இந்தியாவில் கடந்த ஆண்டு ரூ.3.4 லட்சம் கோடிக்கு தங்கம் வாங்கிய மக்கள்: 81 சதவீதம் அதிகரிப்பு

திங்கள், 31 ஜனவரி 2022 (14:08 IST)
கோவிட் தொற்று, பொருளாதார மந்தநிலை இருந்த நிலையிலும், 2021ல் இந்தியாவில் ரூ.3,40,860 பெறுமானமுள்ள 797.3 டன் தங்கம் வாங்கப்பட்டது. முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது இது மதிப்பு அடிப்படையில் 81 சதவீதம் உயர்வு ஆகும் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.


உலக தங்க கவுன்சில் தரவுகளின்படி, முந்தைய ஆண்டில் ரூ.1,88,280 கோடி மதிப்புள்ள 446.4 டன் தங்கம் வாங்கப்பட்டது.

2021-22 நிதியாண்டுக்கான இந்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரியை 12.5 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாக அரசாங்கம் குறைத்தது. இதன் மூலம் மக்கள் அதிகாரபூர்வ வழிகளில் அதிகமான தங்கத்தை இறக்குமதி செய்தனர். இந்தியாவின் தங்கத் தேவை பெரும்பாலும் இறக்குமதி மூலமாகவே நிறைவேற்றப்படுகிறது.

2021ல் இந்தியா 924.6 டன் தங்கத்தை இறக்குமதி செய்தது. இதன் மதிப்பு ரூ. 4.28 லட்சம் கோடி. 2020ல் 349.5 டன் தங்கம் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டது. இதனோடு ஒப்பிட்டால், தங்க இறக்குமதி 2021ல் 165 சதவீதம் அதிகரித்துள்ளது. இது நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பை பெருமளவில் உறிஞ்சிக்கொண்டது. 2021ல் இந்தியாவில் மக்கள் வாங்கிய மொத்த தங்கத்தில், 610.9 டன் தங்கம் (மதிப்பு ரூ. 2,61,140 கோடி) நகைகளாக வாங்கப்பட்டது. மதிப்பு அடிப்படையில் பார்த்தால் முந்தைய ஆண்டைவிட இது 96 சதவீதம் அதிகம். முதலீட்டுக்காக 186.5 டன் தங்கம் 2021ல் வாங்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.79,720 கோடி. மதிப்பு அடிப்படையில் இது முந்தைய ஆண்டைவிட 45 சதவீதம் மட்டுமே அதிகம்.

வேட்பாளர் பட்டியல்: பாஜக அலுவலகங்களைத் தாக்கிய அதிருப்தியாளர்கள்

சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள மணிப்பூர் மாநிலத்தில் பாஜக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில், சீட்டு கிடைக்காத அதிருப்தியாளர்கள் அந்தக் கட்சியின் அலுவலகங்களைத் தாக்கினர் என்று, 'தி இந்து' ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

60 வேட்பாளர்களின் பட்டியலை இந்த மாநில பாஜக வெளியிட்டது. டெல்லியில் இருந்து இந்தப் பட்டியலை வெளியிட்ட மணிப்பூர் மாநிலத்துக்கான பாஜக பொறுப்பாளர் பூபேந்தர் யாதவ் தேர்தலில் பாஜக 3ல் 2 பங்கு பெரும்பான்மை பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் என்று கூறியிருக்கிறார்.

காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் இருந்து பாஜகவுக்கு தாவி வந்த ஒரு டஜனுக்கு மேற்பட்டவர்களுக்கு பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்ட நிலையில், மூன்று எம்.எல்.ஏ.க்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலம் கட்சியில் இருந்தவர்களுக்குதான் பெரும்பாலும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது என்று அவர் கூறியிருக்கிறார். ஆனால், வேட்பாளர் பட்டியலை ஆய்வு செய்தபோது இப்போது அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் 11 பேர் கடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் என்று தெரியவருகிறது.

மணிப்பூரில் பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3-ம் தேதி வாக்குப் பதிவு நடக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது அந்த செய்தி.

74 மருத்துவ சீட்டுகளைப் பிடித்த சேலம் மாவட்ட அரசுப் பள்ளி மாணவர்கள்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் 74 பேர் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புக்கு இடம் பிடித்துள்ளனர் என்று தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களும் இடம் பெற வேண்டும் என்ற தொலைநோக்கில் அவர்களுக்கு கடந்த ஆண்டு 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை அரசு வழங்கியது. அதன்படி கடந்த ஆண்டில் 436 மாணவர்களுக்கு இடம் கிடைத்தது.

புதிதாக திறக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளில் உள்ள இடங்கள் மூலம் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலான இடங்கள் கிடைத்திருக்கின்றன. அந்த வகையில் 437 எம்.பி.பி.எஸ்., 107 பி.டி.எஸ். இடங்கள் என மொத்தம் 544 இடங்களுக்கு கலந்தாய்வு நடந்தது.

அதில் 541 இடங்கள் நிரம்பியநிலையில், மீதமுள்ள 3 இடங்கள் 2-ம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும் என்று மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை குழு தெரிவித்துள்ளது. புள்ளிவிவரங்களின்படி, நிரப்பப்பட்டு இருக்கும் 541 இடங்களில் அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 74 மாணவர்கள் இடம்பிடித்து, அந்த மாவட்டத்துக்கு முதலிடத்தை பெற்றுத் தந்திருக்கிறார்கள். அதில் 51 இடங்களை அரசு மருத்துவ கல்லூரிகளில் தேர்வு செய்திருக்கின்றனர்.

அதற்கடுத்ததாக 33 இடங்களை தேர்வு செய்த தர்மபுரி மாவட்டம் 2-ம் இடத்தைப் பெற்றுள்ளது. இதில் அரசு மருத்துவ கல்லூரிகளில் 20 இடங்களையும், தனியார் சுயநிதி கல்லூரிகளில் 13 இடங்களையும் மாணவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். 31 இடங்களை பிடித்த புதுக்கோட்டை மாவட்டம் 3-வது இடத்தில் உள்ளது.

அடுத்தபடியாக, 26 இடங்களை பெற்ற திருவள்ளூர் மாவட்டம், 24 இடங்களை தேர்வு செய்த திருவண்ணாமலை மாவட்டம், தலா 20 இடங்களை பிடித்த திருப்பூர், காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர உள்ளனர். இதில் குறைந்தபட்சமாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே ஒரு அரசு பள்ளி மாணவருக்கு மட்டுமே 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துள்ளது என்று கூறுகிறது தினத்தந்தி செய்தி.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்