செவ்வாய் கிரகம்: எரிமலை, பள்ளத்தாக்குகளை படமெடுத்த ஐக்கிய அரபு அமீரக விண்கலம்

திங்கள், 15 பிப்ரவரி 2021 (13:55 IST)
ஐக்கிய அரபு அமீரகத்தின் 'ஹோப்' விண்கலம் முதன்முறையாக செவ்வாய் கிரகத்தின் புகைப்படத்தை அனுப்பியுள்ளது.

செவ்வாய் கிரகத்தை சுற்றியுள்ள சுற்று வட்டப்பாதையை அந்த விண்கலம் செவ்வாய்க்கிழமையன்று சென்றடைந்தது. இதன்மூலம் செவ்வாய் கிரகத்திற்கு  விண்கலம் அனுப்பிய முதல் அரபு நாடு என்ற சிறப்பை ஐக்கிய அரபு அமீரகம் பெறுகிறது.
 
இந்த முதல் புகைப்படத்திற்கு பிறகு பல புகைப்படங்களை அனுப்பவுள்ளது அந்த விண்கலம்.
 
செவ்வாய் கிரகத்தின் பருவநிலை மற்றும் காலநிலை அமைப்புகளை அறிந்து கொள்ளும் தூரத்தில்தான் இது செலுத்தப்பட்டுள்ளது.
 
கிட்டதட்ட பூமியிலிருந்து தொலைநோக்கியில் பார்த்தால் என்ன தெரியுமோ அது போன்ற ஒரு தோற்றம் இந்த விண்கலம் செலுத்தப்பட்டிருக்கும் இடத்திலிருந்து  பார்த்தால் தெரியும்.
 
பொதுவாக செயற்கைக்கோள்கள் அதிக ரிசல்யூஷன் கொண்ட புகைப்படங்களை எடுக்க வேண்டும் என்பதற்காக கோள்களின் அருகாமையில் செலுத்துவதுதான்  வழக்கம்.
 
இந்த கட்டுரையில் முதலில் வைக்கப்பட்டுள்ள புகைப்படம் ஹோப் EXI கருவியால், செவ்வாய் கிரகத்திற்கு மேல் 24,700 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து  புதன்கிழமையன்று எடுக்கப்பட்டது.
 
செவ்வாய் கிரகத்தின் வட துருவம், படத்தில் மேல் புற இடப்பக்கம் உள்ளது. நடுப்பகுதியில் அதிகாலை சூரிய ஒளியின் வெளிச்சத்தில் தெரிவது ஒலிம்பஸ்  மான்ஸ்; இதுதான் சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய எரிமலை. வலது பக்கம் இரவு மற்றும் பகல் வெளிச்சத்தை பிரிக்கக்கூடிய `டெர்மினேட்டர்` தெரிகிறது.
 
இதில் ஆஸ்க்ராயெஸ், பவோனிஸ், ஆர்சியா என்ற மூன்று எரிமலைகளும் தெரிகின்றன. கிழக்கில், பள்ளத்தாக்கு அமைப்புகள் தெரிகின்றன.
 
தற்போது இந்த ஹோப் விண்கல திட்டம் செவ்வாய் கிரகத்திற்கு அருகாமையாக 1,000 கி.மீட்டரும், தூரமாக 50,000 கி.மீட்டர் வரையும் செல்லும். அடுத்த சில வாரங்களில் இது 22,000 கி.மீட்டர் தூரத்தில் செல்லும்.
 
"ஹோப் விண்கல திட்டம் தனது முதல் புகைப்படத்தை பதிவு செய்த நாள் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள். இதன்மூலம் விண்கல சோதனைகளில் ஈடுபட்டுள்ள  வளர்ந்த நாடுகளின் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகமும் இணைகிறது" என இந்த விண்கல திட்டம் குறித்த ட்விட்டர் கணக்கில் பதியப்பட்டுள்ளது. மேலும்  "மனிதகுலத்திற்கு பயன் தரக்கூடிய பல புதிய கண்டுபிடிப்புகளுக்கு இந்த திட்டம் வழி வகை செய்யும்" எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த திட்டத்தின் நோக்கம்?
விண்கலம் உருவாக்கத்தில் பெரிதாக அனுபவம் இல்லாத நாடு ஐக்கிய அரபு அமீரகம். அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா ஆகியவற்றின் விண்வெளி ஆய்வு முகமைகள் மட்டுமே சாதித்த ஒரு விஷயத்தை இந்த விண்கலத் திட்டம் மூலம் முயன்று பார்க்கிறது அமீரகம்.
 
அமெரிக்க வல்லுநர்களால் பயிற்றுவிக்கப்பட்ட அமீரகத்தின் பொறியாளர்கள் இந்த விண்கலத்தை ஆறு மாதத்தில் உருவாக்கி இருக்கிறார்கள். இதன் செயற்கைக்கோள் செவ்வாய் கிரகத்தின் சூழல் குறித்து புதிய அறிவியல் தகவல்களை வழங்கும்.
 
தண்ணீரை உருவாக்க தேவையான ஹைட்ரஜன், ஆக்சிஜன் ஆகிய இரண்டுமே செவ்வாயில் இருந்து வெளியேறிக்கொண்டே இருப்பது எப்படி, என்பதில்தான்  அமீரகத்தின் இந்த விண்கலம் அதிக கவனம் செலுத்தப் போகிறது.
 
விண்வெளித் துறையில் அரேபிய இளைஞர்களை ஊக்குவிக்க, அறிவியல் கல்வியில் அதிக ஈடுபாடு செலுத்த வேண்டும். அதற்கு இப்படியான சில முயற்சிகள்  ஊக்குவிப்பாக இருக்கும் என அமீரகம் கருதுகிறது.
 
இளம் அரபு விஞ்ஞானிகள் விண்வெளிப் பொறியியல் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு இந்த திட்டம் ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும் என ஐக்கிய அரபு அமீரகம்  நம்புகிறது.
 
அமீரகம் மற்றும் அமெரிக்க அறிவியலாளர்கள் இணைந்து பணியாற்றி இந்த விண்கலத்தை உருவாக்கி உள்ளனர்.
 
செவ்வாயில் மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகள் மண்ணியல் தரவுகளை அளித்துள்ளன. ஆனால் இந்த அரபு விண்கலம் செவ்வாயின் காலநிலை குறித்த தரவுகளை மிகவும் துல்லியமாக அளிக்கும் என லண்டனை சேர்ந்த அறிவியல் அருங்காட்சியக குழுவின் இயக்குநர் லேன் பிளாட்ச்போர்ட் முன்னர் ஒரு சமயத்தில்  குறிப்பிட்டிருந்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்