செமிகண்டக்டர் உற்பத்தியில் சீனாவுக்கு சவால் விடுவதற்காக சிங்கப்பூருடன் இணையும் இந்தியா

Prasanth Karthick

ஞாயிறு, 8 செப்டம்பர் 2024 (13:44 IST)

பிரதமர் நரேந்திர மோதி இரண்டு தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் பயணம் செய்வதன் கடைசி கட்டமாக செப்டம்பர் 4ஆம் தேதி சிங்கப்பூர் சென்றார்.

 

 

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்குடன், அந்த நாட்டின் பெரிய தொழிலதிபர்களையும் பிரதமர் மோதி சந்தித்தார்.

 

பிரதமரின் இந்தப் பயணத்தின்போது இந்தியா- சிங்கப்பூர் இடையே பல முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாயின. செமிகண்டக்டர் கிளஸ்டர்களின் வளர்ச்சி, வடிவமைப்பு, மற்றும் உற்பத்தி தொடர்பான ஒப்பந்தமும் இதில் அடங்கும். சிங்கப்பூர் பிரதமராகப் பதவியேற்ற பிறகு லாரன்ஸ் வோங்கை பிரதமர் மோதி சந்திப்பது இதுவே முதல்முறை.

 

அப்போது பிரதமர் மோதி, “ஒவ்வொரு வளரும் நாட்டுக்கும் சிங்கப்பூர் உத்வேகமாக உள்ளது. இந்தியாவில் பல சிங்கப்பூர்களை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம்,” என்றார்.

 

தற்போது, இந்தியாவுக்கும், அதன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் நாடுகளுக்குமான உறவுகள் நல்ல நிலையில் இல்லை. அதேநேரம், ஏசியான் (ASEAN) நாடுகளில் சீனா தனது செல்வாக்கைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியப் பெருங்கடலில் மாலத்தீவு அதிபர் முய்சுவின் அரசும் சீனாவின் பக்கம் சாய்ந்திருப்பதாகத் தெரிகிறது.

 

தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தோ-பிசிஃபிக் புவிசார் அரசியலில் இந்தியாவின் தற்போதைய நிலையைப் பார்க்கும்போது, 'ஆக்ட் ஈஸ்ட் பாலிசி'-யின் கீழ் பிரதமர் மோதியின் சிங்கப்பூர் பயணம் இந்தியாவுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது?

 

இந்தியாவின் முன்னாள் தூதரும், தென்கிழக்காசிய விவகாரங்களில் நிபுணருமான சுரேஷ் குமார் கோயல், மற்றும் பாங்காக்கில் உள்ள தம்மசாட் பல்கலைக்கழகத்தில் (ஜெர்மன்-தென்கிழக்கு ஆசிய பொதுக் கொள்கைகள் மற்றும் நல்லாட்சிக்கான சிறப்பு மையம்) மூத்த ஆராய்ச்சி உறுப்பினரான ராகுல் மிஷ்ரா ஆகியோரிடம் இது தொடர்பாக பிபிசி ஹிந்தி பேசியது.

 

இந்தியாவுக்கு சிங்கப்பூர் ஏன் முக்கியம்?

 

“கணினிமயமாக்கல், செயற்கை நுண்ணறிவு அல்லது செமிகண்டக்டர் (குறைக்கடத்தி) துறையில் தொழில்நுட்பம் மற்றும் முதலீடு இரண்டையும் கொண்டு வரக்கூடிய ஒரு கூட்டாளியை இந்தியா தேடுகிறது. இதற்கு சிங்கப்பூருடனான வர்த்தக உறவுகள் மிகவும் முக்கியமானவை. சிங்கப்பூர், ஏசியான் கூட்டமைப்பில் மிகப்பெரிய பொருளாதாரம். ஏசியான் நாடுகளுக்கு இடையிலான உள்வர்த்தகம் இந்த நாட்டின் மூலமே நடைபெறுகிறது," என்று சுரேஷ் குமார் கோயல் கூறுகிறார்.

 

ஏசியான் நாடுகளில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாக சிங்கப்பூர் உள்ளது. அதே நேரம், உலக அளவில் இந்தியாவின் ஆறாவது பெரிய வர்த்தக கூட்டாளியாகவும் அந்நாடு உள்ளது. முதலீட்டின் பார்வையிலும் சிங்கப்பூர் மிகவும் முக்கியமானது. 2023ஆம் ஆண்டில் இந்தியாவில் மிக அதிக நேரடி அந்நிய முதலீட்டைச் செய்த நாடாக சிங்கப்பூர் இருந்தது. 2000ஆம் ஆண்டு முதல் இப்போது வரை சிங்கப்பூர் இந்தியாவில் மொத்தம் 160 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது.

