இளையராஜா பிறந்தநாள்: ரசிகனுக்காக இசை உலகம் படைத்த மந்திரக்காரர்!

வெள்ளி, 2 ஜூன் 2023 (11:23 IST)
இளையராஜா பிறந்தநாள்: ரசிகனுக்காக இசை உலகம் படைத்த மந்திரக்காரர்
 
"தனது ரசிகர்களுக்காக தனி இசை உலகத்தை படைத்தவர் இளையராஜா" என்கிறார் அவரது தீவிர ரசிகர் ஒருவர். 80களில் அவரது பாடலுக்கு உருகியவர்கள் இதை அப்படியே ஏற்கக்கூடும்.
 
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 1,000 திரைப்படங்களுக்கும் மேல் இசையமைத்து, 5 தேசிய விருதுகள், குடிமை மரியாதைகள், கணக்கில்லா ஃபிலிம் ஃபேர் விருதுகள், சர்வேதச விருதுகள் என வாங்கி குவித்து அனைத்து தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்த்து, தமிழ் சினிமாவின் புகழை உலகறியச் செய்த இளைய ராஜாவின் 80-ஆம் பிறந்த நாள் இன்று.
 
உலகில் எந்த மொழி சினிமாவிலும் இல்லாத அளவிற்கு இந்திய சினிமாவில் மட்டுமே பாடல்கள் பெரும் எண்ணிக்கையிலிருந்தன. வரலாற்றைத் திருப்பி பார்க்கும்போது, இந்திய சினிமாவில் பேசா மொழி திரைப்படங்களின் கால கட்டம் முடிந்து, பேசும் படங்களாக மாறத் தொடங்கியிருந்தபோது, திரையில் சர்வமும் சங்கீதம் என மாறிப் போனது.
 
”இந்திர சபா” என்ற திரைப்படத்தில் சுமார் 72 பாடல்கள் இருந்தன. ஒரு காலகட்டத்தில், மக்களை கவர திரைப்பட போஸ்டர்களில் “ நூற்றுக்கு நூறு பேசும், பாடும், ஆடும் படம்” என்றெல்லாம் விளம்பர நோட்டீஸ்களில் அச்சிட்டனர். அப்படியே கால ஓட்டத்தில், 70 பாடல்கள் என்ற எண்ணிக்கை மெல்ல மெல்ல கரைந்து 1970-களில் 5 பாடல்களாகக் குறைந்தது.
 
பின்னர், திரைப்படங்களில் இசைக்கான வரையறை எப்படி மாறியதென்றால், அது மக்களை உணர்வு ரீதியாக ஒப்பீட்டளவில் அவர்களோடு கலந்து கதாபாத்திரத்தோடு பயணிக்கச் செய்ய வேண்டும் என்றானது.
அப்படி, இளையராஜா என்ற இளைஞர் 1976-இல் முதல் முறையாக அன்னக்கிளி திரைப்படத்தில், ”மச்சானைப் பார்த்தீங்களா?” என்ற பாடல் மூலம் கடைக் கோடி ரசிகனையும் தனது முதல் திரைப்படத்திலேயே அவரது பாடலை முணுமுணுக்க வைத்தார். அதுவரையில், கிராமிய பாடல்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்காத தமிழ் சினிமா முதன் முதலாக, கிராமிய பாடலுடன் இருந்த பாஸ் கிடாருக்கும், கார்ட் ப்ராக்ரன்ஷீற்கும் சொக்கி தான் போனது.
 
“The more Ethnic you are, the more international you become” என்பார்களே அதைப் போல, இளையராஜா உறுமி சத்தம், பறை சத்தம், நாதஸ்வர சத்தம், மத்தள சத்தம், பறவைகளின் சத்தம், இலைகளின் உரசல், கொலுசு சத்தம், வலையல் சிணுங்கும் சத்தம், குழந்தையின் அழுகை, குலவை சத்தம், கும்மி சத்தம் என அதுவரை தமிழ் மண்ணோடும், தமிழ் மக்களின் வாழ்வோடும் பின்னிப் பிணைந்த சத்தங்களை வைத்து, உணர்வுகளோடு இழைத்து, ஒரு குட்டி உலகத்தை பாடல்களால் படைத்து ரசிகனுக்கு பரிசளிக்க ஆரம்பித்தார். அவனும் அழுகையில் தேற்ற ஆளில்லாத போது, நம்பிக்கையிழக்கும்போது, காதல் தோல்வியின் போது, தங்கையின் சடங்கு விழாவின் போது, கல்யாணம், காது, குத்து, திருவிழா என கடந்த நாற்பது ஆண்டுகளாக அவரது உலகிற்குள் சென்று அண்டிக் கொண்டு மீண்டும் நிஜ உலகிற்கு பயணப்படுகிறான்.
 
