ஆளுநர் ஆர்.என்.ரவி 'திராவிட ஒவ்வாமை' அணுகுமுறையை கடைபிடிக்கிறாரா?

Prasanth Karthick

ஞாயிறு, 20 அக்டோபர் 2024 (15:16 IST)

சென்னையில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் 'திராவிடம்' என்ற சொல் தவிர்க்கப்பட்டதன் மூலம், ஆளுநர் ஆர்.என்.ரவியை முன்னிறுத்தி மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.

 

 

'திராவிட ஒவ்வாமையால் ஆளுநர் ஆர்.என்.ரவி அவதிப்படுவதாக' முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.

 

தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றதில் இருந்து 'திராவிடம்' என்ற சொல்லை வைத்து தொடர் சர்ச்சைகள் எழுவது ஏன்? இதன் பின்னணி என்ன?

 

சென்னையில் பிரசார் பாரதி அலுவலகத்தில் இந்தி மாத நிறைவு விழா வெள்ளியன்று (அக்டோபர் 18) நடைபெற்றது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

 

இதில், 'தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடும்' என்ற வரி தவிர்க்கப்பட்டது. இதற்கு டிடி தமிழ் நிர்வாகம், மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டது.

 

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, இதுகுறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. மாறாக, அவர் பேசும்போது, "இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிப்பதற்கு கடந்த 50 ஆண்டுகளில் பல்வேறு முயற்சிகள் நடந்துள்ளன. பிரித்தாளும் கொள்கை வெற்றி பெற்றதில்லை'' என்றார்.

 

தொடர்ந்து இந்தி மொழியை ஆட்சியாளர்கள் புறக்கணிப்பது குறித்தும் சமஸ்கிருத மொழியை பல்கலைக் கழகங்களில் இருந்து அகற்றியதாகவும் குற்றம் சுமத்தினார்.

 

'எக்ஸ்' தளத்தில் நடந்த வார்த்தை மோதல்

 

ஆர்.என்.ரவியின் பேச்சும் நிகழ்ச்சியும் சர்ச்சையான நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், "திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் தவிர்த்துவிட்டுப் பாடச் சொல்வாரா?" எனக் கேள்வி எழுப்பினார்.

 

இதற்கு எக்ஸ் பக்கத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்துள்ளார். அவர் தனது பதிவில், "முதலமைச்சர் ஸ்டாலின் எனக்கு எதிராக இனவாத கருத்தைத் தெரிவித்து, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நான் அவமரியாதை இழைத்ததாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

 

ஒவ்வொரு விழாவிலும் தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாகப் பாடுவேன் என்பதையும் அதை பக்தி சிரத்தையோடு துல்லியமாகப் பாடுவேன் என்பதும் அவருக்கு நன்றாகத் தெரியும்.

 

பெருமைமிகு இந்தியன் என்ற முறையில், நாட்டின் தொன்மையான, வளமான மற்றும் உயிர்ப்புமிக்க மொழியான தமிழை நாட்டின் பிற மாநிலங்களில் பரப்ப நான் ஏராளமான முயற்சிகளைச் செய்துள்ளேன்.

 

ஓர் ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் இனவாதக் கருத்தை தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிர்ஷ்டவசமாக மலிவானது மற்றும் முதலமைச்சரின் உயர் அரசியலமைப்புப் பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும் உள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்.

 

ஆளுநர் பேச்சு - பட்டியல் போட்ட ஸ்டாலின்

 

இதற்கு மீண்டும் பதில் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த காலங்களில் ஆர்.என்.ரவி பேசிய சம்பவங்களைப் பட்டியலிட்டார்.

 

 

அதில், "தமிழ்நாடு என்ற பெயரைப் புறக்கணித்து, தமிழகம் என்று அழைக்க வேண்டும்" என்றும் "திராவிடம் என்ற கோட்பாடே பிரிட்டிஷார் அறிமுகப்படுத்தியதுதான்" என்றும் கூறியதை மறக்க முடியுமா எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும், "திராவிட மாடல் காலாவதியான கொள்கை' என ஆங்கில நாளேட்டுக்குப் பேட்டி அளித்த வெறுப்பு, இன்று தமிழ்த்தாய் வாழ்த்து வரை வந்து நிற்கிறது" எனவும் பதிவிட்டுள்ளார்.

