பரிசோதனை செய்யப்பட்ட ஏவுகணை 700கிமீ இலக்கை எட்டியதாக கெசிஎன்ஏ தெரிவித்துள்ளது.
முன்னதாக வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணை பரிசோதனையை மேற்கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
வட கொரியா அணு ஆயுத சோதனைகள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளைச் மேற்கொள்ள ஐ.நா தடை விதித்துள்ளது.
தென் கொரியா மற்றும் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் முடங்கிய நிலையில் கடந்த ஆண்டு பல்வேறு ஏவுகணைகளை சோதனை செய்தது வட கொரியா.
புத்தாண்டு உரையில் கிம் 2022-ம் ஆண்டிற்கான கொள்கை முன்னுரிமைகளை வகுத்ததில் இருந்து முதன்முதலில் ஏவப்பட்ட இந்த சமீபத்திய ஏவுகணை, சோலில் பாதுகாப்பு அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்படுவதற்கு முன்பு, புதன்கிழமை அதிகாலை ஜப்பானிய கடலோரக் காவல்படையால் முதலில் அறிவிக்கப்பட்டது.
"தென் கொரிய மற்றும் அமெரிக்க உளவுத்துறை இதுகுறித்த மேலதிக விவரங்களுக்கு ஆய்வு செய்து வருகிறது," என்று தென் கொரியாவின் கூட்டுப்படைத் தலைவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
2017-ம் ஆண்டில், வட கொரியா ஹ்வாசோங்-15 என்ற ஏவுகணையை பரிசோதித்தது. இது 4,500 கி.மீ உயரத்தில் உச்சியை அடைந்தது. இது பசிபிக் தீவான குவாமில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களைத் தாக்கும் தூரத்தில் அது நிறுத்தப்பட்டிருந்தது.
கொரிய தீபகற்பத்தில் அதிகரித்து வரும் நிலையற்ற ராணுவ சூழல் காரணமாக, வட கொரியா தனது பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்துவதைத் தொடரும் என்று கிம் கூறிய சில நாட்களுக்குப் பிறகு இது நடந்துள்ளது.
வடகொரியாவின் ஆளும் கட்சியின் ஆண்டு இறுதிக் கூட்டத்தின்போது இதை கிம் தெரிவித்தார்.
2021 முதல் வட கொரியா மீண்டும் மீண்டும் ஏவுகணைகளைச் சோதித்து வருவதை சுட்டிக்காட்டிய ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிசிடா சமீபத்திய ஏவுகணை, "மிகவும் வருந்தத்தக்கது," என்று தெரிவித்தார்.
2021-ம் ஆண்டில், வடகொரியா தனது ஆயுதத் திட்டத்தை மேம்படுத்தும் பணியை தொடர்ந்தது. ஒரு புதிய ஹைபர் சோனிக் ஏவுகணை, ஒரு ரயில்-சார்ந்த பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ஒரு புதிய நீண்ட தூர கப்பல் ஏவுகணை ஆகியவற்றை சோதனை செய்ததாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
க்ரூஸ் ஏவுகணைகளைவிட பாலிஸ்டிக் ஏவுகணைகள் அதிக அச்சுறுத்தலாகக் கருதப்படுகின்றன. ஏனெனில் அவை அதிக சக்தி வாய்ந்த கலச்சுமையை சுமந்து செல்லக்கூடியவை மற்றும் நீண்டதூரத்திற்கு வேகமாகப் பறக்கக்கூடியவை.
வடகொரியாவின் நிலை என்ன?
வட கொரியா அதன் பொருளாதாரத்தைக் கடுமையாக பாதித்துள்ள கொரோனா வைரஸ் முற்றுகையின் காரணமாக உணவுப் பற்றாக்குறையுடன் போராடி வரும் சூழ்நிலையில், இந்த சோதனைகள் நிகழ்ந்துள்ளன.
ஆண்டு இறுதியில் நடைபெற்ற கூட்டத்தில், "நாடு பெரும் வாழ்வா சாவா போராட்டத்தை" எதிர்கொண்டு வருவதாகத் தெரிவித்த அதிபர் கிம், வளர்ச்சியை அதிகரிப்பது மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது இந்த ஆண்டின் இலக்குகளில் ஒன்றாக இருப்பதாகக் கூறினார்.
வடகொரியாவில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பட்டினியால் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள் முன்னதாக எச்சரித்திருந்தனர்.
இருப்பினும், இது வட கொரியாவை அதன் ஆயுதத் திட்டத்தைத் தொடர்வதைத் தடுக்க வாய்ப்பில்லை என்று பாண்டா கூறுகிறார்.
"கிம் சமீபத்திய ஆண்டுகளில் தேசத்தின் பாதுகாப்பில் தன்னிறைவு அடைவதன் முக்கியத்துவத்தைப் அவர் வலியுறுத்தி வருகிறார். அவர் நாட்டில் பொருளாதார சிக்கல்களைப் பற்றி வெளிப்படையாகக் கூறினார்," என்று பாண்டா கூறினார்.
"கிம் மற்றும் தொழிலாளர் கட்சிக்கு, இந்த ஆயுதத் திட்டங்களை நிலை நிறுத்துவது, உள் மற்றும் வெளிப்புற காரணங்களுக்காக தேசிய முன்னுரிமையாக உள்ளது."
வடகொரியா தனது அணு ஆயுதங்களைக் கைவிடுமாறு அமெரிக்கா அழைப்பு விடுத்து வருகிறது. மேலும், அதிபர் ஜோ பைடனின் நிர்வாகத்துடயான வட கொரியாவின் உறவு இதுவரை பதற்றம் நிறைந்ததாகவே உள்ளது.
ராணுவ நடவடிக்கைகளில் தென் கொரியா இரட்டை நிலைப்பாடு கொண்டதாக வடகொரியாவும் பலமுறை குற்றம் சாட்டி வருகிறது.
தென் கொரியா சமீபத்தில் தனது முதல் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணையைச் சோதித்தது. இது வடகொரியாவின் "ஆத்திரமூட்டல்களைத்," தடுப்பதற்குத் தேவை என்று கூறியது.