தமிழ் சமூகத்தையும், உலகத்திலுள்ள அத்தனை தமிழ் மக்களையும் தன் இசையால் ஆற்றுப்படுத்தி, வருடி கொடுத்து, கொண்டாட்ட மனநிலையில் கூச்சலிட வைத்து, காதல் தோல்வியில் அருகில் அமர்ந்து கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜாவின் 80-ஆம் பிறந்த நாளான இன்று அவருடன் பணிபுரிந்த சில திரை ஆளுமைகளுடன் பிபிசி தமிழுக்காக அவரைப் பற்றிப் பேசினோம்.
 
நடிகர்கள் ஆர். முத்துராமன், சிவாஜி, ஜெய்சங்கர், ரஜினி, கமல் உட்பட பெரிய நடிகர்களை வைத்து இதுவரை 72 படங்களை இயக்கியவரும், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தை வணிக ரீதியாக வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்ற இயக்குநர் எஸ்.பி. முத்துராமனிடம் இசையமைப்பாளர் இளையராஜாவுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசினோம்.
 
"இசையால் கதை முழுவதையும் சொல்லி முடிப்பார்"
“ என்னுடைய 72 திரைப்படங்களில் சுமார் 37 திரைப்படங்களில் நான் இளையராஜாவுடன் பணியாற்றியுள்ளேன். அதில், முரட்டுக் காளை திரைப்படத்தில் வரும் ”பொதுவாக என் மனசு தங்கம்” பாடலும், சகலகலா வல்லவன் திரைப்படத்தில் வரும் “ஹேப்பி நியூ இயர்” பாடலும் சூப்பர் டூப்பர் ஹிட். அதுமட்டுமல்லாமல் இன்றளவும் மக்கள் மனதை கவர்ந்த பாடல்கள் என்று கூறினாலும் தகும். ஒரு காலகட்டத்தில் நான் ஒரே நேரத்தில் இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன். அதனால், நான் என் திரைப்படங்களின் ரீ ரெக்கார்டிங்கில் உட்கார முடியாது. அந்த மாதிரி நேரங்களில் நான் என் வேலைகளை இளையராஜாவை நம்பி அவர் தலையில் போட்டு விடுவேன். நான் படப்பிடிப்பு முடிந்து திரும்பி வரும்போது, நான் நினைத்ததை விடவும் சிறப்பாக முடித்து வைத்திருப்பார்.” என்றார் அவர்.
 
இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் இளையராஜாவுடன் மறக்க முடியாத சம்பவமாக எங்கேயோ கேட்ட குரல் திரைப்படத்தைக் குறிப்பிடுகிறார்.
 
“எங்கேயோ கேட்ட குரல் திரைப்படத்தில், கதையின் நாயகி கணவனை உதறித் தள்ளி விட்டு, அவள் தனது முதலாளியின் மகனை நம்பி வீட்டை விட்டு செல்வாள். அவள் வீட்டுப் படியைத் தாண்டும்போது இளையராஜா அந்த இடத்தில் கல்யாண மந்திரத்தை ரீ ரெக்கார்ட் செய்தார். எனக்கு இயக்குநராக மெய்சிலிர்த்து விட்டது. கதை நாயகி திருமணம் என்ற பந்தத்தை உதறித்தள்ளி விட்டு, அதன் புனிதத்தன்மையை சீர்குலைப்பது தான் கதை. இளைய ராஜா அதனை மிகவும் சுலபமாக மொத்த கதையையும் தன் இசையாலே சொல்லி முடித்து விட்டார்.”
 
மேலும், அவர் இளையராஜா பற்றி பகிரும்போது, “ஒரு கால கட்டத்தில் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் இளையராஜாவின் தேதிக்காக வரிசையில் காத்துக் கொண்டிருப்பார்கள். நாங்கள் எங்கள் படத்தின் திரைக்கதையாசிரியரும், தயாரிப்பாளருமான பஞ்சு அருணாச்சலத்தின் மூலம் அவரிடமிருந்து மிகச் சுலபமாக தேதியை முன் கூட்டியே தெளிவான திட்டமிடுதலோடு இருப்பதால் வாங்கி விடுவோம். நாங்கள் எப்பொழுதும் அவருடன் நல்ல நட்பு முறையிலேயே இருந்தோம். போட்டி நிறைந்த இத்திரைத்துறையில் இளையராஜா 1,000 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து, இன்னும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என்பது எவ்வளவு பெரிய சாதனை. ஒவ்வொரு திரைப்படத்தையும் முழு ஈடுபாடுடனும், கவனத்துடனும் இளையராஜா செய்து முடிப்பார். நாம் அவரை நம்முடன் ஒப்பிட்டுப் பார்த்தால் தான் நாம் எவ்வளவு நேரத்தை வீணடிக்கிறோம் என்பது புரியும்” என்றார்.
 
