இந்தியா Vs இங்கிலாந்து 3வது டெஸ்ட்: 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா - முக்கிய ஹைலைட்ஸ்
வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (00:17 IST)
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியிருக்கிறது இந்திய அணி.
இதன் மூலம் நான்கு ஆட்டங்கள் கொண்ட தொடரில், 2க்கு 1 என்ற அளவுக்கு முன்னேறியிருக்கும் இந்தியா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான பாதைக்கு வெகு நெருக்கத்தில் இருக்கிறது.
இறுதிப்போட்டிக்கு ஏற்கெனவே நியூஸிலாந்து தகுதி பெற்று விட்ட நிலையில் அடுத்து எஞ்சிய இரு ஆட்டங்களில் இங்கிலாந்து வென்றால்தான் அதனால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் நிலை உள்ளது.
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத் நகரில் மீளுருவாக்கம் செய்யப்பட்டு நரேந்திர மோதி விளையாட்டரங்கம் என பெயர் சூட்டப்பட்ட இடத்தில் இந்த டெஸ்ட் போட்டி நடைபெற்றது.
முன்னதாக, பகலிரவு ஆட்டமாக புதன்கிழமை தொடங்கிய 3ஆவது டெஸ்ட் போட்டியில் டாஸை வென்ற இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 48.4 ஓவர்களில் 112 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பின்னர் களமிறங்கிய இந்திய அணி, முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுக்கு 99 ரன்களை எடுத்தது. ரோஹித் சர்மா 57 ரன்களுடனும், ரஹானே ஒரு ரன்னையும் எடுத்து களத்தில் நின்றனர்.
இதைத்தொடர்ந்து இரண்டாம் நாள் ஆட்டத்தில் ரோஹித் சர்மா 66 ரன்களையும் கில் 11 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் கோஹ்லி 27 ரன்களுக்கு போல்ட் ஆனார். அஸ்வின் 17 ரன்களில் வெளியேறினார். 53.2 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி 145 ரன்களை எடுத்தது. இதனால் இங்கிலாந்தை விட இந்திய அமி 33 ரன்கள் முன்னிலையில் இருந்தது.
இதைத்தொடர்ந்து 2ஆவது இன்னிங்ஸில் ஆடிய இங்கிலாந்து அணியில், கேப்டன ரூட் 19, ஸ்டோக்ஸ் 25, போப் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்களும் குறைவான ரன்களை எடுத்த நிலையில் 30.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 81 ரன்களை இங்கிலாந்து அணி பெற்றது.
இதன் பிறகு களமாடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா 3 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 25 பந்துகளில் 25 ரன்களை குவித்தார். சுப்மன் கில் 21 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்து 15 ரன்களை எடுத்தார். ஆட்டம் தொடங்கிய வேகத்திலேயே 7.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 29 ரன்களை அவர்கள் எடுத்தனர்.
இதையடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியின் முதல் இரண்டு இன்னிங்ஸிலும் தனது பவுலிங் திறனை நிரூபித்திருக்கிறார் அக்சர்.
முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழத்திய அவர், இரண்டாது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை பறித்தார்.
இன்றைய போட்டியில் ரவி அஸ்வின் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் அஸ்வின், அக்சர் இணை, முறையே, நான்கு மற்றும் ஐந்து விக்கெட்டுகளை பறித்துள்ளது. இதன் மூலம் பிங்க் பால் டெஸ்ட் ஆட்டத்தில் 11 விக்கெட்டுகளை பறித்தவர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் அக்சர்.
அஸ்வின், இன்று பறித்த நான்கு விக்கெட்டுகளுடன் சேர்த்து டெஸ்ட் ஆட்டத்தில் 400 விக்கெட்டுகளை பறித்த வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையுடன் திகழ்கிறார்.
டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் மிகவும் குறைந்த ரன்களில் அவுட் ஆன நிலைக்கு இங்கிலாந்து தள்ளப்பட்டிருக்கிறது.
இந்த ஆட்டத்தைத் தொடர்ந்து மேலும் ஒரு ஆட்டத்தில் வென்றால் மட்டுமே இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிக்கு செல்ல தகுதி பெறும்.
ஏற்கெனவே இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து அணி களத்தில் உள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து வெற்ற பெற வேண்டுமானால், அடுத்து வரும் இரண்டு ஆட்டங்களிலும் இங்கிலாந்து வெற்றி பெற்றாக வேண்டும்.
இந்த தொடரின் நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் ஆட்டம் மார்ச் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. அது ரெட் பால் டெஸ்ட் ஆக அழைக்கப்படுகிறது.
இந்த ஆட்டத்தின் சிறந்த வீரராக அக்சர் படேல் அங்கீகரிக்கப்பட்டாலும் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி, இரு தரப்பு அணிகளும் பேட்டிங்கில் மேலும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டிருக்கிறார்.
இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், களத்தில் சரியாக இருந்தாலும் அங்குள்ள சூழலை தாங்கள் சரியாக பயன்படுத்தவில்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் என தெரிவித்தார்.
இந்திய வீரர் இஷாந்துக்கு இது 100ஆவது டெஸ்ட் ஆட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.