மத்திஷா பதிரண: தோனியின் புதிய வார்ப்பான 'பேபி மலிங்கா' 175 கி.மீ. வேகத்தில் பந்துவீசக் கூடியவரா?

சனி, 22 ஏப்ரல் 2023 (11:48 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்தளவு அதிரடி பேட்ஸ்மேன்களை பார்த்திருக்கிறதோ அதே அளவு அசத்தல் பௌலர்களையும் கண்டுள்ளது. டக் பொலிஞ்சர், சுட்டி குழந்தை என்று ரசிகர்களால் அழைக்கப்படும் சாம் கரண் ஆகியோர் வரிசையில் தற்போது புதிதாக இணைந்திருப்பவர் இலங்கையைச் சேர்ந்த மத்தீஷ பதிரண.
 
சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தின போது, பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
 
`இலங்கை ரசிகர்களே, பதிரணவிடம் இருந்து முத்தான ஆட்டத்தை நீங்கள் எதிர்பாக்கலாம், தோனி அவரை தயார் செய்துகொண்டிருக்கிறார்` என்பதே அவரது ட்வீட்.
 
ஏப்ரல் 17ஆம் தேதி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் சிஎஸ்கே- ஆர்சிபி இடையே நடைபெற்ற ஆட்டத்தை நாம் அவ்வளவு எளிதாக மறந்திருக்க மாட்டோம். முதலில் பேட்டிங் செய்து 226 ரன்கள் குவித்த போதும், சிஎஸ்கே போராடிதான் வெற்றி பெற்றது. ஆர்சிபியின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கடைசி ஓவரை வீசிய மத்தீஷ பதிரண 10 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து சுயாஷ் பிரபுதேசாய் விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தார். 18, 20வது ஓவர்களை வீசிய அவர் 14 ரன்களை மட்டுமே விட்டுகொடுத்து சென்னையின் வெற்றிக்கு வழிகோலினார்.
 
இது குறித்து பின்னர் பேசிய மத்தீஷ பதிரண, `பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தின் என் முதல் இரண்டு ஓவர்களில் 28 ரன்கள் போயிருந்ததால், நான் சற்று பதற்றமாக இருந்தேன். அப்போது, தோனி என்னிடம் வந்து , கவலைப்படாதே, அமைதியாக இரு, உன் பலத்தை நம்பு என்றார், நானும் அதை செய்தேன்` என்றார்.
சிஎஸ்கே அணிக்காக தனது19-வது வயதில்கடந்த சீசனில் அறிமுகமான பதிரண அந்த தொடரில் 2 போட்டிகளில் விளையாடி 2 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார். பதிரணவின் பந்து வீச்சு தொடர்பான ஒரு வீடியோவை பார்த்து பிடித்துபோய் டோனி அவரை சிஎஸ்கேவில் சேர்த்துகொண்டார் என்று பதிரண பயிற்சி எடுக்கும் ட்ரினிட்டி கல்லூரியில் கிரிக்கெட்டிற்கான அடிப்படை கட்டமைப்புகளை உருவக்கிய பிலால் ஃபாஸி `தி இந்தியன் எக்ஸ்பிரஸ்` ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
 
அப்போது அவருக்கு 17 அல்லது 18 வயதுதான் இருக்கும். கொரோனா பரவல் தீவிரமாக இருந்த காலக்கட்டம் அது. அப்போது தோனியிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. அதில், பதிரணவை உடனடியாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள சிஎஸ்கே அணியில் இணையும்படி டோனி குறிப்பிட்டிருந்தார். பதிரண ஏற்கனவே 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி இருந்தார். பங்களாதேஷ் லீக் போட்டிகளில் அவர் ஆடி வந்தார். பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் அவரின் யாக்கர் பந்துவீச்சு தொடர்பாக வீடியோ ஒன்று வைரல் ஆனது. அதன் பின்னர் சிஎஸ்ஏ அவரை அணியில் இணைத்துக்கொள்ள ஆர்வம் காட்டியது` என்று குறிப்பிட்டார்.
 
சிஎஸ்கே என்றாலே சீனியர்களின் அணி என்று வழக்கமாக முன்வைக்கப்படும் விமர்சனத்திற்கு மாறாக, இந்த முறை ருத்ராஜ், தீக்‌ஷனா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சிங், பதிரண என அணியில் இளைஞர்கள் அதிகம் தென்படுகிறார்கள்.தனது தனித்துவமான பந்து வீச்சு மூலம் கவனத்தைச் ஈர்த்துள்ளார் பதிரண.
 
