லவ் டுடே விமர்சனம் - 'கோமாளி' பட இயக்குநரின் நடிப்பு எப்படி?

சனி, 5 நவம்பர் 2022 (14:39 IST)
கோமாளி படத்தின் மூலம் வெற்றி பெற்ற பிரதீப் ரங்கநாதன் இயக்கி, கதாநாயகனாக நடித்திருக்கும் படம் லவ் டுடே.

கதா நாயகியாக நடித்திருப்பவர் இவானா. சத்யராஜ், ராதிகா, யோகி பாபு ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் புரிந்து வைத்துக் கொள்வதாக நம்பும் காதலனும் காதலியும் தங்களது செல்போனை சில நாள்களுக்கு மாற்றிக் கொண்டால் என்னவாகும் என்பதுதான் படத்தின் கதை. இந்தக் கதைச் சுருக்கும் படத்தில் டிரெய்லரிலேயேவெளிப்படுத்தப்பட்டிருந்தது.

ஆனால் இந்தக் கதை தன்னுடைய பாடலில் இடம்பெற்றிருந்தது என்று கவிஞர் அறிவுமதி கூறியிருந்ததால் சர்ச்சை எழுந்த நிலையில் இந்தப் படம் வெளிவந்திருக்கிறது. கத்தியின் மீது நடப்பது போன்று, அடி சறுக்கினால் வீழ்ச்சிதான் என்று தோன்றும் இந்தக் கதையைக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் பெரும்பாலும் இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கானது என்று பல ஊடகங்கள் கூறுகின்றன.

படத்தின் முதல்பாதி முழுக்க பார்வையாளர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார்கள் என்கிறது தினமணியின் விமர்சனம். "சத்யராஜ், பிரதீப் சந்திக்கும் முதல் காட்சியில் விசில் பறக்கிறது. இரண்டாம் பாதியிலும் பல இடங்களில் நகைச்சுவைக் காட்சிகள் பலமாக கைதட்ட வைக்கின்றன" என்று தினமணி கூறுகிறது.

படத்தின் இரண்டாம் பாதி, ஆபாசமான சொற்கள் மற்றும் நீளம் குறித்து ஊடகங்கள் விமர்சித்திருக்கின்றன. அதே நேரத்தில் "படத்தின் நீளம் அதிகமாக இருந்தாலும் அதைப் பற்றி யோசிக்க நேரம் கொடுக்காமல் சிரிக்க வைத்தே படக்குழுவினர் வெற்றி பெற்றுள்ளனர்" என்று தினமணி பாராட்டியிருக்கிறது.

"சில காமெடிகள் கதையோட்டத்திற்கு கைகொடுக்கின்றன. பலவும் ஆபாச வார்த்தைகளாகவும், முகம் சுளிக்க வைக்கும் வகையிலும் இருப்பதை ரசிக்க முடியவில்லை. இன்ஸ்டாகிராம், டின்டர் போன்ற நவீன யுவ, யுவதிகள் புழங்கும் தளங்களில் நிகழும் அத்துமீறல்கள் சில இடங்களில் காமெடியாகவும், சில இடங்களில் அயற்சி தரும் விதத்திலும் விவரிக்கப்பட்டுள்ளன. " என்று இந்து தமிழ் கூறியிருக்கிறது.

படத்தின் திரைக்கதையை இந்து தமிழ் பாராட்டியிருக்கிறது. "நாயகன்-நாயகி ஆகியோரின் காதலை மட்டும் விவரிக்காமல், அதனையொட்டி பயணிக்கும் ரவீனா - யோகிபாபு ஆகியோரின் கதை திரைக்கதையை சுவாரஸ்யப்படுத்த உதவுகிறது" என்று இந்து தமிழ் கூறுகிறது. டைம்ஸ் ஆப் இந்தியாவும் இதேபோன்ற ஒரு கருத்தைக் கூறியிருக்கிறது. எனினும் சில காட்சிகளைக் குறிப்பிட்டு லாஜிக் இல்லை என்று குறைபட்டிருக்கிறது இந்து தமிழ். 

இயக்குநரின் நடிப்பு எப்படி?

கோமாளி படத்தில் கேமியோவாக வந்துவிட்டுப் போன பிரதீப் ரங்கநாதன் இந்தப்படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். இந்து தமிழ், டைம்ஸ் ஆப் இந்தியா, தினமணி போன்ற பெரும்பாலான ஊடகங்கள் அவரது நடிப்பைப் பாராட்டியிருக்கின்றன.

கூடவே, "சில இடங்களில் ஓவர் ஆக்டிங் எட்டிப் பார்க்கிறது" என இந்து தமிழும், "உணர்ச்சிப் பூர்வமான காட்சிகளின் இன்னும் சிறப்பாக நடிக்க வேண்டும்" என டைம்ஸ் ஆப் இந்தியாவும் சுட்டிக் காட்டியிருக்கின்றன.

நாயகி இவானா, சத்யராஜ், ராதிகா, யோகி பாபு ஆகியோரின் பாத்திரங்கள், அவர்களின் நடிப்பு ஆகியவையும் பரவலாகப் பாராட்டுப் பெற்றிருக்கின்றன. "ரகசியங்களை தெரிந்துகொள்ளும் ஆர்வம், இங்கு யாரையும் நம்ப முடியவில்லை என அழும் இடங்களில் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அறிமுகமான முதல்படம் என்றாலும் நாயகனாக பல இடங்களில் தேறியிருக்கிறார். நாயகியான இவானா நடிப்பு தத்ரூபமாக காட்சிபடுத்தப்பட்டதைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது" என்கிறது இந்து தமிழ். 

இசை எப்படி இருக்கிறது?

படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறது. "படத்தை கிளைமேக்ஸை நோக்கி தாங்கிச் செல்வதற்கு இசை உதவியிருக்கிறது" என்று டைம்ஸ் ஆப் இந்தியா கூறுகிறது.

"காட்சிகளுக்கான உணர்வுகளை கட்டியெழுப்பியதில் யுவன் சங்கர் ராஜாவுக்கான பங்கு அளப்பரியது. 90'ஸ் மட்டுமல்ல 2கே கிட்ஸ்களுக்குமான இசையமைப்பாளர் தான், என்பதை உணர்த்தும் வகையில் பின்னணி இசையில் பலம் சேர்த்திருக்கிறார்." என்று கூறுகிறது இந்து தமிழ். பின்னணி இசையும் இரண்டு பாடல் காட்சிகளும் ரசிக்க வைப்பதாக தினமணி கூறுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்