"பிணக்குகள் வரும்; ஆனால் சேர்ந்து விடுவோம்"
இசைஞானி இளையராஜாவின் நீண்ட கால நண்பரும், கருத்தம்மா, முதல் மரியாதை உள்ளிட்ட திரைப்படங்களுக்கு தேசிய விருதினை வென்றவருமான இயக்குனர் இயம் பாரதிராஜாவை பிபிசி தமிழுக்காக தொடர்பு கொண்டு பேசினோம்.
 
“ நான் பண்ணைபுரத்தில் இருக்கும்போது அவரது உடன்பிறப்பு பாஸ்கர் எனக்கு நண்பர். அப்படியே இளையராஜாவும் எனக்கு நண்பரானார். கங்கை அமரன், இளைய ராஜா, பாஸ்கர் என அனைவரும் இணைந்து நாடகம் நடத்துவோம். சென்னையில் நான் பெட்ரோல் பங்கில் வேலை செய்து கொண்டிருந்தபோது, என்னை நம்பி இவர்கள் மூவரும் சென்னைக்கு வந்து விட்டார்கள். நான் அதிர்ச்சியடைந்து, நானே இங்கு மிகவும் சிரமப்படுகிறேன், நீங்கள் ஏன் என்னை நம்பி வந்தீர்கள் என செல்லமாக கடிந்து கொண்டேன். பின்னர் நாங்கள் அனைவரும் மாம்பலத்தில் ஒரு வீடு எடுத்து தங்கினோம். அது ஒரு முழுமை பெறாத கட்டிடமும் கூட. அதெல்லாம், என்னால் மறக்க முடியாத நினைவுகள். எனக்கும் இளையராஜாவுக்கும் சிறு, சிறு பிணக்குகள் வரும். மீண்டும் இணைந்து விடுவோம்.” என்றார்.
 
மேலும், அவர் கூறும்போது, “எனக்கும் இளைய ராஜாவுக்குமான புரிதல் கணவனுக்கும், மனைவிக்கும் உள்ள புரிதல் போன்றது. நான் சில காட்சிகளை இளைய ராஜாவின் இசை நிரப்புமென மனக்கணக்கு போட்டு படம்பிடிப்பேன். இளைய ராஜாவும் அதனை சரியாக கண்டுபிடித்து, இது நான் இசையமைக்க வேண்டுமென நீ பிரத்யேகமாக எடுத்த காட்சிகள் தானே எனக் கூறிக் கூறி சிரித்துக் கொண்டே வாசிக்க ஆரம்பிப்பார். இப்போதும் எங்களுக்குள் எதுவும் மாறவில்லை. அப்படியே தான் இருக்கிறது,” என்றார்.
"அவர் என்றும் இளமையானவர்"
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்து, 5 தேசிய விருதுகள், இயக்கிய அத்தனை திரைப்படங்களும் மெகா ஹிட் என இந்திய அளவில் கவனத்தை திருப்பிய இயக்குநர் வெற்றி மாறன் அவர்கள் பிபிசி தமிழுக்காக விடுதலை திரைப்படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்தது பற்றி பேசும்போது, “அவர் இந்த வயதிலும் சினிமா மீதும், இசை மீதும் காதலோடு இயங்குகிறார் எனக் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால் அவருக்கு வயதாகி விட்டது என்றல்லாம் கூறவே முடியாது.” என்றார்.
“அவர் இசைக் குறிப்புகள் எழுதும்போதும் சரி, இசைக் கருவிகளை இசைக்கும் வேகத்திலும் சரி இப்போதும் இளமையானவராகவே இருக்கிறார். விடுதலை திரைப்படத்திற்கு அவர் இசையமைத்தால் அத்திரைப்படம் சிறப்பாக இருக்கும் என்று எண்ணியதாலேயே நான் அவரை அணுகினேன். அவரிடம் இருக்கும் உன்னதமான குணங்களில் ஒன்று, அவருக்குப் பிடித்தது, பிடிக்காதது என சொந்த விருப்பு, வெறுப்புகளெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, ஒரு திரைப்படத்திற்கு எது தேவையென பார்த்து அதில் உண்மையாக இருப்பார். எல்லோராலும் அப்படி இருக்க முடியாது. அவரது குரலில் எனக்கு பாடல்களைக் கேட்க பிடிக்கும், அவர் விடுதலை திரைப்படத்தில் பாடினால் நன்றாக இருக்கும் என கேட்டுக் கொண்டேன். அதன்படியே “காட்டு மல்லி” பாடலும் பட்டி தொட்டியெல்லாம் சென்று சேர்ந்தது” என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்