 

''தமிழை நேசிப்பதாக இப்போது சொல்லும் நீங்கள் முன்பு, திருவள்ளுவர் படத்தைக் காவி நிறத்தில் ஏன் வெளியிட்டீர்கள் எனச் சொல்ல முடியுமா?'' எனவும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

தொடர்ந்து அந்தப் பதிவில், ''ஆளுநராகப் பொறுப்பேற்றதில் இருந்து அரசியல் சட்ட நெறிமுறைகளை மறந்து நாள்தோறும் அரசியல் பேசுவதும், ஆளுநர் மாளிகையை அரசியல் அலுவலகமாக மாற்றியதும், திராவிட இனத்தையே கொச்சைப்படுத்திப் பேசி வருவதும் எந்த வகை அரசியல் நாகரிகம்?'' எனவும் முதலமைச்சமுதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

தொடரும் சர்ச்சைப் பேச்சுகள்

 

தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றதில் இருந்தே திராவிடம் தொடர்பான சர்ச்சைகள் அடிக்கடி வருகின்றன.

 

கடந்த ஆண்டு ஜனவரி மாதம், காசி தமிழ்ச் சங்கமம் தன்னார்வலர்களைச் சிறப்பிக்கும் நிகழ்ச்சிக்கு ஆளுநர் மாளிகை ஏற்பாடு செய்திருந்தது. அப்போது பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, திராவிட ஆட்சியில் 50 ஆண்டுகளாக மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

 

இதற்கு தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு கண்டன அறிக்கை வெளியிட்டார். அதில், "திராவிட ஆட்சி குறித்த ஆளுநரின் விமர்சனம் பா.ஜ.க-வின் தேர்தல் அரசியல் உள்நோக்கத்தைக் காட்டுகிறது. 50 ஆண்டுகளுக்கு முந்தைய பிகாரும் உ.பி-யும் இன்று எப்படி இருக்கிறது?" எனக் கேள்வி எழுப்பினார்.

 

சனாதனம், ஆரியம், திராவிடம், திருக்குறள் ஆகியவை குறித்து ஆளுநர் பேசும் கருத்துகள் அவர் மூளையில் படிந்துவிட்ட ஆர்.எஸ்.எஸ். தன்மையைக் காட்டுவதாகவும் சாடியிருந்தார்.

 

அடுத்து, ஆங்கில நாளேடு ஒன்றுக்கு கடந்த ஆண்டு மே மாதம் பேட்டியளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, "திராவிட மாடல் என்ற ஒன்று இல்லை. அது காலாவதியான கொள்கை" எனத் தெரிவித்திருந்தார்.

 

இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், "திராவிட மாடல் ஆட்சி என்பது நிர்வாகத்துக்கான மாடல்" எனக் குறிப்பிட்டார்.

 

தொடரும் திராவிடம் சர்ச்சைகள்

 

இதன் பின்னர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆளுநர் மாளிகையில் நடந்த பழங்குடியினர் தின விழாவில், திராவிடம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிய வார்த்தைகள் சர்ச்சையை ஏற்படுத்தின.

 

அவர் பேசும்போது, ''திராவிடம் என்பதை இனம் என ஆங்கிலேயர்கள் குறிப்பிட்டது தவறு. விந்திய மலைக்கு தெற்கே இருப்பது பஞ்ச திராவிட பகுதி. வடபகுதி என்பது பஞ்ச ஆரிய பகுதி என்பதே பண்டைய வரலாறு'' எனக் குறிப்பிட்டார்.

 

இதற்குப் பதில் அளித்த டி.ஆர்.பாலு, ''ஆங்கிலேயர்கள் திராவிடர் என அடையாளப்படுத்தி பிரித்ததாக ஆளுநர் கூறியதற்கு எந்த ஆதாரமும் இல்லை'' என அறிக்கை மூலம் பதில் அளித்தார்.

 

''இந்தியாவில் ஆங்கிலேயர்களின் வருகை கி.பி. 1600 என வைத்துக் கொண்டால்கூட அதற்கு முன்னதாக திராவிடம் என்ற வார்த்தை இல்லையா? ஆரியர்-திராவிடர் என்ற சொற்கள் எப்போது உருவானது என்பது குறித்துப் பல நூறு புத்தகங்கள் வெளியாகியுள்ளதாக'' டி.ஆர்.பாலு குறிப்பிட்டார்.

 

மேலும், ''மகாபாரதம், காஞ்சிபுராணம் ஆகியவற்றில் திராவிடம் என்ற சொல்லாடல் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஆங்கிலேயர்கள் பிரித்ததாகக் கூறுவது வரலாற்றை மறைப்பவர்களின் கருத்து'' எனவும் டி.ஆர்.பாலு சாடினார்.

 

அதன் பின்னரும் திராவிடம் குறித்த சர்ச்சை ஓயவில்லை.

 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருச்சியில் தனியார் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆளுநர் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், "திராவிட இயக்கம், இந்திய சுதந்திர இயக்கத்திற்கு எதிரானது" என்ற பொருளில் பேசினார்.

