சைபீரியாவில் 110 ஆண்டுகள் முன்பு மோதியது வேற்றுக் கிரக விமானமா?

புதன், 2 மே 2018 (13:51 IST)

சைபீரியாவில் 110 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட அசாதாரணமான வானியல் நிகழ்வு பற்றிய புதிர்களுக்கு இன்னமும் விடையில்லை.
 

110 ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் ஒரு பயங்கரமான வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இது போட்காமேன்னயா துங்குஸ்கா ஆற்றின் அருகே ஏற்பட்டது.

படத்தின் காப்புரிமை
 

1908 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதி, உள்ளூர் நேரப்படி 7 மணி 17 நிமிடத்திற்கு, பைகால் ஏரியின் வடமேற்கு பகுதியில் இருக்கும் மலைப்பகுதியில் வசித்தவர்கள், நீல நிறத்தில் இருந்த ஒளிமயமான பொருள் ஒன்றை வானில் கண்டார்கள். சூரியனைப் போல பிரகாசமாக இருந்த அந்தப் பொருள் நகர்ந்ததையும் பார்க்கமுடிந்தது. சுமார் பத்து நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு பீரங்கியில் இருந்து வெளிப்படும் தோட்டா ஒலியைப் போன்று தொடரொலி எழுந்தது.

8 கோடி மரங்கள் சாம்பல்

அப்போது வீழ்ந்த நெருப்புப் பந்து 50 முதல் 100 மீட்டர் அகலத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இப்பகுதியின் டைகா காடுகளில் இரண்டாயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் சேதம் விளைவித்து, 8 கோடி மரங்களை சாம்பல் மேடுகளாக்கிவிட்டன.

சக்திவாய்ந்த இந்த நிகழ்வின்போது, சுமார் 60 கி.மீ. தொலைவில் இருந்த வீடுகளின் ஜன்னல்கள் உடைந்து நொறுங்கின. இந்த வெடிப்பினால் வெளிவந்த வெப்பத்தின் தாக்கத்தால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

படத்தின் காப்புரிமை
 
Image caption
 


நல்லவேளையாக இந்த கொடூரமான வெடிப்பு நிகழ்ந்த நிலப்பரப்பில், மக்கள் மிகவும் குறைவாக வசித்தார்கள் அல்லது இல்லை என்றே சொல்லலாம். அதிகாரபூர்வ தகவல்களின்படி, இந்த வெடிப்பில் ஒரேயொரு ஆடு மேய்ப்பாளர் உயிரிழந்தார். வெடிப்பினால் தூக்கி எறியப்பட்ட அவர், ஒரு மரத்தில் மோதி இறந்தார். ஆனால் இந்த சக்திவாய்ந்த வெடிப்பின் காரணமாக, அங்கிருந்த விலங்குகள் எலும்புக்கூடுகளாக மாறின.

அந்த வெடிப்பு சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவரின் கூற்றுப்படி, 'வானம் இரண்டு பகுதிகளாக பிளவுண்டு, அதிலிருந்து நெருப்பு கோளம் கொட்டுவது போல் தோன்றியது. தரையில் எதோ விழுந்ததைப் போல் பயங்கரமான ஓசை ஏற்பட்டது. அதன்பிறகு எல்லா இடங்களிலும் கல் மழை பொழிந்தது. அதன் ஓசை, துப்பாக்கியால் தொடர்ந்து சுடுவது போன்று இருந்தது'.

படத்தின் காப்புரிமை
 

சைபீரியாவில் வெடித்தது, பிரிட்டனில் அதிர்ந்தது

இந்த நிகழ்வு 'துங்குஸ்கா நிகழ்வு' என்று அறியப்படுகிறது. இந்த வெடிப்பு சம்பவத்தில் ஏற்பட்ட வெப்பமானது, ஒப்பீட்டளவில் ஹிரோஷிமா மீது வீசப்பட்ட குண்டைவிட 185 மடங்கு அதிகமாக இருந்தது என்று சில விஞ்ஞானிகள் கூறினாலும், இதைவிட அதிக சக்தி வாய்ந்தது என்றும் வேறு சில விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இந்த வெடிப்பினால் பூமியில் ஏற்பட்ட தாக்கமானது ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் இருந்த பிரிட்டனில் உணரப்பட்டது.

