மகாராஷ்டிரா: பாஜகவின் தேர்தல் வெற்றி அரசியல் தோல்வியானது எப்படி?
செவ்வாய், 12 நவம்பர் 2019 (21:55 IST)
சுஜாதா ஆனந்தன்
அரசியல் விமர்சகர்
(இந்தக் கட்டுரையில் வரும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசியின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்.)
மகாராஷ்டிராவில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சி அமைக்க இயலாமல் போகும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
ஆனால் சற்று பின்னோக்கிப் பார்த்தால், பாஜக மற்ற அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கூட்டணி கட்சிகளிடமும் பொதுவாகவே அதன் ஆணவத்தை காண்பித்தற்கான விலையை கொடுத்தது தற்போது தெளிவாக தெரிகிறது. தனது குதிரை படையை போல சிவசேனையையும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார் முற்றிலும் தேவையற்றவர் என்றும் தேர்தலுக்கும் முன்பும் பின்பும் பாஜக கருதியது.
சிவசேனை உறுப்பினர்களைக் கைப்பற்ற நினைக்கும் பாஜகவை தடுக்கும் முயற்சியில் சிவசேனை தலைவர் உத்தவ் தாக்ரே முழுமையாக ஈடுபட்டுள்ளார்.
இந்த அனைத்து நிகழ்வுகளின் வியக்கத்தக்க திருப்பங்களுக்கு கதை ஆசிரியராக விளங்கியவர் பவார், தனது கட்சியை சேர்ந்த பல தலைவர்களின் நற்பெயர்களைக் குறிவைத்து, களங்கப்படுத்துவதை, தடுக்கவும், தேசியவாத காங்கிரஸை ஆளும் தரப்பினரிடம் இருந்து காப்பாற்றவும் பவார் போராடி வருகிறார்.
இவ்வாறு நீண்ட காலமாக பாஜகவின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள காட்சிகள் இவை. ஆனால் உத்தவ் மற்றும் பவார் இருவரிடமும் முன்னாள் முதல்வர் தேவேந்திர் பட்னவிஸின் அனுகுமுறை சற்றும் சளைத்ததல்ல. தேர்தல் நாட்களின்போது மிகவும் மோசமாக சரத் பவாரை கேலி செய்து கிட்டத்தட்ட பவாரின் அரசியல் பயணத்தின் முடிவை பட்னவிஸ் எழுதினார்.
ஆனால், சிவசேனையை அவர் குறைத்து மதிப்பிட்டார். ஆட்சி அதிகாரத்தில் சமமான பொறுப்பும் பதவிகளும் வேண்டும் என்ற சிவசேனையின் கோரிக்கை குறித்த வாக்குறுதியில் இருந்து பின்வாங்கியது இந்த முன்னாள் முதல்வருக்கு பின்னடைவையே தந்தது.
பட்னவிஸ் மட்டுமல்ல, அம்மாநிலத்தில் உள்ள பாஜகவின் மற்ற மூத்த தலைவர்களும் உத்தவ் தாக்ரேவை உந்து சக்தியாக பயன்படுத்த தவறிவிட்டனர். ஆனால் பிரதமர் நரேந்திர மோதி உத்தவை தனது தம்பி என ஒரு முறைக்கு மேல் குறிப்பிட்டுள்ளார், இருப்பினும் குறைந்த பட்ச இடங்களை மட்டும் சிவசேனை கைப்பற்ற வேண்டும் என பாஜக விரும்பியது.
ஏற்கனவே, 2014ம் ஆண்டு சிவசேனை - பாஜக கூட்டணி பிரிந்ததற்கான காரணமும் இதுதான். ஆனால் சிவசேனை தனியாக தேர்தலை சந்தித்த போதிலும், சிறந்த வகையில் வாக்குகளை பெற்று கணிசமான இடங்களில் வென்றதால், பாஜக மீண்டும் நட்பு கொள்ள வேண்டியிருந்தது.
எவ்வாறாயினும், இந்த நேரத்தில், பாஜக தனது கூட்டணிக்குள் சிவசேனையை கட்டுப்படுத்த முடியும் என நம்பியது.
மத்திய அரசில் பங்கேற்கும்போது, மக்களுடன் அதிகம் தொடர்புடைய துறை ஒன்றை பெறவே சிவசேனை விரும்பியது. ஆனால், கனரக தொழில்துறை அமைச்சகத்தை வழங்கி சிவசேனையை கூட்டணியில் வைத்துக்கொள்ள பாஜக திட்டமிட்டது.