யார் இந்த மத்தீஷ பதிரண?
பதிரண கடந்த டிசம்பர் 18, 2002ல் இலங்கையின் கண்டி நகரத்தில் பிறந்தவர். சிஎஸ்கே அணி தனது முதல் ஐபிஎல் தொடரில் விளையாடியபோது அவருக்கு 6 வயதுதான் இருந்திருக்கும். தற்போது 20 வயது ஆகும் பதிரண, சிஸ்கேவின் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்டாக உருவெடுத்து வருகிறார்.
 
இலங்கை முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்காவின் பந்து வீசும் ஸ்டைலுடன் பதிரண பந்துவீசும் ஒத்துப் போவதால் ரசிகர்கள் அவரை பேபி மலிங்கா என்று அழைக்கத் தொடங்கி விட்டனர். ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் பதிரணவின் பந்துவீச்சை மலிங்காவும் வெகுவாக பாராட்டியுள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில், 'ரசிக்கும் விதத்தில் இருந்தது. அழுத்தம் நிறைந்த கடைசி கட்டத்தில் சிறப்பாக பந்துவீசியிருந்தீர்கள்` என்று மலிங்கா குறிப்பிட்டிருந்தார்.
இதில், குறிப்பிட வேண்டிய விஷயம் மதீஷா பதிரண ஒருகாலத்தில் மலிங்காவிடமும் பயிற்சி பெற்றுள்ளார் என்பது. தனது கல்லூரி காலத்தில் ட்ரினிட்டி அணிக்காக அறிமுகமான முதல் ஆட்டத்திலேயே 7 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்களை கைப்பற்றி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் பதிரண .
 
பதிரணவை பாராட்டிய தோனி
கடந்த ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதன்முதலாக சிஎஸ்கேவுக்காக பதிரண களமிறங்கினார். தனது அறிமுக ஆட்டத்தி;d முதல் பந்திலேயே சுப்மன் கில் விக்கெட்டை எடுத்து அசத்திய பதிரண, அறிமுக போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தியவர்களின் பட்டியலில் இஷாந்த் சர்மா, வில்கின் மோட்டா மற்றும் ஷேன் ஹார்வுட் ஆகியோரின் பட்டியலில் இணைந்தார். இந்த ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியாவின் விக்கெட்டையும் சேர்த்து இரண்டு விக்கெட்களை அவர் வீழ்த்தியிருந்தார்.
 
அந்த போட்டியில் சிஎஸ்கே தோல்வியடைந்தபோதும் பின்னர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்க்கு அளித்த பேட்டியில், 'டெத் ஓவர்களில் பந்துவீசுவதில் மலிங்காவை போலவே அவர் சிறப்பாக இருக்கிறார். அவரது பந்துவீச்சை எதிர்கொள்வது சிரமமானது. ஸ்லோ பால்களையும் சிறப்பாக வீசுகிறார். எனவே, அவரது பந்துவீச்சை கவனமாக பார்த்து விளையாட வேண்டும்` என்று பதிரணவை தோனி வெகுவாக பாராட்டி இருந்தார்.
175 கி.மி. வேகத்தில் பந்துவீசினாரா பதிரண?
மத்திஷ பதிரணவின் வேகப்பந்து வீச்சு சிறப்பானதாக உள்ளதாக ரசிகர்கள் கூறிவரும் நிலையில், கடந்த 2020ல் அவரது வேகப்பந்து தொடர்பான ஒரு சர்ச்சை வெடித்தது. அப்போது 17 வயதான பதிரண இந்தியாவுக்கு எதிரான இலங்கையின் 19வது வயதுக்கு உட்பட்டவர்கள் அணியில் இடம்பிடித்திருந்தார்.
 
ஐ.பி.எல். சீசனில் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அப்போது இந்திய 19 வயதுக்குட்பட்டோர் அணியில் இருந்தார். அவருக்கு எதிராக நான்காவது ஓவரை வீசிய பதிரண வைடாக ஒரு பந்தை வீசினார்.
 
மணிக்கு 175 கிலோ மீட்டர் வேகத்தில் அவர் பந்தை வீசியதாக ஸ்பீட் கன் காட்டியது. பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் 161. 3 கி.மீ வேகத்தில் பந்து வீசியதே கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக பந்துவீச்சு எனும் நிலையில், அதனை பதிரண முறியடித்து விட்டதாகவே எண்ணப்பட்டது. இதனால், கிரிக்கெட் உலகில் பரபரப்பாக பேசப்படும் வீரராக மத்திஷ பதிரண மாறினார்.
 
ஆனால், பதிரண 175 கி.மீ. வேகத்தில் பந்து வீசியதாக ஸ்பீட் கன் காட்டியது தவறு, தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே அவ்வாறு பதிவானது என்று பின்னர் விளக்கம் தரப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்