மலையாளத்தில் துல்கர் சல்மான், பார்வதி நடித்து 2015ஆம் ஆண்டில் வெளிவந்த சார்லி திரைப்படத்தின் ரீ - மேக்தான் மாறா.
சார்லி விமர்சன ரீதியாகவும் வர்த்தகரீதியாகவும் பெரும் வெற்றிபெற்ற படம் என்பதால், இந்த ரீ - மேக் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
பாரு என்ற பார்வதி (ஷ்ரத்தா ஸ்ரீநாத்) பழைய கட்டடங்களை புதுப்பிக்கும் கலைஞர். கேரளாவில் உள்ள ஒரு சிறு நகருக்குச் செல்லும்போது, அங்குள்ள கட்டடச் சுவர்களில் தான் சிறுவயதில் கேட்ட ஒரு கதையின் காட்சிகள் வரையப்பட்டிருப்பதைப் பார்க்கிறாள். மாறா (மாதவன்) என்பவன்தான் அந்த ஓவியங்களை வரைந்தது எனத் தெரியவருகிறது. மாறனின் வீட்டில் கிடைக்கும் ஒரு நோட்டுப் புத்தகத்தில், சில சம்பவங்கள் வரையப்பட்டிருக்கின்றன. அதில் உள்ள மனிதர்களைச் சந்தித்து, அவர்கள் கதைகளைக் கேட்கிறாள் பார்வதி. இந்தப் பயணம் அவளை எங்கே இட்டுச் செல்கிறது என்பதுதான் மீதிக் கதை.
சார்லி படத்திலிருந்து சின்னச் சின்ன திரைக்கதை மாற்றங்களோடு இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். படத்தின் துவக்கத்தில், பார்வதி ரயிலில் கதையைக் கேட்க ஆரம்பிக்கும்போது, அந்தக் கதையும் அதில் வரும் காட்சிகளும் மிக சுவாரஸ்யமாகவே விரிகின்றன. இதற்குப் பிறகு, பார்வதி கேரளாவுக்கு வந்து மாறனைப் பற்றி தெரிந்துகொள்ளும் பயணத்தைத் துவங்கும்போது படம் மிக மெதுவாக நகர ஆரம்பிக்கிறது. பிறகு, முடிவை நெருங்கும்போது மீண்டும் சற்று வேகமெடுக்கிறது.
இந்தப் படத்தின் மிக அட்டகாசமான அம்சங்கள் எவை என்றால் அது ஒளிப்பதிவும் வரைகலையும்தான் (கிராஃபிக்ஸ்). படத்தின் துவக்கத்தில் கதை சொல்லும் தருணங்களிலும் சரி, பார்வதி கேரளாவுக்கு வந்த பிறகு பார்க்கும் காட்சிகளும் சரி, ஒவ்வொரு ஃப்ரேமும் அசத்துகின்றன. படம் நெடுகவே, ஒளிப்பதிவாளர்கள் காட்சிகளைச் செதுக்கியிருக்கிறார்கள்.
ஆனால், படத்தின் மிகப் பெரிய பிரச்சனை திரைக்கதைதான். பார்வதி கேரளாவுக்கு வந்த பிறகு நடக்கும் காட்சிகளில் பெரும்பாலானவை மிக செயற்கையாக இருக்கின்றன. வித்தியாசமான பல பாத்திரங்கள் புதிது புதிதாக அறிமுகமாகிறார்கள். எந்தப் பாத்திரத்தோடும் பார்வையாளர்களால் ஒன்ற முடியவில்லை. இந்த அம்சம்தான் படத்தின் மிகப் பெரிய பலவீனம். படத்தின் இறுதியில், திரைக்கதை சற்று வேகமெடுத்தாலும் அதுவரை பொறுமை காக்க வேண்டியிருப்பது கடினமாக உள்ளது.
இந்தப் படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், மாதவன், மௌலி ஆகிய மூவரின் நடிப்பும் குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது.
பின்னணி இசையும் பாடல்களும் நன்றாக இருக்கின்றன. 'ஒரு அறை உனது', 'யார் அழைப்பது' பாடல்கள் ஒரு முறை கேட்டவுடனேயே மனதில் ஒட்டிக்கொள்கின்றன. பிற பாடல்களும் ஒரு சிறந்த இசை அடிப்படையிலான திரைப்படத்திற்கு உரியவை.