110 ஆண்டுகளுக்கு பிறகும் இந்த நிகழ்வின் பின்னணியில் இருக்கும் புதிர் முடிச்சு அவிழ்க்கப்படவில்லை. இதுதொடர்பாக பல்வேறு விஞ்ஞானிகளும், வெவ்வேறு கருத்துக்களை வெளியிடுகின்றனர்.

சம்பவம் நடைபெற்ற நாளில் ஒரு விண்கல் அல்லது வால் நட்சத்திரம் பூமியில் மோதியதாகவும், இந்த வெடிப்பு சம்பவம் அதன் விளைவுதான் என்றும் பலர் கருதுகின்றனர். எனினும், விண்கல்லோ வால் நட்சத்திரமோ பூமியை தாக்கியதற்கான எந்தவித ஆதாரமும் பூமியில் காணப்படவில்லை. நிலத்தின்மீது எந்த பள்ளமோ, குழியோ, தடயமோ காணப்படவில்லை.

உண்மையில் சைபீரியாவின் துங்குஸ்கா நிலப்பகுதி எளிதில் அணுக முடியாதது. இங்கே நிலவும் குளிர்காலம் மிகவும் கொடூரமானதாகவும், நீண்ட நாட்களுக்கு நீடிப்பதாகவும் இருக்கும். கோடைக்காலம் மிகவும் குறுகியது. இங்குள்ள சதுப்பு நிலங்களில் செல்வது மிகவும் கடினமானது.

படத்தின் காப்புரிமை
 
Image caption
 

20 ஆண்டுகளுக்கு பிறகும் வெடிப்பின் அறிகுறிகள்

வெடிப்பு நிகழ்ந்த பல ஆண்டுகளுக்குப் பிறகும் அதைப் பற்றி விசாரிக்க அங்கு யாரும் செல்லவில்லை. அந்த கால கட்டத்தில் ரஷ்யாவில் ஒரு அரசியல் புரட்சி ஏற்பட்டது. எனவே மனிதர்கள் வசிக்காத இந்த இடத்தில் ஏற்பட்ட வெடிப்புக்கு யாரும் பெரியளவில் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

அமெரிக்காவின் அரிஸோனா மாகாணத்தில் உள்ள அறிவியல் கோளரங்க நிறுவனத்தை சேர்ந்த நத்தாலியா ஆர்த்தேயிமேவாவின் கருத்துப்படி, வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு 1927 ல் லியோனித் குலிக் என்ற விஞ்ஞானி தலைமையில் ஒரு ரஷ்ய குழு துங்குஸ்கா பகுதிக்கு சென்றது.

இந்த வெடிப்பு நிகழ்ந்த ஆறு ஆண்டுகள் கழித்துதான் அது பற்றிய தகவல் செய்தித்தாள்களில் வெளிவந்தது. அதன் பிறகு, லியோனித் அந்த பகுதிக்கு செல்ல முடிவு செய்தார்.

20 ஆண்டுகள் கழிந்தாலும், வெடிப்பின் எச்சங்களை அவரால் அங்கு கண்டறிய முடிந்தது. சுமார் 50 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் எரிந்து சாம்பலாக இருந்த மரங்களை அவரது குழுவினர் கண்டறிந்தனர்.

 

பூமி்யில் எந்தவிதமான பள்ளமும் ஏற்படவில்லை

எனினும், எரிகற்கள் அல்லது வால் நட்சத்திரங்களின் மோதல் ஏற்பட்டதைப் போல அப்பகுதியில் தரையில் எந்தவிதமான பள்ளமும் ஏற்படவில்லை என்பது லியோனித்துக்கு ஆச்சரியமாக இருந்தது. அதற்கு காரணம் நிலம் சதுப்பு நிலமாக இருந்ததே என்றும் அவர் கண்டறிந்தார்.

1938இல் துங்குஸ்கா வெடிப்பு பற்றி லியோனித் இவ்வாறு எழுதுகிறார், 'பூமியில் இருந்து 25 மீட்டர் ஆழத்தில் நிக்கலுடன் கூடிய இரும்புத் துண்டுகள் இருக்கலாம் என்று கருதுகிறோம். அவற்றின் எடை நூறு முதல் இருநூறு மெட்ரிக் டன்கள் வரை இருக்கும்.

