தாலிபன் ஆட்சியில் அதிகரித்துள்ள போதைப்பொருள் வர்த்தகம்

திங்கள், 13 டிசம்பர் 2021 (10:18 IST)
தென் ஆப்கானிஸ்தானின் ஊரகப்பகுதியில் அமைந்துள்ள ஓர் சிறிய அறையில் குவிக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பைகளில் போதைப் பொருட்கள் மின்னுகின்றன.
 
அவை, ஏற்றுமதி செய்யத்தக்க தரத்திலான மெத்தாம்பெட்டமின் (methamphetamine). அவை ஆஸ்திரேலியா வரையுள்ள நாடுகளுக்குக் கடத்தப்படும். அதன்பின்னர், இந்த அறையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள 100 கிலோகிராம் மதிப்பிலான மெத்தாம்பெட்டமின், சுமார் 2 மில்லியன் யூரோ ($2.6 மில்லியன்) மதிப்புடையது.
அறைக்கு வெளியே, இரண்டு பேரல்களிலிருந்து புகை வெளியேறுகிறது. அதில் புதிய மெத் போதைப்பொருள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
 
ஆப்கானிஸ்தானில் போதைப்பொருள் வர்த்தகம் மிகப்பெரியது. தாலிபன் ஆட்சியில் அது இன்னும் அதிகரித்துள்ளது. ஹெராயின் போதைப்பொருளுடன் பல காலமாக தொடர்பு கொண்டுள்ளது ஆப்கானிஸ்தான். ஆனால், சமீப ஆண்டுகளாக, மற்றொரு ஆபத்து மிகுந்த அடிமைப்படுத்தும் கிரிஸ்டல் மெத் (crystal meth) எனப்படும் போதைப்பொருளை உற்பத்தி செய்யும் முக்கிய உற்பத்தியாளராக ஆப்கானிஸ்தான் வளர்ந்துள்ளது.
இந்த போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய, தன் அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத ஒருவர் கூறுகையில், ஆப்கானிஸ்தானின் தென்மேற்கில் அமைந்துள்ள நகரத்தில், கிட்டத்தட்ட 500 தற்காலிக ஆலைகள் மூலம், தினந்தோறும் சுமார் 3,000 கிலோகிராம் கிரிஸ்டல் மெத் தயாரிக்கப்படுகிறது.
 
இதன் உற்பத்தியில் முக்கிய மூலப்பொருளான எபெட்ரினைத் (ephedrine), தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும், உள்ளூரில் ஓமன் (oman) என அழைக்கப்படும் ஒரு பொதுவான காட்டு மூலிகை கண்டறியப்பட்டதிலிருந்து, மெத் உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கியது.
 
ஆப்கானிஸ்தான் மெத் வர்த்தகத்தின் மையப்புள்ளியாக செயல்படும், பாலைவனத்திலிருந்து மிக நீண்ட தொலைவில் அமைந்துள்ள சந்தையில் குவியல்குவியலாக, முன்னெப்போதும் காணாத அளவுக்கு இந்த மூலிகை விற்பனை செய்யப்படுகிறது.
 
முன்பு, எபெட்ரா விற்பனை மீது வரிவிதிக்க தாலிபன் முடிவு செய்தனர். ஆனால், சமீபத்தில் பரவலாக விளம்பரப்படுத்தப்படாத ஒரு ஆணையில், அதன் சாகுபடிக்குத் தடை விதித்தனர்.
 
அந்த சமயத்தில், மெத் உற்பத்தி ஆலைகள் தொடர்ந்து செயல்பட அவர்கள் அனுமதித்தனர். இந்த போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஆப்கானியர் ஒருவர் நம்மிடம் கூறுகையில், எபெட்ராவைத் தடை செய்ததன் காரணமாக, எதிர்காலத்தில் உற்பத்தி செய்ய ஆலைகளில் மூலிகைகள் இருந்தபோதிலும், மெத் போதைப்பொருளின் மொத்தவிலை ஒரே இரவில் இரட்டிப்பாகியது என்பதுதான் நகைப்புக்குரியது.
 
ஆப்கானிஸ்தான் போதைப்பொருள் வர்த்தகம் குறித்த முன்னணி நிபுணர் டாக்டர் டேவிட் மேன்ஸ்பீல்ட், போதைப்பொருள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஆலைகளை அடையாளம் காணும் செயற்கைக்கோள் படங்களின் உதவியுடன், மெத் உற்பத்தியின் வளர்ச்சியைக் கண்காணித்துள்ளார்.
 
