கொரோனா அரசு நிவாரணத்தில் பொறிக்கப்படும் டிரம்பின் பெயர்
வியாழன், 16 ஏப்ரல் 2020 (14:04 IST)
கொரோனா அரசு நிவாரணத்தில் அந்த நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்பின் பெயர் பொறிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸால் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள லட்சக்கணக்கான அமெரிக்கர்களுக்கு அனுப்பப்படவுள்ள காசோலையில், அந்த நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்பின் பெயர் பொறிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் மைய அரசினால் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணத்தில் அமெரிக்க அதிபர் ஒருவரின் பெயர் பொறிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த புதிய செயல்பாட்டின் காரணமாக மக்களுக்கு நிவாரணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும் என்ற குற்றச்சாட்டுக்கு கருவூல அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட இரண்டு ட்ரில்லியன் டாலர்கள் நிவாரண தொகுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது. கோவிட்-19 நோய்த்தொற்றின் காரணமாக கடந்த மாதம் மட்டும் அமெரிக்காவில் சுமார் 1.6 கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.