சில ரஷ்ய ஆய்வாளர்கள், அந்த குறித்த நாளில் பூமியில் மோதியது விண்கல் இல்லை, அது ஒரு வால் நட்சத்திரமாக இருக்க வாய்ப்புகள் உண்டு என்றனர். உண்மையில், வால்மீன்கள் விழும்போது பனிப்பாறைகள் உருவாகின்றன. இதனால்தான் அவை மோதிய பிறகு அவற்றின் எச்சங்கள் இருப்பதில்லை, காரணம் பூமியின் வளிமண்டலத்திற்கு வந்தபிறகு பனி உருகத் தொடங்கிவிடும்.

இப்படி பல்வேறுவிதமான கோட்பாடுகள் சொல்லப்பட்டாலும், துங்குஸ்கா வெடிப்பு சம்பவம் பற்றிய ஊகங்கள் முடிவடையவில்லை. வெடிப்புக்கான உண்மையான காரணம் கண்டறியப்படவில்லை.

படத்தின் காப்புரிமை

ஊகங்கள் இன்னும் சூடாகவே உள்ள

சம்பவம் நிகழ்ந்து ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக ஆகிவிட்ட போதிலும், துங்குஸ்காவின் வெடிப்பு பற்றிய ஊகம் இன்னமும் சூடாகவே இருக்கிறது.

இது, பொருள் மற்றும் எதிர்ப்பொருளுக்கும் இடையிலான மோதலின் விளைவு என்று ஒரு தரப்பு கூறினால், இதுவொரு அணு வெடிப்பு என்று மற்றொரு தரப்பு கூறுகிறது. அந்நாளில் துங்குஸ்காவில் மோதியது வேற்றுலகவாசிகளான ஏலியன்களின் விமானம் என்ற வதந்தியும் உள்ளது. பைகால் ஏரியின் புதிய தண்ணீரைத் தேடி ஏலியன்கள் பூமிக்கு வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால் ஊகங்கள் அனைத்தும் உண்மையாகாது. அவை நிரூபிக்கப்படவேண்டும். இந்த விவகாரத்தில் ஊகங்கள் அப்படியே இருக்கின்றன.

அதன்பிறகு 1958 ஆம் ஆண்டில் சில ஆராய்ச்சியாளர்கள் மீண்டும் துங்குஸ்கா பகுதிக்கு பயணம் மேற்கொண்டனர். அங்கு சிலிக்கேட் மற்றும் மாக்னடைடின் சிறு சிறு பாகங்கள் கிடைத்தன. அவை மேலும் ஆராயப்பட்டபோது, நிக்கலும் கிடைத்தது. நிக்கல் பொதுவாக விண்கற்களின் பாறைகளில் காணப்படுவது ஆகும். இந்த புதிய கண்டுபிடிப்புக்குப் பிறகு, அந்த வெடிப்பு நாளில் பூமியில் மோதியது விண்கல் என்ற கோட்பாடு வலுப்பெற்றது.

ஆராய்ச்சி குழுவின் தலைவர் ஃப்ளோரென்ஸ்கி 1963ஆம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கையில் "ஊகங்கள் விளம்பரத்திற்கு பயன்படலாம். ஆனால் அது யாருக்கும் உதவாது. உண்மைகளை மறைத்தால் விஞ்ஞானத்திற்கு நன்மை எதுவும் கிடைக்காது" என்று கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை

கருந்துளைகள் மோதியதான கோட்பாடு

 

ஆனால், ஃப்ளோரன்ஸ்கியின் அறிக்கைக்கு பிறகும், துங்குஸ்கா தொடர்பான ஊகங்கள் தொடர்கின்றன. 1973 இல், இந்த கட்டுரை பிரபலமான அறிவியல் சஞ்சிகையான 'நேச்சர்' இல் வெளியிடப்பட்டது. 1908 ஆம் ஆண்டில் சைபீரியாவில் கருந்துளை ஒன்று மோதியதாகவும், துங்குஸ்காவில் ஏற்பட்ட வெடிப்பு கருந்துளையின் மோதலின் விளைவு என்றும் கூறப்பட்டது.

இந்த புதிய கோட்பாடு குறித்து கேள்விகளும் எழுப்பப்பட்டன. இத்தகைய கோட்பாடு மனித மனநிலையின் விளைவு என்று நத்தாலியா கூறுகிறார்.