எபெட்ராவைத் தயாரிப்பதற்கான மூலிகை முழுமையாக சேகரிக்கப்பட்ட சமயத்தில், அதன் மீது தடை விதிக்கப்பட்டதால், "அடுத்தாண்டு ஜூலை மாதம் எபெட்ரா மீண்டும் அறுவடைக்கு வரும் வரை, தடை விதிக்கப்பட்டதன் உண்மையான விளைவை உணர முடியாது" என்றார்.''
 
ஆப்கானிஸ்தானில் உற்பத்தி செய்யப்படும் மெத்தின் அளவு, அந்நாட்டில் அதிகளவில் விற்பனை செய்யப்படும் மற்ற போதைப்பொருளான ஹெராயினின் அளவை விட அதிகமாக இருக்கும் என, டாக்டர் மேன்ஸ்பீல்ட் நம்புகிறார்.
 
ஆப்கானிஸ்தானின் பாப்பி செடிகளிலிருந்து அறுவடை செய்யப்படும் ஓபியம் போதைப்பொருள், உலகளவில் உற்பத்தி செய்யப்படும் போதைப்பொருளின் அளவில் 80 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
 
வரும் வாரங்களில், ஆப்கானிஸ்தான் முழுவதிலும் உள்ள விவசாயிகள், தங்கள் நிலங்களை தயார்செய்து, ஓபியம் விதைகளை விதைக்கும் வேலைகளில் பரபரப்பாக காணப்படுவார்கள். "இது ஆபத்தானது என எங்களுக்குத் தெரியும்," என, கந்தஹார் நகருக்கு வெளியே உள்ள நிலத்தை சுத்தப்படுத்திக்கொண்டே கூறுகிறார், முகமது கனி. " ஆனால், வேறு எதையும் விளைவிப்பது வருமானத்தைத் தராது" என்கிறார்.
 
தாலிபன்கள் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் சென்றபிறகு, அந்நாட்டுக்கான சர்வதேச ஆதரவு விலக்கிக்கொள்ளப்பட்டதால், ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் சரிவடைந்துள்ளது. அதனால், பெரும்பாலான விவசாயிகளுக்கு ஓபியமே பாதுகாப்பான தேர்வாக உள்ளது. நிலத்தடி நீர்மட்டம் சரிவு, அதிகரிக்கும் வறட்சி ஆகியவற்றின் காரணமாகவும் இந்நிலையை நோக்கித் தள்ளப்படுவதாக அவர்கள் கூறுகிறார்கள்.
 
"நாங்கள் கிணறு தோண்ட வேண்டும். வெண்டைக்காயையோ அல்லது தக்காளியையோ பயிரிட்டால், கிணறு தோண்டுவதற்கான செலவில் பாதியைக் கூட எங்களால் ஈட்ட முடியாது," என்கிறார் கானி.
 
ஓபியத்தை விதைப்பதற்கு தாலிபன்கள் தடை செய்யலாம் என்ற யூகம், அதன் விலை அதிகரிப்பிற்கு வழிவகுத்தது. விலை உயர்வின் காரணமாக, அதனை அதிகம் பயிரிட ஊக்குவிக்கப்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
 
தற்போது, இந்த வணிகம் செழித்து வளர்கிறது. ஊழல்மிக்க அரசு அதிகாரிகளுக்கு பணத்தையும், அடர்த்தியான கருப்பு பேஸ்ட் வடிவத்தில் போதைப்பொருள் அடங்கிய பைகளை ரகசியமாகவும் விற்ற ஓபியம் விற்பனையாளர்கள், இப்போது சந்தைகளில் இதற்காக கடைகளை அமைத்துள்ளனர்.
 
"இந்த நாட்டை தாலிபன்கள் சுதந்திரமாக்கியுள்ளதால், நாங்கள் மொத்தமாக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளோம்," என சிரித்துக்கொண்டே கூறுகிறார், மொத்த விற்பனையாளர் ஒருவர்.
 
இருப்பினும், தாலிபன்கள் இந்த வணிகம் குறித்து இன்னும் உணர்வு மிக்கவர்களாகவே உள்ளனர். ஹெல்மெண்ட் மாகாணத்தில், பெரிய, இழிந்த நிலையில் உள்ள ஓபிய சந்தை குறித்து பிபிசி ஒளிப்பதிவு செய்வதற்கு, அது "தடை செய்யப்பட்ட பகுதி" எனக்கூறி தடுத்துவிட்டனர்.
 