 

இந்தியாவின் ‘லுக் ஈஸ்ட்’ மற்றும் ‘ஆக்ட் ஈஸ்ட்’ கொள்கையில் சிங்கப்பூரின் பங்கு குறித்துப் பேசிய ராகுல் மிஷ்ரா, "1992இல் கிழக்கு நோக்கிய கொள்கையை நாம் தொடங்கினோம். இந்தியாவின் இந்தக் கொள்கையின் மையமாக ’சிங்கப்பூருடனான கூட்டு’ உள்ளது. சிங்கப்பூர் எப்போதுமே இந்தியாவுடன் நெடுநோக்குப் பார்வையுடன் கூடிய கொள்கையைக் கடைப்பிடிக்கிறது.

 

அவ்வப்போது இந்தியா சிங்கப்பூரின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இருக்க முடியாவிட்டாலும், இந்தியாவுடனான தன் உறவுகளில் விரிசல் ஏற்பட சிங்கப்பூர் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. 1992இல் அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் கிழக்கு நோக்கிய கொள்கையை அறிமுகப்படுத்தியபோது சிங்கப்பூர் 'இந்தியா ஃபீவர்' என்ற பெயரில் பிரசாரத்தைத் தொடங்கியது. அது இந்தியாவின் இந்தக் கொள்கையைப் பெரிதும் விரிவுபடுத்தியது," என்று குறிப்பிட்டார்.

 

"செயல் உத்தி விஷயங்கள், அல்லது பாதுகாப்பில், தனது பாதுகாப்புத் தளங்களை வேறு யாரையும் பயன்படுத்த அனுமதிப்பதில்லை என்ற கொள்கையை இந்தியா எப்போதும் பின்பற்றுகிறது. ஆனால் சிங்கப்பூர் இதற்கு விதிவிலக்கு. இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான வணிக மற்றும் செயல் உத்தி உறவுகள் எப்போதும் நெருக்கமாக உள்ளன,” என்கிறார் அவர்.

 

இந்தியாவை ஏசியான் நாடுகளுடன் இணைக்கிறது சிங்கப்பூர்

 

ஏசியான் (தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு) என்பது 10 தென்கிழக்கு ஆசிய நாடுகளின் குழு.

 

ஏசியானின் கண்ணோட்டத்தில் இந்தியா-சிங்கப்பூர் உறவுகள் குறித்து கருத்து தெரிவித்த சுரேஷ் குமார் கோயல், "ஆசியா பசிஃபிக் மற்றும் ஏசியான் நாடுகளில் சீனாவை யாரேனும் சமன்படுத்த முடியுமென்றால் அது இந்தியாதான் என்பது சிங்கப்பூருக்கு தெரியும். சீனா மீதான சார்பைக் குறைக்கும் விதமாக இப்பிராந்தியத்தில் இந்தியா தனது செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்று சிங்கப்பூர் விரும்புகிறது.

 

சிங்கப்பூரின் உதவியுடன் இந்தியா, ஏசியானின் சிறப்பு உச்சி மாநாட்டில் (கிழக்கு ஆசிய உச்சி மாநாடு) உறுப்பினரானது. ஆசியா பசிஃபிக் பகுதியில் சீனாவின் செல்வாக்கு மிக அதிகமாக உள்ளது. அந்த வகையில் சிங்கப்பூரின் ஆதரவு இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது,” என்றார்.

 

வர்த்தகம், கடல்சார் பாதுகாப்பு, மற்றும் தொலைத்தொடர்பு ஆகியவற்றில் சிங்கப்பூர், ஏசியானில் இந்தியாவிற்கான முக்கிய வர்த்தக, மற்றும் செயல் உத்தி நுழைவாயில் என்று சுரேஷ் குமார் கோயல் கருதுகிறார்.

 

சீனா, ஏசியான் நாடுகளில் நிறைய முதலீடு செய்துள்ளது. சீனாவிற்கும் ஏசியான் நாடுகளுக்கும் இடையே 722 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 60 லட்சம் கோடி ரூபாய்) மதிப்பிலான பொருட்களின் வர்த்தகம் உள்ளது. இதில் இந்தியா மிகவும் பின் தங்கியுள்ளது. ஆசியான் நாடுகளுடன் இந்தியாவின் மொத்த வர்த்தகம் 131 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 11 லட்சம் கோடி ரூபாய்) மட்டுமே. இது இந்தியாவுக்கு பெரும் கவலையாக உள்ளது.

