கொரொனா வைரஸ் அச்சம் காரணமாகக் கடந்த 14 நாட்களாக ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சொகுசு கப்பலான டைமண்ட் பிரின்சஸில் உள்ள பயணிகளில் 500க்கும் மேற்பட்டவர்களை வெளியேற்றும் பணி தொடங்கி உள்ளது.
இந்த வெளியேற்றும் பணி முடிய சில நாட்கள் ஆகும் என்று தெரிகிறது.
மூவாயிரத்து எழுநூறு பயணிகள் அந்த சொகுசு கப்பல் இருந்தனர். அவர்களில் தங்கள் நாடுகளைச் சேர்ந்த பயணிகளைப் பல நாடுகள் முன்பே அழைத்துக்கொண்டன. 300 அமெரிக்க பயணிகளை நேற்று முன் தினம் அமெரிக்கா இரண்டு விமானங்களில் அழைத்துச் சென்றது.
542 பேர் பாதிப்பு, 2004 பேர் மரணம்
இப்படியான சூழலில் கொரோனா வைரஸ் உண்டாக்கும் தொற்றான கோவிட்-19ஆல் 542 பயணிகள் மற்றும் கப்பல் ஊழியர்கள் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. முன்னதாக ஏறத்தாழ 400 பேர் அந்த கப்பலில் கொரோனா வைரஸால் தாக்கப்பட்டிருப்பதாக ஜப்பான் அரசு கூறியது.
ஆனால் செவ்வாய்க்கிழமை புதிதாக 88 பேர் கொரோனா வைரஸால் தாக்கப்பட்டிருப்பது தெரியவந்ததை அடுத்து இந்த எண்ணிக்கை 542ஆக உயர்ந்தது.
சமீபத்திய தகவலின்படி, கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் இதுவரை 2004 பேர் பலியாகி உள்ளனர்.
சீனாவில் மட்டும் 74, 185 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு வெளியில், 30 நாடுகளை சேர்ந்த சுமார் 500 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது.
யார் யார் வெளியேற்றம்?
கொரோனா வைரஸால் பாதிக்கப்படாத பயணிகள் மட்டுமே முதற்கட்டமாக கப்பலிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.
இந்தப் பணி சில நாட்களுக்கு தொடரும் என்கிறது ஜப்பான் அரசு.
இதுவரை நடந்தவை:
கோவிட்-19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் பரவியதிலிருந்து சீன மருத்துவ அதிகாரிகள், 44,000 பேருக்கு அதிகமானோரின் தகவல்களை முதன்முறையாக வெளியிட்டுள்ளனர்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் வயதானவர்களே ஆபத்தில் இருப்பதாகவும், 80 சதவீதம் பேருக்கு லேசான பாதிப்புதான் ஏற்பட்டுள்ளது என்றும் சீன நாட்டின் தேசிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் கண்டுபிடித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள அச்சத்தால் பெரும் பணக்காரர்கள் மக்களுடன் மக்களாக விமானங்களில் பயணிக்க அஞ்சுகிறார்கள். தங்கள் பயணங்களுக்கென தனி விமானங்களை ஏற்பாடு செய்ய சொல்லி விமான நிறுவனங்களை (Charter Jets) அணுகுவது அதிகரித்திருக்கிறது. இப்படியான தனிப்பட்ட பயணங்களின் கட்டணம் மிக அதிகம்.
கொரோனா வைரஸை போன்று ஓர் உயிர்க் கொல்லி வைரஸ் குறித்து சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த "த ஐஸ் ஆப் டார்க்னஸ்" என்ற நாவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செய்தி கடந்த இரண்டு தினங்களாக சமூக ஊடகங்களில் வைரலானது.