 

இதைச் சாடிய டி.ஆர்.பாலு, "திராவிடம் என்ற கருத்தியல் பற்றி உளறிக் கொட்டுவது ஒவ்வொரு மேடையிலும் ஆளுநருக்கு வழக்கமாக இருப்பதாக" விமர்சித்தார்.

 

இதன் தொடர்ச்சியாக, கடந்த வெள்ளி அன்று பிரசார் பாரதி நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, கடந்த 50 ஆண்டுகளாக இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிக்கும் முயற்சிகள் நடந்ததாகக் கூறினார். இது தி.மு.க தொடக்க காலங்களில் முன்வைத்த திராவிட நாடு கொள்கையை மறைமுகமாகச் சுட்டிக் காட்டும் வகையில் ஆளுநர் பேசியதாக விமர்சிக்கப்படுகிறது.

 

ஆளுநரின் சர்ச்சைக் கருத்துகள்

 

''திராவிடம் குறித்து ஆளுநர் ரவி தொடர்ச்சியாகப் பேசி வருவதை எவ்வாறு புரிந்து கொள்வது?'' என சென்னை பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ராமு மணிவண்ணனிடம் கேட்டோம்.

 

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "திராவிடம் என்பது இயக்கங்களையும் தாண்டி சமூகம் சார்ந்த தத்துவார்த்த கொள்கைகளை உள்ளடக்கிய ஒன்று. அது வேண்டாம் என்று ஆளுநரால் எப்படி சொல்ல முடியும்?" என்று கேள்வி எழுப்புகிறார்.

 

மேலும், ''மாநில அளவிலும் தேசிய அளவிலும் பா.ஜ.க-வுக்கு வலிமையான எதிர்க்கட்சியாக தி.மு.க இருக்கிறது. இதை ஆளுநர் விரும்பவில்லை. இதுபோன்ற கருத்துகளைப் பேசி, தனது இருப்பைக் காட்டிக் கொள்கிறார். அவர் வேறு எந்த மாநிலத்துக்குச் சென்றாலும் இதையே பேசுவார்'' என்கிறார் ராமு மணிவண்ணன்.

 

''காந்தியை தேசத் தந்தை என முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியுமா எனக் கேட்டவர் ஆளுநர் ரவி. அப்படிப்பட்டவர் திராவிடம் பற்றிக் கூறுவதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை'' என்கிறார் ராமு மணிவண்ணன்.

 

'எந்த மாற்றமும் ஏற்படாது'

 

''திராவிடம் குறித்து ஆளுநர் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அவரது சொந்தக் கருத்து எனப் பார்த்தாலும் அந்தக் கருத்தை அரசியல் அமைப்புச் சட்டம் வகுத்துள்ள பதவியின் கீழ் அமர்ந்துகொண்டு பேசுகிறார் என்பதுதான் பிரச்னை,'' என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.

 

''காவல், நிர்வாகம் ஆகிய பின்புலத்தில் இருந்து ஆர்.என்.ரவி வந்துள்ளார். அவருக்கு திராவிடம் பற்றித் தெரிய வாய்ப்பில்லை. அவர் பேசுவதால் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை" எனக் கூறும் ஷ்யாம், ''டிடி தமிழ் நிகழ்வு இவ்வளவு எதிர்வினையை ஏற்படுத்தும் என ஆளுநர் எதிர்பார்க்கவில்லை'' எனக் கூறுகிறார்.

 

பா.ஜ.க சொல்வது என்ன?
 

இந்தக் கருத்தை மறுத்து பிபிசி தமிழிடம் பேசிய தமிழக பா.ஜ.க பொதுச் செயலாளர் இராம சீனிவாசன், ''திராவிடம் என்பது நிலவியல் ரீதியாக ஒரு பகுதி. இவர்கள் அதை இனம் என்கின்றனர். நாங்கள் அந்தக் கருத்தை ஏற்கவில்லை. அதைப் பற்றி ஆளுநர் பேசுவதை வைத்து தி.மு.க அரசியல் செய்கிறது'' என்றார்.

 

''ஆளுநராக இருப்பவர் தனது சொந்தக் கருத்தைப் பேசுகிறார். அவர் அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் என யாரையும் வசைபாடவில்லை. அவர் கூறுவதைக் கருத்தியல் ரீதியாக விமர்சிக்கலாம். அவதூறு செய்வதை ஏற்க முடியாது'' என்றும் இராம சீனிவாசன் தெரிவித்தார்.

 

மேலும், தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மறைக்கவே ஆளுநர் பங்கேற்ற பிரசார் பாரதி நிகழ்வை வைத்து தி.மு.க அரசியல் செய்வதாகவும் இராம சீனிவாசன் திமுகவை விமர்சித்தார்.

 

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்