மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம் திரை விமர்சனம்!

வெள்ளி, 3 டிசம்பர் 2021 (09:41 IST)
நடிகர்கள்: மோகன்லால், அர்ஜுன், பிரபு, மஞ்சு வாரியார், கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், பிரணவ் மோகன்லால், சுனில் ஷெட்டி, சுஹாசினி, அசோக் செல்வன், ஹரீஸ் பீராடி, நெடுமுடி வேணு; இசை: ராகுல் ராஜ், அங்கிட் சுரி, லயேல் ஈவன்ஸ், ரோனி ராபல்; ஒளிப்பதிவு: திரு; எழுத்து, இயக்கம்: பிரியதர்ஷன்.
 
16ஆம் நூற்றாண்டில் கோழிக்கோடு நாட்டை ஆண்ட சமூத்ரி ராஜ்ஜியத்தின் கடற்படைத் தளபதிகளாக இருந்த குஞ்ஞாலி மரைக்காயர் வம்சத்தில் நான்காவது மரைக்காயராக இருந்த முகமதலி மரைக்காயரின் கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட படம் இது. அந்தமான் சிறைச்சாலையை மையமாக வைத்து மோகன்லால் - பிரபு நடிக்க பிரியதர்ஷன் இயக்கிய 'காலாபாணி' பெரும் வரவேற்பைப் பெற்றிருந்ததால் இந்தப் படமும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது.
 
சமூத்திரிகள் ஆளும் கோழிக்கோடு நாட்டில் தந்தையை இழந்த முகமதலி குஞ்ஞாலி (மோகன்லால்), பணக்காரர்களிடமிருந்து செல்வத்தை எடுத்து ஏழைகளுக்குக் கொடுக்கும் ராபின் ஹுட்டைப் போல வாழ்ந்து வருகிறார். அந்த நாட்டின் மீது போர்ச்சுகீசியர்கள் படையெடுக்கும் அபாயம் நேரும்போது, கொள்ளைக்காரனான குஞ்ஞாலிக்கு கடற்படைத் தளபதி பதவி கொடுக்கப்படுகிறது. போர்ச்சுக்கீசியர்களை முறியடிக்கிறான் குஞ்ஞாலி.
 
இதனால், அரசவையில் அவனது மதிப்பு உயர்கிறது. இந்த நேரத்தில் குஞ்ஞாலிக்கு நெருக்கமான தளபதிக்கும் ஒரு பெண்ணுக்கும் ஏற்படும் காதல் எல்லா சமன்பாடுகளையும் மாற்றிவிடுகிறது. இதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பது மீதிக் கதை.
இந்தப் படத்தில் முதலில் மனதை ஆக்கிரமிப்பது அதன் பிரம்மாண்டமான காட்சிகள்தான். கோட்டைகள், போர்க்களங்கள், கப்பல்கள் என ஒரு விஷுவல் ட்ரீட்டை அளித்திருக்கிறார் ப்ரியதர்ஷன். அதேபோல, மோகன்லால், பிரபு, கீர்த்தி சுரேஷ், நெடுமுடிவேணு என ஒரு அட்டகாசமான நடிகர்கள் பட்டாளமும் படத்தில் இருக்கிறது. ஆனால், ஒரு சிறந்த திரைப்படத்திற்கு இவை மட்டும் போதாதே...
 
குஞ்ஞாலியின் உண்மையான வரலாற்றிலிருந்து சற்று மாற்றி உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் ஆரம்பக் காட்சிகள் சோர்வை ஏற்படுத்துகின்றன. விளையாட்டுத்தனமான இளைஞனாக இருந்து, கொள்ளைக்காரனாக மாறி, கடற்படைத் தளபதியாக குஞ்ஞாலி உருவெடுப்பதற்குள், நமக்கு இரண்டு படம் பார்த்த களைப்பு ஏற்படுகிறது.
 
படத்தில் நிறைய பெரிய நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால், பலருக்கும் ஒன்றிரண்டு காட்சிகளே கிடைத்திருக்கின்றன. அதனால், எந்தப் பாத்திரத்தையும் ரசிக்கவோ, ஒன்றிப்போகவோ முடியவில்லை. அந்நியரை எதிர்த்துப் போராடும் வீரனின் கதை எத்தகைய உத்வேகத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்? ஆனால், அப்படியேதும் நடக்கவில்லை.
 
இந்தக் கதையில் வலிந்து புகுத்தப்பட்டிருக்கும் அர்ச்சாவின் (கீர்த்தி சுரேஷ்) காதல் கதையில் எந்த கெமிஸ்ட்ரியும் இல்லை. ஏற்கனவே மெதுவாக நகரும் படம் இன்னும் மெதுவாக நகர்கிறது, அவ்வளவுதான்.
 
இந்தக் கதை முழுக்க கேரளாவில் நடந்தது. ஆனால், படத்தில் வரும் கோட்டையும் படத்தில் வருபவர்கள் அணிந்திருக்கும் உடைகளும் மத்திய கிழக்கு நாடுகளை நினைவுபடுத்துகின்றன.
 
மோகன்லால் அட்டகாசமான நடிகர். ஆனால், துடிப்புமிக்க இந்தப் பாத்திரத்தில் அவர் பல இடங்களில் சிரமப்பட்டிருக்கிறார். அவருக்குத் துணையாக வரும் தங்குடு என்ற பாத்திரத்தில் நடித்திருக்கும் பிரபுவுக்கு ஆறுதல் சொல்வதைத் தவிர பெரிய வேலைகள் இல்லை.
 
காட்சியமைப்பு, பின்னணி இசை, சண்டைக் காட்சிகள் மனதைக் கவர்கின்றன. ஆனால், திரைக்கதையில் உற்சாகம் இல்லையென்பதால் படம் பெரிதாக சோபிக்கவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்