பலாப்பழம் ரூ.16,000-க்கு விற்பனை: இவ்வளவு விலைக்கு காரணம் என்ன?

செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (15:34 IST)
இந்த ஒளிப்படம், பிபிசி செய்தியாளர் ரிக்கார்டோ சென்ராவால் எடுக்கப்பட்டது. அவருடைய சொந்த நாடான பிரேசிலில் இந்த ஒளிப்படம் ஒரு லட்சம் ஷேர்களோடு மிகவும் வைரலானது.

லண்டனில் உள்ள மிகப்பெரிய மற்றும் பழைமையான உணவுச் சந்தைகளில் ஒன்றான போரோ சந்தையில் ஒரு பலாப் பழம் 160 யூரோவுக்கு (இந்திய விலையில் 16,226 ரூபாய்)விற்பனையாகிறது.
 
இவ்வளவு அதிகமான விலை, ட்விட்டர் பயனர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பலரும் பலாப் பழங்களை விற்று லட்சாதிபதியாக பிரிட்டனுக்குப் பறந்து செல்வார்கள் என்று கேலி செய்தனர்.
 
அனைத்திற்கும் மேலாக, புதிய பலாப் பழங்கள் பிரேசிலின் பல பகுதிகளில் 1.10 டாலர்களுக்குச் சமமான விலையில் கிடைக்கின்றன. மேலும் பல வெப்பமண்டல நாடுகளில் இதேபோல் மலிவான விலையில் அவை கிடைக்கின்றன.
 
இப்படியிருக்கும்போது, ஒரு பழத்திற்கு இவ்வளவு அதிக விலை வசூலிக்கப்படுவதற்கு என்ன காரணம்? ஒருவேளை இவை "அயல்நாட்டுப் பழம்" என்று சில நுகர்வோரால் கருதப்படுவதாலா? சமீபத்தில் அவற்றுக்கான தேவை சர்வதேச அளவில் அதிகரித்துள்ளது ஏன்?
 
முதலில், ஓர் அடிப்படை விதியை நினைவில் கொள்ளவேண்டியது அவசியம். விற்பனையின் அளவு விலையைப் பாதிக்கிறது. இது எந்தப் பொருளுக்கும் பொருந்தும்.
 
"பிரேசிலில் கூட, பலாப் பழத்தின் விலை மாறுபடும். மரத்திலிருந்து இலவசமாகப் பறிக்கக்கூடிய இடங்களும் உள்ளன. மற்ற பகுதிகளில் இது மிகவும் விலை உயர்ந்தது," என்று, எஸ்டேன்சியா டாஸ் ஃப்ரூடாஸ் என்ற 3,000 பழ வகைகளைக் கொண்ட சாவ் பாலோவிலுள்ள பழத் தோட்டத்தின் தலைமை செயல் அதிகாரியான சப்ரினா சர்டோரி பிபிசியிடம் கூறினார்.
 
மேலும், பிரிட்டன் போன்ற குளிரான நாடுகளில் பலாப் பழத்தை வணிக ரீதியாக வளர்க்க முடியாது.
 
ஆனால், இதன் பின்னணியில் அதைவிட அதிகக் காரணம் இருக்கிறது. குறிப்பாக, பலாப் பழத்தின் சர்வதேச வர்த்தகம், அதன் பருவநிலை மற்றும் அதன் அளவு உட்படப் பல்வேறு காரணங்களால் மிகவும் சிக்கலானது மற்றும் ஆபத்தானது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
 
மேலும், "பலாப் பழம் மிகவும் கடினமானது. அது மிக வேகமாக பழுத்துவிடும் மற்றும் மிகவும் வித்தியாசமான நறுமணத்தைக் கொண்டிருக்கும். அந்த நறுமணம் அனைவருக்கும் இனிமையானது அல்ல," என்று சர்டோரி கூறுகிறார்.
 
40 கிலோ வரை எடையுள்ள, ஆசியாவில் இருந்து உருவாகும் பழம், விரைவில் அழுகக்கூடியது. பல்பொருள் அங்காடியில் அது மிகக் குறுகிய ஆயுளைக் கொண்டுள்ளது.
 
பெரும்பாலும் பலாப் பழம், அது வளரும் நாடுகளில் அவ்வளவாக விரும்பப்படுவதில்லை. வளர்ந்த நாடுகளில், இதை இறைச்சிக்கு மாற்றாகக் கருதும் சைவ உணவு உண்பவர்கள் மற்றும் நனிசைவ உணவு உண்பவர்களால் அதிகமாகக் கேட்கப்படுகிறது. சமைக்கும் போது, அதன் அமைப்பு மாட்டிறைச்சி அல்லது பன்றி இறைச்சியை ஒத்திருக்கிறது. அதனால், டோஃபு, குர்ன் மற்றும் சீடன் போன்ற பிரபலமான இறைச்சியற்ற மாற்று உணவாக அமைகிறது.
 