 

"உண்மையில் பிரச்னை என்னவென்றால், 2008-09இல் இந்தியா-ஏசியான் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடந்தபோது நாம் பொருட்களில் மட்டுமே கவனம் செலுத்தினோம். நமது தனித்துவமான திறனாக இருந்த சேவைத் துறையை விட்டுவிட்டோம். இந்த இடைவெளியைக் குறைக்க நாம் சேவைத் துறையில் கவனம் செலுத்த வேண்டும். இந்த நிலையில் இந்தியா-ஏசியான் வர்த்தக உறவுகள் விவகாரத்தில் ஆய்வுக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கை அடுத்த ஆண்டுக்குள் வரும்,” என்று ராகுல் மிஷ்ரா குறிப்பிட்டார்.

 

“சீனாவை பொறுத்தவரை அவர்கள் தங்கள் பொருட்களை முடிந்தவரை பல நாடுகளில் கொட்ட விரும்புகிறார்கள். இந்தியா உட்படப் பல நாடுகள் இதனால் கவலையில் உள்ளன. சர்வதேச ஏற்றுமதியின் அளவுருக்கள் மற்றும் தரங்களுக்கு ஏற்ப நமது திறனை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.

 

தென் சீனக் கடல், கடல்சார் பாதுகாப்பு, மற்றும் சிங்கப்பூர்

 

கிழக்கு-மேற்கு வர்த்தகப் பாதைகளின் நடுவில் சிங்கப்பூர் அமைந்துள்ளது. இந்தியாவின் கடல்சார் பாதுகாப்புக் கொள்கையின் கீழ் இது மிகவும் முக்கியமானது. இந்தியாவின் மொத்த வர்த்தகப் பொருட்களில் குறைந்தது 55% தென் சீனக் கடல் வழியாகச் செல்கிறது. இந்தியப் பெருங்கடலில் 'ஸ்ட்ரிங் ஆஃப் பெர்ல்ஸ்' என்ற கொள்கையின் கீழ் சீனா தொடர்ந்து தனது கடற்படை இருப்பை அதிகரித்து வருகிறது.

 

தென் சீனக் கடல் மீது இந்தியாவின் வளர்ந்து வரும் ஆர்வம் குறித்துப் பேசிய ராகுல், "இந்தியாவின் வர்த்தகத்தில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு தென் சீனக் கடல் வழியாகத்தான் நடைபெறுகிறது. கடல்சார் பாதுகாப்பு முதல் மனிதக் கடத்தல் வரை கடல்சார் செயல் உத்தி விவகாரங்களில் தென் சீனக் கடல் தொடர்பாக இந்தியா அக்கறை கொண்டுள்ளது. கூடவே மலாக்கா ஜலசந்தியில் தன் கடற்படை இருப்பதை மிக முக்கியமானதாகக் கருதுகிறது,” என்றார்.

 

சீனாவின் தலையீடு இல்லாத சுதந்திரமான கடல் பாதைகளை உருவாக்குவது இந்தியாவுக்கு முக்கியம்.

 

“தற்போது சீனா ‘ஏ2-ஏடி’ (A2-AD - ஆண்டி ஆக்சிஸ் ஏரியா டினயல்) கொள்கையைக் கடைபிடிக்கிறது. தென் சீனக் கடல் வழியாக யாரேனும் சென்றால் அதை சீனா ஆட்சேபிக்கிறது. எனவே இந்தியாவும் பிற நாடுகளும் ’சுதந்திரமான கடல் போக்குவரத்து’ பற்றிப் பேசுகின்றன. சமீப காலமாக தென் சீனக் கடல் தொடர்பாக சிங்கப்பூர் வெளிப்படையாகக் குரல் எழுப்பி வருகிறது. இந்தப் பிராந்தியத்தில் அண்டை நாடுகள் மற்றும் ஆசியான் நாடுகளுக்கு சீனா பிரச்னைகளை உருவாக்குவது குறித்து சிங்கப்பூர் அதிருப்தி அடைந்துள்ளது. இங்கு இந்தியாவின் இருப்பு வேண்டும் என்று சிங்கப்பூர் விரும்புகிறது. ஆனால் அதேநேரம் முற்றுகை அல்லது போர்ச் சூழலை அது விரும்பவில்லை,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