சில தாலிபன் உறுப்பினர்கள், போதைப்பொருள் வர்த்தகம் மூலம் ஆதாயம் பெறுவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கள் காரணமாகவே, ஊடகத்தை அனுமதிக்கத் தடை விதிக்கப்பட்டதா என கேள்வியெழுப்பியபோது, மாகாண கலாச்சார ஆணையத்தின் தலைவர் ஹபீஸ் ரஷீத் பேட்டியை திடீரென முடித்துக்கொண்டார். காணொளி பதிவுகளை அழிக்காவிட்டால், கேமராவை அடித்து நொறுக்கிவிடுவோம் எனவும் அச்சுறுத்தினார்.
 
கந்தஹாருக்கு அருகாமையில் உள்ள ஓபியம் சந்தையை படம்பிடிக்க எங்களுக்கு ஆரம்பத்தில் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், அங்கு சென்றவுடன், இது சாத்தியமில்லை என எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
 
காபூலின் தாலிபன் செய்தித்தொடர்பாளர் பிலால் கரிமி பிபிசியிடம் கூறுகையில், "விவசாயிகளுக்கு மாற்றைக் கண்டறிவது குறித்து முயற்சித்து வருகிறோம். அவர்களுக்கு வேறு எதையும் அளிக்காமல், அவர்களிடமிருந்து இதை எடுக்க முடியாது," என தெரிவித்தார்.
 
தாலிபன்கள் முதன்முதலில் ஆட்சியில் இருந்தபோது, ஓபியத்தைத் தடை செய்தனர். ஆனால், அதன்பின் அவர்கள் கிளர்ச்சியாளர்களாக இருந்தபோது, அதன்மீதான வரி, அவர்களின் வருவாய் ஆதாரமாக இருந்தது. எனினும், இதனை அவர்கள் பொதுவெளியில் மறைக்கின்றனர்.
 
தாலிபன்கள் விரும்பினால், போதைப்பொருள் மீதான தடையை மீண்டும் திறம்பட செயல்படுத்த முடியும் என, சில வணிகர்கள் தெரிவிக்கின்றனர். மற்றவர்கள் இதனை சந்தேகிக்கின்றனர்.
 
"ஓபியம் மூலம் அவர்கள் நினைத்ததை சாதித்துவிட்டார்கள்," என, விவசாயி ஒருவர் கோபத்துடன் கூறுகிறார்.
 
"சர்வதேச சமூகம் ஆப்கன் மக்களுக்கு உதவி செய்யாத வரை, ஓபியத்தை அவர்கள் தடை செய்ய நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இல்லையென்றால், நாங்கள் பசியுடன் கிடப்போம், எங்களின் குடும்பத்தை எங்களால் கவனிக்க இயலாது."
 
உணவு மற்றும் விவசாய பொருட்களின் விலை உயர்வால் ஏற்படும் பொருளாதார நெருக்கடி, விவசாயிகளும், போதைப்பொருள் தயாரிக்கும் ஆலை உரிமையாளர்களும், தங்கள் வருமானத்தைத் தொடர்ந்து பராமரிக்க, போதைப்பொருட்களை அதிகளவில் உற்பத்தி செய்ய வழிவகுக்கும் என, டாக்டர் மேன்ஸ்பீல்ட் எச்சரிக்கிறார்.
 
ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில், போதைப் பொருள் வணிகம், உள்நாட்டுப் பொருளாதாரத்துடன் பிண்ணிப்பிணைந்துள்ளது.
 
ஹெல்மண்டில் நெடுந்தொலைவில் அமைந்துள்ள கிராமங்களின் தொகுப்பான கேண்டம் ரெஸ்ஸுக்கு கரடுமுரடான பாதையைக் கடந்தே செல்ல முடியும். ஆனால், இதுதான் சர்வதேச ஹெராயின் வர்த்தகத்தின் மையமாகும்.
 
மேலும், இங்கு அதிகளவிலான சந்தைக் கடைகள் ஓபியம் விற்பனைக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. ஹெராயின் தயாரிப்பில், 60-70 பேரைக் கொண்டு இயங்கும் பல்வேறு ஆலைகள் இங்குள்ளன. இங்கிருந்து போதைப்பொருட்கள் பாகிஸ்தான் மற்றும் ஈரானுக்கும், மேற்கு திசையில் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட உலகின் மற்ற நாடுகளுக்கும் கடத்தப்படுகின்றன.
 
உள்ளூரைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், ஏற்றுமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் ஹெராயின், பாகிஸ்தான் பண மதிப்பீட்டில் 210,000 ரூபாய் (900 பவுண்ட்ஸ்; 1,190 டாலர்கள்) என்ற அளவுக்கு விற்பனை செய்யப்படுகிறது என தெரிவித்தார்.
 