இங்கிலாந்தில் மட்டும், சைவ உணவு உண்பவர்களின் எண்ணிக்கை 3.5 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
 
இருப்பினும், பலாப் பழம் மிகவும் பழுத்ததாக மாறும்போது(இந்தச் செயல்முறை மிக வேகமாக நடக்கும்), இது ஓர் இனிமையான சுவையைப் பெறுகிறது மற்றும் இனிப்புகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.
 
இதை மிகவும் மலிவான விலையில் வாங்க வேண்டுமெனில், நுகர்வோர் கேன் செய்யப்பட்டதைத் தான் வாங்க வேண்டும்.
 
கேன் செய்யப்பட்ட பலாப் பழத்தை பிரிட்டிஷ் பல்பொருள் அங்காடிகளில் சராசரியாக நான்கு டாலர்களுக்கு இருப்பதைக் காணலாம். ஆனால், பலரும் அதன் சுவை ஒரே மாதிரியாக இல்லை என்று கூறுகின்றனர்.
 
பலாப் பழம் மிகவும் பெரியது. அதற்கான போக்குவரத்து கடினமாக உள்ளது. மேலும், அது பருவகால அறுவடையைக் கொண்டது. சீரற்ற வடிவம், அளவு மற்றும் எடை காரணமாக இதன் பேக்கிங் சவாலானது. இதை அற்ற பழங்களைப் போல் நிலையான அளவுடைய பெட்டிகளில் வைக்க முடியாது. பழம் நல்ல நிலையில் உள்ளதா என்பதை அதன் வெளிப்புறத்தைப் பார்த்தே கண்டறிய அறிவியல் பூர்வமான வழியும் இல்லை.
 
அதுமட்டுமின்றி, இதைப் பயிரிட்டு ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடுகளில், பெரும்பாலும் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் (பலாப் பழம் பங்களாதேஷ் மற்றும் இலங்கையின் தேசிய பழம்), சந்தைப்படுத்தல் சங்கிலித்தொடரில் பற்றாக்குறை நிலவுகிறது. இதன் விளைவாக, மொத்த உற்பத்தியில் 70% இழப்பு ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
 
உதாரணமாக, இந்தியாவில் பலாப் பழம் விரும்பத்தகாததாகவும் கிராமப்புறங்களில் ஏழைகளின் பழமாக இழிவுபடுத்தப்பட்டதாகவும் கருதப்படுகிறது.
 
இதில் கூடுதல் அம்சமாக, விழிப்புணர்வு இல்லாமலையை வல்லுநர்கள் குறிப்பிடுகின்றன. பலாப் பழம் பெரியளவில் பிரபலமாகிவிட்டாலும், பல நுகர்வோர் அதை ஒருபோதும் ருசித்துப் பார்த்ததில்லை. அதைக் கொண்டு செய்யக்கூடிய சமையல் குறிபுகள் எதுவும் தெரியாது.
 
நெதர்லாந்தை தளமாகக் கொண்ட கவர்ச்சியான பழங்களின் இறக்குமதியாளரான டோரஸ் ட்ராபிகல் பிவியின் உரிமையாளர் ஃபெப்ரிசியோ டோரஸ், கோவிட்-19 பேரிடரால் விமான சரக்கு கணிசமாக உயர்ந்துள்ளதாகக் கூறுகிறார்.
 
"ஆசியா மற்றும் தென் அமெரிக்கா போன்ற பகுதிகளில் இருந்து பல பழங்கள் ஐரோப்பாவிற்கு பயணிகள் விமானங்களில் வருகின்றன. விமான நிறுவனங்கள் இப்போது, சரக்கு இடத்திற்கான அதிக மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகளைத் தேடுகின்றன. பலாப் பழம் விரைவில் அழுகிப் போகும் என்பதால், அதை அதிகளவில் இறக்குமதி செய்வது மதிப்பு வாய்ந்தது அல்ல. இவையனைத்தும் அவற்றின் இறுதி விலையை உயர்த்துகின்றன," என்று அவர் கூறுகிறார்.
 
பிரகாசமான எதிர்காலம்
இவ்வளவு தடைகள் இருந்தபோதிலும், சமீபத்திய ஆய்வுகள் பலாப் பழத்திற்கான சர்வதேச சந்தையின் விரிவாக்கம் இருப்பதாக மதிப்பிடுகின்றன.
 
இண்டஸ்ட்ரி ஏஆர்சி-யின் ஆலோசனைப்படி, 2026-ஆம் ஆண்டின்போது 359.1 மில்லியன் வரை அவற்றின் சந்தை வளர்ச்சி உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 2021-2026 காலகட்டத்தில் 3.3% என்ற வருடாந்திர விகிதத்தில் வளர்ச்சியடையும்.
 
2020-ஆம் ஆண்டில், ஆசிய-பசிபிக் பிராந்தியமானது பலாப் பழச் சந்தையில் (37%), ஐரோப்பா (23%), வட அமெரிக்கா (20%), உலகின் பிற பகுதிகள் (12%) மற்றும் தென் அமெரிக்கா (8%) என்ற அளவுக்குப் பங்கு பெற்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்