தென் சீனக் கடலில் இந்தியா-சிங்கப்பூர் உறவுகளின் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்ட சுரேஷ் குமார் கோயல், "இந்தியா குவாட் அமைப்பின் உறுப்பினர். குவாட் குழு, இந்தோ-பசிஃபிக் பகுதியில் சுதந்திரமான போக்குவரத்தை (கடல் பாதைகளின் சுதந்திரம்) விரும்புகிறது. அதற்குக் காரணம் நமது பெரும்பாலான வர்த்தகம் இந்தோ-பசிஃபிக் பகுதி வழியாகவே நடக்கிறது. வர்த்தகம் மற்றும் எரிசக்திப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டால், இந்தப் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரம் நமக்கு மிகவும் முக்கியமானது. தென் சீனக் கடலில் என்ன நடந்தாலும் அது இந்தப் பிராந்தியம் மற்றும் நம் மீது நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, இந்தோ பசிஃபிக் பகுதியில் இந்தியா தனது பங்கை ஆற்ற வேண்டும். இதற்கு சிங்கப்பூரின் ஆதரவு தேவை," என்று விளக்கினார்.

 

இந்தியா செமிகண்டக்டர் மீது கவனம் செலுத்துகிறதா?

 

இந்தியாவில் செமிகண்டக்டர்களுக்கான தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு புதிய தொழில்நுட்பத்திலும் இது மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. மொபைல் போன், விண்கலம், விசைப்பலகை என எந்த மின்னணு சாதனமாக இருந்தாலும் அவற்றில் செமிகண்டக்டர் சிப்கள் பயன்படுத்தப்படுகின்றன.

 

இந்தத் துறையில் உலகம் ஒரு சில நாடுகளை மட்டுமே சார்ந்துள்ளது. இதன் காரணமாக கோவிட் காலத்தில் அதன் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாகப் பெரும் இழப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. தற்போது இந்தியா தனது செமிகண்டக்டர் தேவையின் பெருமளவை இறக்குமதி மூலமாகவே பூர்த்தி செய்கிறது.

 

சிங்கப்பூருடனான நல்லுறவு இந்த விஷயத்தில் இந்தியாவுக்கு உதவிகரமாக இருக்கும் என்று ராகுல் கருதுகிறார். “வரும் காலங்களில் செமிகண்டக்டர் துறையில் பெரிய சக்தியாக உருவெடுக்க இந்தியா கடுமையாக முயற்சி செய்து வருகிறது. இது தொடர்பாக மலேசியா உள்ளிட்ட பிற நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலையில் சிங்கப்பூருடன் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா- சிங்கப்பூர் கூட்டறிக்கையைப் பார்த்தால், சமகால விஷயங்கள் மற்றும் நீண்ட கால இலக்குகள் குறித்து இரு நாடுகளுக்கும் இடையே உள்ள புரிந்துணர்வு தெளிவாகப் புலப்படும்,” என்றார் அவர்.

 

செப்டம்பர் 5ஆம் தேதி, சிங்கப்பூரின் உயர்மட்ட வர்த்தகத் தலைவர்களைச் சந்தித்த பிரதமர் மோதி, இந்தியாவின் செமிகண்டக்டர் துறையில் முதலீடு செய்யுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

 

“செமிகண்டக்டர் துறையில் நாங்கள் மிக வேகமாக முன்னேறி வருகிறோம். இத்துறையில் முழுமையான உள்கட்டமைப்பை உருவாக்குவோம். இந்தியாவின் இரண்டாம் அடுக்கு (tier-2) மற்றும் மூன்றாம் அடுக்கு (tier-3) நகரங்களில்கூட ஸ்டார்ட் அப்கள் இப்போது வளர்ந்து வருகின்றன," என்று பிரதமர் மோதி குறிப்பிட்டார்.

 

செமிகண்டக்டர் ஆற்றல் மையம்
 

உலகளாவிய செமிகண்டக்டர் துறையில் தற்போது பல முக்கிய நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. இதில் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆனால் விநியோகச் சங்கிலியில் சீனாவை சார்ந்திருப்பது பல நாடுகளுக்குக் கவலையாக உள்ளது.

 

அத்தகைய சூழ்நிலையில் 'சீனா+1' கொள்கையின் கீழ் ஒரு மாற்று சக்தியின் பங்கு முக்கியமானது. அந்த இடத்தைப் பிடிக்க இந்தியா விரும்புகிறது.

 

இந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோதி, ”செமிகண்டக்டர் உற்பத்தியில் உலகளாவிய மையமாக மாறுவதை இந்தியா தனது நோக்கமாகக் கொண்டுள்ளது,” என்றார்.

 

செமிகண்டக்டர் துறையில் இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்க இந்தியா தொடர்ந்து முயன்று வருகிறது. அத்தகைய சூழ்நிலையில் இந்தியாவுக்கான சாத்தியக்கூறுகள் நிறைந்ததாக சிங்கப்பூர் உள்ளது.

