ஆடுகளை மாணவர்களாக்கி பள்ளியை மூட விடாமல் தடுத்த விவசாயி

பிரான்சிலுள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை காரணம் காட்டி, அதை மூடுவதற்கு திட்டமிட்ட அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், விவசாயி ஒருவர் தனது 15 ஆடுகளை அப்பள்ளியில் சேர்த்துள்ளார்.
க்ரேனோபில் நகரத்துக்கு வடகிழக்கே கிரெட்ஸ்-என்-பெல்டோன் என்னும் கிராமத்திலுள்ள ஜூல்ஸ் பெர்ரி எனும் தொடக்கப் பள்ளியின் மாணவர்களின் எண்ணிக்கை 266யிலிருந்து 261ஆக வீழ்ச்சிடைந்தது.
 
இதைத்தொடர்ந்து, அந்த பள்ளியை மூடுவதற்கு அதிகாரிகள் திட்டமிட்டதை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த ஆடு மேய்ப்பவரான மைக்கேல் கிரெர்ட், அந்நடவடிக்கையை தடுக்கும் வகையில் தனது செம்மறியாடுகளை பள்ளியில் சேர்த்து மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து  காட்ட விரும்பினார்.
 
இந்நிலையில், பள்ளியை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டத்தின் ஒரு பகுதியாக தனது 50 செம்மறியாடுகளுடன் வந்தார் அவர். அதில்  200 ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
 
50 ஆடுகளில் 15 ஆடுகளின் பிறப்பு சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பின் அவற்றிற்கான சேர்க்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. பள்ளி மூடப்படுவது  குறித்து அனைவரது கவனத்தையும் பெற இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
 
'பா-பேட்', 'சவுட்-மௌட்டான்' ஆகியவை 15 ஆடுகளில் இரண்டின் பெயராகும். முதலில் மூன்று பள்ளி மாணவர்களின் பெற்றோரால் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில், பிறகு மற்ற மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் அந்நகர மேயரும் கலந்துகொண்டனர்.
 
"இனி இந்த பள்ளி மூடப்படாது" என்று கூறிய போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவர் ஒருவரது தாயான கேலே லாவல், தற்போதைய கல்விமுறை முக்கியமான வாதங்கள் குறித்து கவலை கொள்ளாமல், வெறும் எண்களை மட்டும் அடிப்படையாக கொண்டு செயல்படுவதாக  குற்றஞ்சாட்டினார்.
 
போராட்டத்தில் பங்கேற்ற அந்த பள்ளியின் மாணவர்கள், "நாங்கள் ஆடு கிடையாது" உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்