பிரிட்டனைச் சேர்ந்த முன்னாள் போதைப்பொருள் கடத்தல்காரர் பிபிசியிடம் கூறுகையில், ஒரு கிலோகிராம் போதைப்பொருள், பல முகவர்களைக் கடந்து பிரிட்டனை வந்தடையுபோது, அதன் மதிப்பு சுமார் 66,000 டாலராக இருக்கும்.
 
இந்த லாபத்தின் பெரும்பகுதி, போதைப்பொருட்களை சர்வதேச அளவில் கடத்துபவர்களால் ஈட்டப்படுகிறது. ஆனால், தாலிபன்கள் போதைப்பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் மீது தடை விதிக்கின்றனர்.
 
தாலிபன்கள் போதைப்பொருட்கள் மூலம் ஈட்டிய வருவாய், பெரும்பாலும் மிகைப்படுத்தப்படுவதாகவும், அவை மற்ற வருவாய் ஆதாரங்களைவிட குறைவான முக்கியத்துவம் வாய்ந்தவை எனவும் மேன்ஸ்பீல்ட் தெரிவித்தார். 2020-ம் ஆண்டில் போதைப்பொருள் உற்பத்தி வரி மூலம் தங்களுக்குத் தேவையான பணத்தை, 35 மில்லியன் டாலர்களை தாலிபன்கள் பெற்றதாக அவர் மதிப்பிட்டுள்ளார்.
 
"முதல்முறை தாலிபன்கள் ஆட்சிக்கு வந்தபோது, போதைப்பொருட்கள் மீது தடை விதிக்க அவர்களுக்கு 6 ஆண்டுகளாகின. அதுவும் அப்போது, ஓபியத்திற்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டது," என கூறுகிறார்.
 
ஆப்கானிய பொருளாதாரத்தின் நிலையைக் கருத்தில் கொண்டு, இப்போது அவ்வாறு செய்வது, முன்பு தாலிபன்களுக்கு ஆதரவை வழங்கிய ஒரு பகுதியை தண்டிப்பதாக பார்க்கப்படும் என மேன்ஸ்பீல்ட் கூறுகிறார்.
 
தாலிபன் செய்தித்தொடர்பாளர் பிலால் கரிமி பிபிசியிடம் கூறுகையில், போதைப்பொருள் உற்பத்தியை ஒழிப்பது, ஆப்கானிஸ்தானுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் உதவி செய்வதாக அமையும் என தெரிவித்தார். "எனவே, உலகமும் உதவ வேண்டும்". என்கிறார்.
 
ஆப்கானிஸ்தானின் போதைப்பொருள் வணிகம் ஏற்றுமதியை மட்டும் சார்ந்தது அல்ல. அது ஆப்கன் மக்கள் மீது அழிவுகரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாதல் நிகழ்ந்துள்ளது.
 
தலைநகர் காபூலுக்கு வெளியில் அமைந்துள்ள பரபரப்பான சாலையின் ஓரத்தில் நூற்றுக்கணக்கானோர் சிறுசிறு குழுக்களாக பிரிந்து, கிரிஸ்டல் மெத் மற்றும் ஹெராயின்களை புகைக்கின்றனர்.
 
"போதைப்பொருட்கள் ஆப்கானிஸ்தானில் தயாரிக்கப்படுகின்றன. எனவே, அவை குறைந்த விலையில் கிடைக்கும்", என்கிறார் ஒருவர். "முன்பு, அவை இரானிலிருந்து வரும். முன்பு ஒரு கிராம் மெத் ஆப்கன் பணத்தில் 1,500 ஆப்கானிக்கு (15 டாலர்கள்) கிடைத்தது. இப்போது 30 - 40 ஆப்கானியிலேயே கிடைக்கிறது (0.31 டாலர் முதல் 0.41 டாலர் வரை)."
 
அவர்களின் நிலைமை மோசமாக உள்ளது. சிலர் கழிவுநீர் குழாய்கள் உள்ளே வாழ்கின்றனர். "நாங்கள் வாழ்வது போன்று, நாய் கூட வாழ முடியாது," என்கிறார் இன்னொருவர்.
 
தாலிபன்கள் பெரும்பாலான சமயங்களில் இவர்களை சுற்றி வளைத்து, வசதியில்லாத மறுவாழ்வு மையங்களுக்கு அழைத்துச் செல்வார்கள், ஆனால், அவர்களில் பெரும்பாலானோர் மீண்டும் இங்கேயே வந்துவிடுவார்கள் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
 
இப்போதைக்கு, ஆப்கானிஸ்தானிலும், வெளிநாடுகளிலும் அதிகமான போதைப்பொருட்கள் தெருக்களில் கிடைக்கத் தயாராக உள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்