 

"செமிகண்டக்டர் தொழிலுக்கு மூன்று விஷயங்கள் மிகவும் முக்கியம் - தொழில்நுட்பக் கட்டமைப்பு மற்றும் நிபுணர்கள், அரிய கனிமங்கள், மற்றும் தொழிலாளர் சக்தி. அவர்கள் விரும்பினால் பெரிய அளவில் செமிகண்டக்டர் சிப்களை உற்பத்தி செய்யக்கூடிய இரண்டு நாடுகள் இந்தியாவும் சீனாவும் மட்டுமே. நம்மிடம் தொழிலாளர் சக்தி உள்ளது. அரிய கனிமங்களுக்கு மற்ற நாடுகளின் உதவியைப் பெற வேண்டியிருக்கலாம். மேலும் தொழில்நுட்பத்தில் சிங்கப்பூர் நமக்குப் பெரிய ஆதரவாக இருக்கும்," என்று ராகுல் மிஷ்ரா குறிப்பிட்டார்.

 

செமிகண்டக்டர் துறையில் சிங்கப்பூரின் ஆதரவை இந்தியா விரும்புவது ஏன்?

 

செமிகண்டக்டர் துறையானது சிங்கப்பூரின் பொருளாதாரத்தில் ஒரு முக்கியப் பகுதி. செமிகண்டக்டர் துறையானது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8% பங்களிப்பை அளிக்கிறது. சிங்கப்பூர் உலகளாவிய செமிகண்டக்டர் உற்பத்தியில் 10 சதவீதமும், செமிகண்டக்டர் உபகரணங்களின் உற்பத்தியில் 20 சதவீதமும் பங்களிப்பதாக சிங்கப்பூர் பொருளாதார மேம்பாட்டு வாரியம் தெரிவிக்கிறது.

 

சிங்கப்பூரின் செமிகண்டக்டர் துறை மிகவும் முன்னேறியுள்ளது. சிங்கப்பூரின் உதவியோடு, புதிய தொழில்நுட்பம் மூலம் இந்தியா தனது உற்பத்தித் திறனை அதிகரிக்க விரும்புகிறது. தொழில்நுட்பத்தின் உதவியுடன் உலக சந்தையில் தன்னை முன்னெடுத்துச் செல்லக்கூடிய ஓர் உற்பத்திக் கட்டமைப்பை உருவாக்க இந்தியா விரும்புகிறது.

 

இருப்பினும் சிங்கப்பூரும் சில சவால்களை எதிர்கொண்டுள்ளது. சிங்கப்பூர் மிகவும் சிறிய நாடு, அதன் நிலவியல் பரப்பளவு மற்றும் மக்கள் தொகை மிகவும் குறைவு. இங்கு உற்பத்திச் செலவு அதிகம் என்பதால் பல நிறுவனங்கள் மலேசியா மற்றும் தாய்லாந்திற்கு செல்லத் தொடங்கியுள்ளன.

 

"செமிகண்டக்டர் துறையில் உலக அளவில் முன்னணியில் இருக்க சிங்கப்பூர் விரும்புகிறது. ஆனால் அதற்கான வளங்கள் அதனிடம் இல்லை. சிங்கப்பூர் 'டீகப்ளிங்' கொள்கையைப் பின்பற்ற விரும்புகிறது. சீனாவுடன் நல்லுறவைப் பராமரிக்க விரும்பும் அதேநேரம் தனது வர்த்தகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அது வேறு கூட்டாளிகளையும் விரும்புகிறது. சீனா மீதான சார்பைக் குறைக்கும் ஒரு மாற்று வழியை அது தேடுகிறது,” என்றார் ராகுல் மிஷ்ரா.

 

”சிங்கப்பூருக்கு இந்தியா ஒரு நம்பகமான கூட்டாளியாக இருந்து வருகிறது. தனக்கு உதவும் திறன் இந்தியாவுக்கு உள்ளது என்பது சிங்கப்பூருக்கு தெரியும். உலகளாவிய செமிகண்டக்டர் துறையில் தங்கள் இருப்பை நிலைநாட்ட இரு நாடுகளுமே விரும்புகின்றன. இரு நாடுகளின் இலக்குகளும் ஒன்றையொன்று ஆதரிப்பதாகவே உள்ளன. இந்தத் திசையில் இந்தியா எவ்வளவு விரைவாகவும் தீவிரமாகவும் செயல்படும் என்பதுதான் இப்போதைய கேள்வி," என்று அவர் மேலும் கூறினார்.

 

- இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்