ஆழ்ந்த ரகசியங்கள் மற்றும் புதிர்களை பற்றி தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வம் இருப்பது மனித இயல்பு. இந்த விடயத்தில் விஞ்ஞானிகளின் கூற்றை செவிமடுக்க மக்கள் விரும்புவதில்லை. பிரச்சனை என்னவென்றால் துங்குஸ்காவில் வானிலிருந்து விழுந்த எந்தவொரு பொருளும் கிடைக்கவில்லை. இதனால்தான் ஊகங்கள் வலுப்பெறுகின்றன.

110 ஆண்டுகள் பழமையான வெடிப்பு தொடர்பான வதந்திகள் பரவுவதற்கு விஞ்ஞானிகளும் பொறுப்பு என்று நதாலியா கூறுகிறார். உரிய காரணத்தை கண்டறிய நீண்ட காலம் எடுத்துக் கொண்டால் அங்கு ஊகங்களே அதிகமாகும் என்கிறார் அவர்.

உண்மையில், பூமியில் விண்கற்கள் மோதும்போது, பேரழிவு உருவாகிறது என்று நினைக்கிறார்கள். உதாரணமாக ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் விண்கற்கள் மோதியபோது, டைனோசர்கள் பூண்டோடு அழிந்துவிட்டன.

படத்தின் காப்புரிமை

துங்குஸ்காவில் விண்கல் மோதியதா?


2013 ஆம் ஆண்டில், துங்குஸ்கா வெடிப்பு பற்றிய ஊகத்திற்கு ஒரு புதிய திருப்பத்தை கொடுத்தது விஞ்ஞானிகள் குழு. துங்குஸ்கா பகுதியில் காணப்படும் பாறைகளின் சிறிய துண்டுகளை ஆய்வு செய்தார் உக்ரைன் அகாடமி ஆஃப் சயின்ஸ் அமைப்பின் விக்டர் க்வாஸ்னித்ஸ்யா. 1978இல் சேகரிக்கப்பட்ட இந்த துண்டுகளில் கிராஃபைட் போன்ற பொருள் கிடைத்ததாக விக்டர் கூறுகிறார். இவை பொதுவாக பூமியில் சிறிய விண்கற்கள் பூமியில் மோதுவதால் உருவாகின்றன.

1908 ஆம் ஆண்டில் விண்கல் ஒன்று துங்குஸ்காவில் பூமியைத் தாக்கியதற்கான சான்றுகள் அதில் இருப்பதாக என்று விக்டர் கூறுகிறார். உண்மையில் அங்கு என்ன நடந்தது என்று அவர் விளக்கமாக சொல்கிறார். அதுவரை ஆராய்ச்சிக்காக அங்கு சென்றவர்கள் அனைவருமே பெரிய துண்டுகளையே தேடிச் சென்றார்கள். ஆனால் சதுப்பு நிலங்களில் தேடும்போது சிறு துண்டுகளையே தேடவேண்டும் என்று அவர் கூறினார்.

ஆனால், விக்டரின் கண்டுபிடிப்புகளுக்கு பிறகு, துங்குஸ்கா மீதான சர்ச்சைகள் முடிவுக்கு வந்துவிட்டதா என்று கேட்டால் அதற்கான பதில் 'இல்லை' என்பதே. பூமியில் அடிக்கடி விண்கற்கள் விழும். அவை சிறு துண்டுகளாக அங்கும் இங்குமாக சிதறும். ஆனால் அதுபோன்ற சான்றுகள் துங்குஸ்காவில் கிடைக்கவில்லை.

படத்தின் காப்புரிமை

துங்குஸ்காவில் ஏற்பட்டது இயல்பான நிகழ்வு அல்ல

துங்குஸ்கா வெடிப்பு பற்றி விஞ்ஞானிகளின் ஊகங்கள் பலவிதமாக இருந்தபோதிலும். ஆனால், 1908 ஆம் ஆண்டில் துங்குஸ்காவில் ஏற்பட்ட மாபெரும் வெடிப்புக்கு, பூமியில் இருந்து வால் நட்சத்திரம் அல்லது விண்கல் மோதியதுதான் காரணம் என்று பரவலாக நம்பப்படுகிறது.

பிற வெடிப்பு சம்பவங்களிலிருந்து துங்குஸ்காவின் சம்பவம் வேறுபட்டது என்று கூறுவதற்கான காரணம் அது வெளிப்படுத்திய ஆற்றல்தான். இது 10 முதல் 15 மெகாடன் டி.என்.டி அளவிலான ஆற்றலை இது வெளியிட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்