மகாராஷ்டிராவிலும் முதல்வர் பதவியை மட்டுமல்ல, வீடு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை போன்ற உயர்மட்ட துறைகளை வழங்காமலேயே சிவசேனையை வைத்துக்கொள்ள பாஜக முயற்சித்தது.
ஆனால் , கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகள் மற்றும் கூட்டுறவு அமைப்புகள் போன்ற தளங்களில் கட்சியை விரிவுபடுத்த முயற்சிக்கும் உத்தவ் தாக்ரேவுக்கு இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை பாஜக புரிந்துகொள்ள தவறிவிட்டது.
அதிகாரத்தை பகிர்ந்து கொள்வது குறித்து தேர்தலுக்கு முன்னரே முடிவு செய்யப்பட்டது என்று சிவசேனை தரப்பில் கூறப்பட்டபோது, உத்தவ் தாக்ரே ஒரு பொய்யர் என பட்னவிஸ் முத்திரையிட்டார். பாஜகவின் தேசியத் தலைமையும் தாக்ரேவை பெரிதும் மதிக்கவில்லை.
சரத் பவாரிடம் இருந்து ஆதரவு கிடைத்திருக்காவிட்டால், தாக்ரேவால் பாஜகவுக்கு இதனை அழுத்தங்களைக் கொடுத்திருக்க முடியாது.
சிவசேனையின் அதிகாரத்தைப் பிடிக்கும் முயற்சிகளில் இருந்து மிக சரியாக பவார் விலகினார். தாங்கள் அதிகாரத்தை கைப்பற்றாமல், பொறுப்புள்ள வலிமையான எதிர்க்கட்சியாக செயல்பட மக்கள் விரும்புகிறார்கள் எனவும் பவார் குறிப்பிட்டார்.
திங்களன்று உத்தவ் மற்றும் பவார் இடையே நடைபெற்ற இந்த வெளிப்படையான பேச்சு வார்த்தை, மகாராஷ்டிராவில் மட்டுமல்லாமல் மத்தியிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவசேனைக்கு பவார் அளித்த ஆதரவு, காங்கிரஸ் தலைமையுடன் கலந்தாலோசிக்காமல் வழங்கப்பட்டது.
இந்த முயற்சிக்கு தனது கட்சியின் அடிமட்டத்தில் இருந்து பெற்ற ஆதரவில் இருந்து அவர் சிவசேனையை ஆதரிக்கும் முடிவை அவர் எடுத்தார். பவார் அவரின் உயர்வுக்காக மட்டுமல்லாமல் சோனியா காந்தியின் நம்பிக்கைக்குரிய கூட்டணி கட்சியாகவும் விளங்க வேண்டும் என்பதற்காகவும் போராடினார்.
தற்போது காங்கிரஸ் மற்றும் என்.சி.பி இரண்டுமே அடிமட்டத்தில் இருந்து தங்கள் தளங்களையும் தலைமையையும் மீண்டும் கட்டியெழுப்பிய பின்னர் ஆட்சிக்கு வர முடியும் என்று உறுதியாக நம்புகிறார்கள். மேலும் அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சியில் சிவசேனையை ஆதரிப்பதன் மூலம் ஆட்சிக்கு வருவதற்கான பயிற்சியை எடுத்துக்கொள்வது தெரிகிறது.
காங்கிரஸ் கட்சியும் தேசியவாத காங்கிரஸ் கட்சியம் இணைந்து சிவசேனையை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலக செய்தது மிக பெரிய சாதனையாகவும், பாஜகவுக்கு பெரிய பின்னடைவாகவும் அமைந்தது. பாஜக தனது எண்ணிக்கையை அதிகரிக்க மற்ற கட்சிகளிடமிருந்து எம்.எல்.ஏ.க்களையும் பணம் கொடுத்து வாங்க முடியாமல் போனது பண அரசியலின் பெரும் தோல்வியாக அமைந்துள்ளது.
ஆனால் மராட்டிய நெறிமுறைகளின் தலைவரான உத்தவ் மற்றும் மராட்டிய பெருமையுமான பவார் இருவருமே ஒன்றாக சேர்வது பாஜகவுக்கு விழும் மோசமான அடியாகும்.