியின் அடித்தளமாக செயல்படும் நுண்ணிய உயிரினங்களின் எண்ணிக்கை பெருமளவு குறையும் நிலைமை உருவாகும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
 
வட துருவப் பிரதேசத்தில் பெட்ரொலிய எண்ணை அகழ்வுப் பணிகளை ஆரம்பிக்க வேண்டும் என்று சில நாடுகள் தற்போது முனைந்துள்ள சூழலில் விஞ்ஞானிகளின் இந்த எச்சரிக்கை வந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்